சாதனை கண்டுபிடிப்பு…! சரித்திரத்தின் உயர்த்துடிப்பு…!
“TEAM OJAS”2018 எலட்ரிக் ரேஸ் கார் சாதிப்பாளர்கள்
வி.ஐ.டி. பல்கலைக்கழக மாணவர்கள், வேலூர்.
எண்ணிய முடித்தல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
என்பது மகாகவி பாரதியின் வரிகளாகும் . ஒருவர் ஒரு குறிக்கோளை நோக்கி பயணிக்கிறார் என்றால், அதில் அவருக்கு எடுத்த உடனே வெற்றி கிடைத்துவிடாது அதற்கு முயற்சிக்க வேண்டும். அந்த முயற்சி சாதாரண முயற்சியாக இல்லாமல் சரித்திர முயற்சியாக இருக்க வேண்டும். அப்போது தான் இந்த உலகம் வெற்றியாளர்களைக் கொண்டாடும். அந்த வகையில் இம்மாணவர்கள் ஒரு சரித்திர கண்டுபிடிப்பாளர்களே.
இந்த உலகம் ஒரு சாதனைக்களம். இங்கு சாதிப்பதற்கும் சரித்திரம் படைப்பதற்கும் எண்ணற்ற இடங்களும் தடங்களும் இருக்கிறது. அதில் சரியாக பயணித்து வெற்றி பெறுபவர்களே வெற்றியாளர்களாக ஆகிறார்கள். அப்படிப்பட்ட சாதனைக்குச் சொந்தக்காரர்கள் இவர்கள்.
இந்த உலகம் உங்களைக் கொண்டாட வேண்டுமென்றால் இந்த உலகத்தின் நன்மைக்காக நீங்கள் ஏதேனும் ஒன்றை செய்திருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்த வகையில் விஐடி பல்கலைக்கழக மாணவர்கள் “TEAM OJAS”2018 எலட்ரிக் ரேஸ் கார் வடிவமைப்பை தயாரித்து சாதனைப்புரிந்திருக்கிறார்கள். அவர்களின் நேர்முகத்தை இனி காண்போம்.
கே: OJAS 2018 என்பது என்ன?
விஐடி பல்கலைக்கழகத்தில் பல்வேறுபட்ட துறைகளும் பல பிரிவுகளும் இருக்கிறது. அதில் எல்லாத் துறையிலும் OJAS குழு உண்டு. OJAS என்ற சொல்லுக்கு சக்தி வலிமை என்று பொருள். அதனாலே இப்பெயர் சூட்டப்பட்டது. OJAS என்ற குழுவை 2012 ஆம் ஆண்டு தொடங்கினார்கள் தொடங்கிய சில நாட்களிலேயே எங்களின் கண்டுபிடிப்பை பரவலாக்க நினைத்தோம். அனைவரிடத்திலும் புதிய புதிய யோசனைகள், ஆலோசனைகள் வந்தது, அனைவரும் ஒன்று கூடி பரிசீலிரித்து ரேஸ் கார் தயாரிக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தோம். ஆனால் நம்முடைய கண்டுபிடிப்பு எவ்வித சுற்றுப்புற மாசுபாடுகளும் ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். 2012 முதல் இந்த ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற காரை தயாரித்து வருகிறோம்.
கே: இந்த கண்டுபிடிப்பின் உரிய நோக்கம் யாது?
இயற்கைக்கு இம்மியளவும் பாதிப்பு ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும் என்பது மட்டுமே எங்களின் நோக்கமாக இருக்கிறது. தற்போது இயற்கைக்கு மாறாக எத்தனையோ செயல்கள் நடந்து கொண்டுயிருக்கிறது. அதையே நாங்களும் செய்து மேலும் இயற்கையை மாசுபடுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.
