மற்றவர்களை தன் எண்ண அலைவரிசைக்கேற்ப மாற்றுவது எப்படி?
பொதுவாக நம்மில் பலர் ஒத்த எண்ண அலைவரிசையோடு இருப்பதில்லை, குடும்பத்தில் ஒன்றாக வாழ்க்கை நடத்துகிற கணவன் மனைவிக்குள்ளும், ஒத்த எண்ண அலைவரிசை இல்லாத காரணத்தினால் விவாகரத்துக்கள் பெருகி வருகிற காலம் இது, இதே காரணத்தினால் நண்பர்களுக்குள்ளும் விரிசல் ஏற்படுவதுண்டு, உறவுக்குள்ளும் இதே கதை தான், ஒரு நிறுவனத்தில் நிறுவனத் தலைவருக்கும் நிர்வாக பங்கு தாரருக்கும் பணியிலுள்ள அதிகாரிகளுக்கும் இடையே ஒத்த கருத்துக்கள் இல்லாமல் போனால் அந்த நிறுவனத்தின் வளர்ச்சி குன்றும்.
எதிர் எண்ண அலைவரிசை கொண்டவர்களை தன் எண்ண அலைவரிசைக்கேற்ப மாற்றிக் கொள்ளும் சாமர்த்தியம், தன் குணங்களை சூழ்நிலைககேற்ப மாற்றிக் கொள்கிறவர்களுக்கு சாத்தியப்படும், மாற்றுக் கருத்து உள்ளவர்களை தன் வழிக்கு கொண்டு வர சில வழிமுறைகள் நாம் பின்பற்றியாக வேண்டும்,
1) விவாதங்களை கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்.
ஒருவர் ஒரு கருத்தை பதிவிடும் போது அதைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் எடுத்த எடுப்பிலேயே அதை விவாதப் பொருளாக எடுத்துக் கொள்ளக் கூடாது, ஒரு நிமிடம் நிதானித்து, விவாதத்தை தவிர்த்து, அந்த கருத்து உங்களுக்கு ஒத்ததாக இல்லையென்றால் அதை வலியுறுத்தாமல் வேறு விஷயத்திற்கு கவனத்தை திசை திருப்ப வேண்டும், மனக்கசப்புக்கு வாய்ப்புக்கள் இல்லாமல் போகும், “ யாரையும் பழி சொல்லாமல் குறை சொல்லாமல் இருப்பதே மக்களை கவர்வதற்கு வழி ”.
2) மற்றவரின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.
ஒரு மனிதன் எடுக்கக்கூடிய முடிவுகளில் 55 சதவீதம் மட்டுமே சரியானதாக இருக்கிறது. என்று ஆய்வுகள் கூறுகின்றன, 45 சதவீதம் தவறான முடிவுகள் எடுக்கப்படுகின்றன, இப்படி நாமே 45 சதவீதம் தவறுகள் செய்கிற போது, மற்றவர்களின் கருத்துக்களை தவறு என்று சொல்ல நமக்கு எந்த தார்மீக உரிமைளயும் கிடையாது, இப்படி இருக்கஒருவர் சொல்கிற கருத்தை உடனடியாக தவறு என்று மறுத்தல் நியாயம் அல்ல, அவருடைய கருத்து தவறு என்று சொல்லும் போது அவர் மனம் காயப்படுகிறது, அவருடைய புத்திகூர்மைக்கும், பெருமைக்கும், சுயமரியாதைக்கும், அது இழுக்காக அமைகிறது, காயம் பட்ட அவர் எதிர் தாக்குதலுக்கு நேரம் பார்த்துக் கொண்டிருப்பார், தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு அவருக்கு இல்லாமல் போய்விடுகிறது, இதனால் விரிசல்கள் அதிகமாகும், வெறுப்புக்கள் கூடும், ஒத்த கருத்து உருவாவது சாத்தியம் இல்லாமல் போகும்.
அடுத்தவர்கள் தவறு செய்யும் போது, அவர் எவ்வளவு தவறுகள் செய்கிறார் என்று கணக்கிட்டுக் கொண்டு இருக்காதீர்கள், அந்த தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்புக் கொடுங்கள், அவருக்கு ஒத்துழையுங்கள்.
3) தன்னுடைய தவறை மனப்பூர்வமாக ஒத்துக் கொள்ள வேண்டும்.