கார் ரேசிங் என்பது அனைவரும் விரும்பிப் பார்க்கும் ஒரு பொழுது போக்கு விளையாட்டாக இருக்கிறது. அப்படியிருக்கும் போது இதன் பார்வையாளர்களும் அதிகம் என்பதால் இதை விளம்பரப்படுத்த நிறைய செலவிடுவார்கள். ஒவ்வொரு காருக்கும் நிறைய எரிபொருள் தேவைப்படும். ஒரு வாகனம் என்றால் பெரிதாக தெரியாது. பங்கேற்கும் அத்துனை வாகனத்திற்கும் ஒரு மாதிரியான பெட்ரோல் தேவைப்படுகிறது. அத்துனை வாகனங்களும் ஒரே நேரத்தில் புறப்படும் போது நிறைய இயற்கை மாசுபாடுகள் நிச்சயமாக ஏற்படும்.
இதன் மூலம் வெளியேறும் காற்றால் இயற்கைக்கு மட்டும் இல்லாமல் மனிதர்களும் பல்வேறு பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படுகிறது.
இந்நிலை முற்றிலுமாக மாறவேண்டும் என்பதால் தான் மின்சாரத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த வகையான ரேஸ் கார் தயாரித்தோம். இதன் மூலம் எரிபொருள் சேமிக்கவும் சுற்றுச்சுழல் சீரழிவிலிருந்து பாதுகாக்கவும் முடியும். எங்கள் நோக்கத்தை இதன் மூலம் சரியாகப் பயன்படுத்தி வருகிறோம்.
கே: இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் உங்களுக்கு ஏற்பட்ட மாறுதல்கள் என்ன?
பொதுவாக கல்லூரி என்றாலே படித்து பட்டம் பெற வேண்டும் என்பதாகவே இருக்கும். ஆனால் எங்கள் கல்லூரியில் படிப்பிற்கு கொடுக்கும் அதே முக்கியத்துவம் கண்டுபிடிப்புகளுக்கும் கொடுப்பார்கள். அவர்கள் தரும் ஊக்கம், எங்களின் ஆர்வம் இரண்டும் சேர்ந்து தான் எங்களின் கண்டுபிடிப்பிற்கு பெரும் உந்து கோலாக இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை புத்தகப்படிப்பு மட்டும் எதிர்கால வாழ்க்கைக்கு துணைபுரியாது என்று நினைக்கிறேன்.
ஒரு காரின் வடிவமைப்பை தெரிந்து கொண்டு அந்தக் காரை எவ்வாறு உருவாக்க வேண்டும். எந்தப் பொருளை எந்த இடத்தில் பொறுத்துவது, ஒரு சிறிய ஸ்குரு தொடங்கி இன்ஜின் வரை எல்லாமே யாருடைய துணையுமின்றி நாங்களே ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வதால் எங்களால் எதையும் செய்ய முடியும் உத்வேகம் கிடைக்கிறது.
இது அப்போதைய கண்டுபிடிப்பிடிப்பிற்கு மட்டும் என்று நினைக்காமல் இதை நம் எதிர்கால வாழ்விற்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தல் வேண்டும்.
கே: உங்கள் சாதிப்பினை அடுத்தகட்டத்திற்கு எப்படி கொண்டு செல்ல உள்ளீர்கள்?
SAE – Society Automobile Engineers என்ற அமைப்பு ஒன்று இருக்கிறது. இந்த அமைப்பில் புதியதாகத் தயாரிக்கும் கார்களை பதிவு செய்தல் வேண்டும். அவர்கள் அனுமதி அளித்த பின்னரே இப்படிப்பட்ட கார்கள் ரேசிங் செல்ல முடியும்
மாணவர்களால் புதிதாகத் தயாரிக்கப்படும் இயந்திரங்களுக்கு என்று ஸ்போர்ட் போட்டி ஒன்று நடைபெறும். இப்போட்டிக்கு உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகத்திலிருந்து தாங்கள் தயாரித்த கார்களுடன் போட்டியாளர்கள் பங்கேற்பார்கள். அவ்வாறு மாணவர்களின் கண்டுபிடிப்பினை பாராட்டி அவர்களை கௌரவம் படுத்தும் விதமாக பரிசுகளும், பாராட்டுக்களும், உந்துதலும் ஊக்கமும் கொடுத்து வருகிறார்கள். இவர்களின் ஊக்கம் எங்களைப் போன்ற சாதிக்கத்துடிப்பவர்களுக்கு ஒரு பெரும் மகிழ்வைக் கொடுக்கும் என்று சொன்னால் அது மிகையல்ல.
கே: OJAS 2018 கடந்து வந்த பாதையைப்பற்றி சொல்லுங்கள்?
இந்தியாவில் மாணவர்களுக்கு என்று பார்முலா மின்சார வாகன கண்டுபிடிப்பு என்று இருக்கிறது. 2012 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த குழு தொடர்ந்து ஏழாம் ஆண்டில் காலெடுத்து வைக்கிறது. கோவையில் நடைபெற்ற பார்முலா கிரின் மற்றும் பார்முலா பாரத் ஆகிய போட்டிகளில் பங்கேற்று வெற்றிக் கனியை ருசித்தோம். இந்த வெற்றியை கொண்டாடிய கையோடு இத்தாலியில் நடைபெற்ற பார்முலா போட்டியில் பங்கேற்று சிறப்பான ஒரு இடத்தைப் பெற்றோம்.
எங்கள் அணியில் பணியாற்றும் ஒவ்வொருக்கென்று ஒரு தனிப் பொறுப்பைக் கொடுத்து அதை அவர்கள் கவனிக்க வேண்டும் என்று நிபந்தனை இட்டுவிடுவோம். அனைவரும் அவர்களுக்குரிய பணிகளை மிகவும் நேசித்து செய்வார்கள் இதனாலே எங்களால் எங்கும் எதிலும் வெற்றி பெற முடிகிறது.
எங்களின் முதன்மைன நோக்கமே மோட்டார்ஸ்போர்ட் அணியாகத்திகழ வேண்டும் என்பது தான். எந்த அணியும் எடுக்க துணியாத முயற்சியை எங்கள் அணி எடுத்தது. முற்றிலும் மின்சாரத்தை மையமாகக் கொண்டு ஒரு காரை உருவாக்கினோம். இது எங்கள் வெற்றியின் மைல்கல் சாதனையாகும்.
2014 ஆம் ஆண்டு ஒஜஸின் வாகனம் என்ற பெயரை E 619 என்று பெயர் மாற்றப்பட்டது. இது எடையில் மிகக்குறைவாக இருந்தது. இதை ஜெர்மனியில் நடந்த பார்முலா பந்தயத்திற்கு தேர்வு செய்யப்பட்டது. இந்தக் காரை 2016 ஆம் ஆண்டு சில இயந்திர வேலைபாடுகள் செய்து 2017 ஆம் ஆண்டு முற்றிலும் மாறுபட்ட வாகனமாக TOR 17 என்று பெயரிட்டு கோவையில் நடந்த பார்முலா கிரின் பந்தியத்தில் உலா விட்டோம். இந்தப் போட்டியில் எங்கள் கார் பல விருதுகளைப் பெற்றது. இதை பெரும் சாதனையாக நாங்கள் கருதுகிறோம்.
கே: பெற்ற விருதுகள் குறித்துச் சொல்லுங்கள்?
வடிவமைப்பில் முதலிடம்
திட்டமிடலில் முதலிடம்
வேக வளர்ச்சியில் முதலிடம்
வணிக திட்டமிடலில் இரண்டாமிடம்
ஒட்டுமொத்தமாக சிறந்த அணியாக முதலிடம் பெற்றது.
2018 ஜனவரியில் நடந்த பார்முலா கீரின் TOR 18 ஒட்டுமொத்தமாக முதலிடம் பெற்றோம்.
அதே போட்டியில் வடிவமைப்பிற்கு முதலிடம் கிடைத்தது. வேக வளர்ச்சியில் முதலிடம். வணிகத்திட்டமிடலில் இரண்டாம் இடம் பெற்றோம்.
கோவையில் நடைபெற்ற பார்முலா பாரத் எலட்ரிக் திட்டமிடலில் முதலிடம் , வணிக திட்டமிடலில் மூன்றாமிடம். வடிவமைப்பில ஆறாமிடமும் பெற்றோம்.
கே: இந்த வகையான ரேசிங் கார்களின் தயாரிப்பு முறைகள் குறித்து?