நம்முடைய தவறை மனப்பூர்வமாக ஒத்துக் கொண்டால் அங்கே சுமுகமான சூழ்நிலை உண்டாகும், உங்களுடைய பெருந்தன்மை வெளல்ப்படும், மாற்றுக்கருத்தையும் ஏற்றுக் கொள்ளும். மனப்பக்குவம் உண்டாகும், எதிரில் உள்ளவர் உங்களுடைய பெருந்தன்மையை எண்ணி உங்களின் அன்பு வட்டத்திற்குள் வர வழி கிடைக்கும்.
4) தன் கருத்துக்களை நேசத்துடன் முன்வைக்க வேண்டும்.
உங்களுடைய கருத்தை ஒரு இனம் புரியாத நேசத்துடன் முன்வைக்கும் போது அது நேசத்துடன் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. பகைமை தவிர்க்கப்படுகிறது. உங்களுடைய கருத்துக்கள் அதே அளவு உண்மையை மற்றவர்கள் புரிந்து கொள்ள ஏதுவாகிறது, உங்கள் எண்ண அலைவரிசைக்கேற்ப அவர்களை இழுக்க முடிகிறது.
5) மற்றவர்களை உங்கள் கருத்துக்கு ‘ஆமாம் ’ போட வைக்க வேண்டும்.
நீங்கள் சொல்லுகிற விதம், அந்த கருத்தை முன் வைக்கிற பாங்கு, உங்களின் உடல் மொழி, உங்களுடைய வாய் மொழி அத்தனையும் மற்றவர்களை பிரம்மிப்புடன்; பார்க்க வையுங்கள், அந்த மயக்கத்தில் அவர்கள் உங்களின் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் ‘ஆமாம்’ போடுவார்கள்.
6) மற்றவர்களையும் முழுமையாக பேச அனுமதிக்க வேண்டும்
உங்கள் பேச்சை குறைத்துக் கொண்டு மற்றவர்களை முழுமையாக பேச அனுமதியுங்கள், இடையே குறுக்கீடு செய்யாதீர்கள், மௌனமாக கேட்டுக் கொண்டிருங்கள், அவர்கள் எத்தனை நேரம் எடுத்துக் கொண்டாலும் சரி அமைதியை கைப்பிடிளயுங்கள், உங்களின் அமைதியும், மௌனமும் அவர்கள் மனதை முழுமையாக மாற்றும்.
7) இது உங்களின் ‘ஐடியா ’ என்று பாராட்ட வேண்டும்.
ஒருவர் தருகிற நல்ல யோசனை வெற்றி பெற்றுவிட்டால் “ நீங்கள் தந்த யோசனைதான் இந்த வெற்றியை தந்திருக்கிறது, இது உங்களின் வெற்றி , இந்த வெற்றி நளல்ளறுவனத்தை நிலைநிறுத்தி இருக்கிறது ”என்று மனமார பாராட்டுங்கள் . அவர்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும், பின்னர் அதிசயத்தைப் பாருங்கள், எது சொன்னாலும் உங்களை ஆமோதிப்பார்கள்.
8) மற்றவர்கள் பார்வையிலிருந்து பார்க்க வேண்டும்.
ஒவ்வொரு செயலுக்கும் இன்னொரு கோணம், இன்னொரு பார்வை, இன்னொரு தீர்வு என்று உண்டு, எதிர்கொள்ளும் பிரச்சனையில் மற்றவர்களின் பார்வைக்கு மதிப்பளியுங்கள், உங்களுடைய பார்வையை விட மற்றவர்களின் பார்வை அதிக பயன் உள்ளது என்று தெரிந்தால் அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளுங்கள், எண்ண அலைகள் உங்கள் பக்கம் வரும்.
9) மற்றவர்களின் விருப்பத்திற்கு உடன்பட வேண்டும;
ஒரு காரியத்தில் மற்றவர்கள் என்ன விரும்ளபுகிறார்கள் என்று கணியுங்கள், அவர்கள் விருப்பமும் உங்கள் விருப்பமும், ஒன்றாக இருந்தால் பிரச்சனை இல்லை, வெவ்வேறாக இருந்தால் விட்டுக் கொடுக்க தயங்காதீர்கள், அவர்களின் விருப்பத்திற்கு பரிவு காட்டுங்கள். வேடன் தான் பிடிக்கப் போகும் பறவை அல்லது விலங்கினைப் போல ஒலி எழுப்பி அருகி;ல் வரச்செய்து பிடிப்பான், அது போல் நாம் யாரை வசப்படுத்த விரும்புகிறோமோ அவருக்கு பிடித்ததை செய்து அவரை வசப்படுத்த வேண்டும்.