மற்ற கார்களைப் போலவே தான் இதன் தயாரிப்பு முறைகளும் இருக்கிறது. கார் பாகங்கள் கார்பன் ஃபையர் மூலமும், மேற்பாகங்கள் அனைத்தும் ISSI 1020 என்ற எஃகு மூலமும், பேட்டரி லத்தியம் பாலிமர் மூலமும் தயாரிக்கப்படுகிறது.
இயற்கை மாசுப்பாட்டிற்கு எள்ளவும் பிரச்சனை இல்லாத வண்ணம் இக்கார்கள் வடிவமைக்கப்படுகிறது.
கே: கூட்டு முயற்சியின் வெற்றியைப் பற்றி உங்களின் கருத்து?
இங்கு எதுவும் தனி ஒருவரால் சாதிக்க முடியும் என்று சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் யாரானும் ஒருவர் நம்முடைய சாதிப்பிற்கு பெரும் உந்துகோலாய் இருந்து ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.
எங்கள் கல்லூரியும் இது போல தான். நிறுவனர் தொடங்கி ஆசிரியர், சக மாணவர்கள் என அனைவரும் எங்களுக்கு எப்போதும் தன்னம்பிக்கைக் கொடுக்கும் விதத்தில் எங்களை ஊக்கப்படுத்துவார்கள்.
அது போல OJAS குழுவின் பணியாற்றும் அத்துனை பேரும் மிக ஒற்றுமையாக ஒவ்வொருவரின் கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டு, அதன் படியே எங்களின் பயணம் தொடங்கும். எங்களுக்கு யாரும் தலைவர் இல்லை. இதில் பணியாற்றும் ஒவ்வொருவருமே தலைவர் தான். இந்த அடிப்படையில் இருப்பதால் மட்டுமே எங்களால் எதையும் சாதிக்க முடிகிறது. எப்போதும் நாங்கள் நினைப்பது ஒற்றுமையே பலம் என்பது மட்டும் தான்.
கே: உங்கள் OJAS குழுவின் வெற்றிக்காக உழைத்தவர்கள் பற்றிச் சொல்லுங்கள்?
P Sandesh Reddy(Captain) Dhruv Jani(Vice Captain) Tript Agarwal(Technical head) Rasika Rawlley(ESO)
Kartik Jindal(Manager) Aditya Vachaspati (Head of Aerodynamics Department) Anup Kumar Dalei(Head of Transmission Department) Sunny Chalkapurkar(Head of Vehicle Dynamics Department) Nisarg,Mali(Head of Chassis Department) Nishant Verma(Head of Composite Department)MayankKapoor(Head of Brakes Department) Chaitanya Mehta(Head of Battery Pack Department)Harshendu Pathak(Head of Low Voltage Department) Ritwik Shekhar(Head of High Voltage Department.)
Aerodynamics Department: J Sudhakaran, Kenil Patel, Yuvraj Sarout
Transmission Department:
Siddharth Sharan Akash Dhar
Vehicle Dynamics Department:
Shamith Shekhar Chassis Department: Ravi Ahuja Aniket Roy
Composite Department
N Sivachakravarthy Neeraj Meghani
Brakes Department
Sajal Garg Sachit Agarwal
Management Department
Ujwaldarshan Sushmit Bafna Harjit K SKshitij Banerjee, Amey Akash
கே: வெளிநாடுகளை விட நம்நாட்டில் கண்டுபிடிப்புகளின் நிலை எவ்வாறு உள்ளது?
வெளி நாடுகளில் படிக்கும் போது கண்டுபிடிப்புகளுக்கும் ஆய்வுகளுக்கும் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால் அவர்கள் படிக்கும் போதே பல்வேறு சாதனையை செய்ய அவர்களால் முடிகிறது.
வெளிநாடுகளை விட இந்தியாவில் தயாரிப்பு முறைகளில் ஒரு சில வேறுபாடு இருக்கிறது. ஒரு கார் தயாரிக்க வேண்டுமென்றால் அதன் உதிரிப் பாகங்கள் முழுவதும் நம்நாட்டில் கிடைப்பதில்லை. அவ்வாறு கிடைக்கும் போது நாமும் மற்ற நாடுகளைப் போல வடிவமைப்புகளையும், சிறந்த தொழிற்நுட்பங்களையும் மேலும் திறம்பட செய்ய முடியும்.
வெளிநாடுகளைப் போல கண்டுபிடிப்புகள் ஒரே மாதிரி இருந்தாலும் இன்னும் நாம் சில பொருட்களை வாங்க வேண்டுமென்றால் வெளி நாடுகளைத் தான் எதிர்பார்க்கிறோம்.
இந்த நிலை மாற வேண்டுமென்றால் நம்முடைய கண்டுபிடிப்பை மேலும் துரிதப் படுத்த வேண்டும். நம்நாட்டிலேயே எல்லா விதமான கண்டுபிடிப்புகளும் இருந்தால் தான் சாதிப்பை நம்மால் பலப்படுத்த முடியும்.
கே: எதிர்காலத் திட்டம் பற்றி?
இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் உதிரிபாகங்களைக் கொண்டு ஃபார்முலா ரேசிங் காரை உருவாக்க வேண்டும். வாகனத்தின் எடையைக் குறைவான அளவில் தயாரிக்க வேண்டும்.
இவ்வாகனத்தின் தொழிற்நுட்பம் டூ ஸ்பிட் கியார்பாக்ஸ் கார்பன் பைபரால் வலுவாக்கப்பட்டு, சர்வதேச தரம் வாய்ந்த வேக வளர்ச்சி மற்றும் தடுப்பு சாதனங்களின் இவ்வண்டியை சர்வதேச பந்தியங்களில் உள்ள அதிநவீன வாகனங்களுக்கு நிகரான அந்தஸ்தை பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாக இருக்கிறது.
கே: எதிர்கால இன்ஜினியர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
இவ்வுலகம் இயந்திரமாக்கப்ட்ட உலகம். இன்னும் சில ஆண்டுகளில் எல்லாவற்றிலும் இயந்திரம் என்ற நிலை வந்து விடும்.
வெறும் புத்தகத்தைக் படித்து, அதன் மூலம் பெறும் அறிவு என்பது நிலையான அறிவுயற்று. எதையும் தீர்க்கமாக செய்முறை மூலம் கற்றுக் கொள்ளும் பாடம் எப்போதும் மனதில் நீங்காத ஒரு வளர்ச்சியாக இருக்கும்.
இவ்வுலகம் ஒரு அறிவுப் புதையல் தேட தேட தினமும் ஏதேனும் ஒன்று புதிதாக கிடைத்துக் கொண்டேயிருக்கும் என்பதை மட்டும் மனதில் நிறுத்தி உங்களை நீங்களே தயார் படுத்திக் கொள்ளுங்கள்.
கே: உங்களின் வெற்றியை விஐடி பல்கலைக்கழகம் எப்படி பார்க்கிறது?
நாங்கள் இன்று ஒரு சாதனையாளராக இருக்கிறோம் என்றால் அதற்கு முதன்மைக்காரணம் எங்கள் பல்கலைக்கழகம் தான். எங்களை ஒரு பெரும் கண்டுபிடிப்பாளராக மாற்ற எங்களுக்கு தேவையான அத்துனை உதவிளையும் செய்து கொடுக்கிறது.
எங்களுக்கு மிகுந்த சுதந்திரம் கொடுத்து ஊக்கப்படுத்தி வருகிறார்கள். எல்லா விதமான முயற்சிக்கும் ஒரு ஏணிப்படியாக இருந்து எங்களை நல்வழிப்படுத்துகிறார்கள். மாணவர்களின் நலனில் அக்கறையும் பற்றும் கொடுத்து உந்து சக்தியாக செயல்படுத்துவதில் எங்கள் நிறுவனத்திற்கு இணை எங்கள் நிறுவனமே.
திறமைன மேலாண்மை, அனுபவமிக்க ஆசிரியர்கள் அவர்களின் வழிகாட்டுதல்கள் போன்றவை தான் எங்கள் வெற்றிக்கு காரணமாக நினைக்கிறோம்.
புதிய புதிய கண்டுபிடிப்புகள்,புதிய புதிய ஆய்வுகள் போன்றவை செய்து கொண்டேயிருக்க வேண்டும் அப்போது தான் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இந்த இதழை மேலும்
0 comments Posted in Cover Story