10) உயர்ந்த குறிக்கோளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
மற்றவர்களுடைய கருத்துக்கள் உயர்ந்த குறிக்கோளாக இருந்தால் மறுப்புச் சொல்லாமல் ஒப்புக் கொள்ளுங்கள். ஒரு நல்ல காரியத்திற்கு உயர்ந்த குறிக்கோளுக்காக மனம் உவந்து ஒத்துழைப்பு தாருங்கள், அதனால் உங்களுக்கு நன்மைதான் கிடைக்கும்.
11) ஒரு கருத்தை ‘ கதை ’ வடிவாக நடித்துக் காட்ட வேண்டும். (Dramatization).
ஒரு கருத்தை முன்வைக்கும் போது எழுத்தளவிலோ, பேச்சளவிலோ வைக்காமல், அதனால் ஏற்படும் நிகழ்வுகள், பலன்கள், சமாளிக்கும் விதம், அதன் எதிர்விளைவுகள் இவைகளை எல்லாம் ஒரு திரைப்பட கதாசிரியர், கதை சொல்வதைப் போல நடிப்போடு: சொல்லிக் காட்டுங்கள், உங்கள் உடல் மொழி ஒத்துழைக்கட்டும், அக்கருத்து எளிதாக மற்றவர்களுக்கு புரியும். அவர்களை கவர இது ஒரு புதுமையான வழி.
12) ‘சரி’ என்று பட்டால் சவால் விடத் தயங்காமல் இருத்தல் வேண்டும்
சில நேரங்களில், சில பிரச்சனைகளை எதிர் கொள்ளும்போது சவால் விட தயாராகுங்கள், இதை நிரூபித்துக்காட்டு;கிறேன் என்று சொல்லுங்கள் , இவை இவை சாட்சிகளாய் உள்ளன என்று அறுதியிட்டுச் சொல்லுங்கள், சில நேரங்களில் உண்மைளயும் பொய்யாகும், பொய்யும் உண்மையாகும், சூழ்நிலைகளுக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ளுங்கள், தைரியமாக உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள், மற்றவர்கள் உங்கள் கருத்துக்களை ஆமோதிக்கும் நிலை வந்து விட்டால் அடித்துப் பேசுங்கள்.
முல்லா நசுரூதீன் கதை முற்றிலும் ஒத்துப் போகும், தன் பக்கத்து வீட்டுக்காரர்கள் கருப்பு உடை அணிந்தது கண்டு காரணம் கேட்டார் முல்லா.
“எங்கள் தாத்தா இறந்து விட்டார், அதற்கு துக்கம் அனுஷ்டிக்கத்தான் இந்த கருப்பு உடையை அணிந்திருக்கிறோம்” என்றார்கள் அவர்கள். அடுத்த நாள் முல்லா வீட்டு கோழி குஞ்சுகள் கழுத்தில் எல்லாம் கருப்பு ரிப்பன் தொங்கி கொண்டிருந்தது, “ ஏன்? ” என்று கேட்டார்கள்.
“இந்த குஞ்சுகள் தாயை இழந்து விட்டன, அதனால் கருப்பு ரிப்பனை கட்டிக் கொண்டு துக்கம் அனுஷ்டிக்கின்றன, “அப்படியா! அதன் தாய் எப்படி இறந்தது? ”
“என் மனைவி இன்று அதை கறி சமைத்து விட்டாள் ” என்றார் முல்லா, பக்கத்து வீட்டிற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டார் முல்லா,
மேலே சொன்ன தீர்வுகளை பின்பற்றினால் மற்றவர்களை தன் எண்ண அலைவரிசைக்கேற்ப மாற்றிக் கொள்ள முற்றிலும் உதவும், மாற்றங்கள் மாறாதது, மாற்றங்களுக்கேற்ப நம்மையும் மாற்றிக் கொள்ள வேண்டும்,காற்று உள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும், அந்த மாய மந்திரம் உங்களுக்கு கைகூடும், அணுசரனையும், அரவணைப்பும், அன்பு காட்டுதலும் , மறுத்துப் பேசாமல் இருப்பதும் , தன் தவறை ஒத்துக் கொள்வதும், மற்றவர்கள் கருத்துக்கு மதிப்பு அளிப்பதும் மகத்தான வெற்றியின் சூத்திரங்களாகும்.
இந்த இதழை மேலும்
0 comments Posted in Articles



