வைபவ் குமராவேல்,
Partner, The Red Box,
சென்னை.
நேர்முகம்: விக்ரன் ஜெயராமன்
தன்னம்பிக்கை உள்ளவர் தன் தேவை என்னவோ அதை நோக்கி மட்டுமே பயணம் செய்து தனது குறிக்கோளை அடையும் வரை ஒரே சிந்தனையுடன் செயல்படுவார்கள். அந்த வழியை சரியாகப் பின்பற்றி வருபவர்.
நான் எடுத்துக் கொண்ட செயலில் வெற்றிப் பெற்றே தீருவேன். எந்தச் செயலையும் சிறப்பாகவும், சென்மையாகவும் செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கையை நிரம்ப பெற்றவர்.
பெற்றோர் எவ்வழியே அவ்வழியே பிள்ளைகள் என்பார்கள். ஆனால் இவர் அவ்வழியில் செல்லாமல் தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கி அதில் புகழ் கொடியை நட்டுவருபவர்.
தற்போதைய இளைய தலைமுறையினருக்கு ஒரு முன் உதாரணமாய், 24 மணி நேரமும் இடைவிடா இயந்திரமாய் செயல்பட்டு வரும் THE RED BOX நிறுவனத்தின் PARTNER களில் ஒருவரான வைபவ் குமாரவேல் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு….
கே: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?
நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். எனது பெற்றோர் திரு. குமராவேல், திருமதி. வீனா நேச்சுரல் கேர், ராகா நிறுவனத்தின் நிறுவனர்கள். பள்ளிக்கல்வி என்று பார்த்தால் சென்னை மற்றும் ஊட்டியில் படித்தேன். பள்ளிப்படிப்பை முடித்த கையோடு சிங்கப்பூரில் பிபிஏ படிக்க சென்று விட்டேன். எனக்குப் படிக்கின்ற காலத்திலிருந்தே ஏதேனும் ஒரு தொழில் தொடங்க வேண்டும், அந்தத் தொழில் முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். என்னுடைய தந்தை பிரபலமான தொழில் செய்து வந்தாலும் அத்தொழில் செய்வதற்கு எனக்கு விருப்பம் இல்லை.
கே: நிறுவனம் தொடங்கியது பற்றிச் சொல்லுங்கள்?
நான் சிங்கப்பூரில் படிக்கும் போது அடிக்கடி நண்பர்களுடன் சாப்பிட வெளியே செல்வது வழக்கம். சாப்பிடும் போது அங்கு பரிமாறிய உணவுகள் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அவ் உணவை உண்பதற்கு மிகவும் சுவையாக இருந்தது. இதை ஏன் நாம் தமிழ்நாட்டில் செய்யக்கூடாது என்ற எண்ணம் அப்போது என் மனதில் உதயமாயின. அப்படி தொடங்கியது தான் இந்த ரெட் பாக்ஸ் நிறுவனம். ஒரு நான்கு ஆண்டுக்கு முன்னர் சென்னையில் ஒரு சிறிய அளவில் தொடங்கினோம்.
கே: ரெட் பாக்ஸ் சைனீஸ் உணவகத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?
நான் ஒரு வேலை செய்வதற்கு முன் பலமுறை யோசித்து செய்வேன். செய்து விட்டால் வெற்றிகரமாக முடிக்காமல் விடமாட்டேன் இது தான் என்னுடைய தாரக மந்திரம். அப்படி என் மனதில் உதயமான இந்த ரெட் பாக்ஸ் சைனீஸ் உணவகம். தற்போதைய சூழலில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்றால் தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலை இருக்கிறது. அப்படியிருக்கும் போது அவர்கள் வீட்டிற்கு வந்த உணவை சமைத்து சாப்பிடும் அளவிற்கு நேரம் இருப்பதில்லை.
இதனால் அவர்கள் உணவகத்தை நாடுகிறார்கள். நல்ல தரமான உணவை வீட்டிற்கு வாங்கிச் சென்று சாப்பிடும் பழக்கம் தற்போது அதிகளவில் இருக்கிறது. இப்படி சாப்பிடும் உணவு அவர்களின் உடலிற்கு எவ்வித தீங்கும் இல்லாத அளவில் இருக்க வேண்டும் என்பதால் தான் இப்படி ஒரு திட்டத்தையே கொண்டு வந்தோம். இதில் நாங்கள் தயாரிக்கும் உணவில் மிகுந்த அக்கரையுடன் தயாரிக்கிறோம். உணவுக் கொடுக்கும் பாக்ஸில் முடிந்தளவிற்கு பிளாஸ்டிக் தவிர்த்து விடுகிறோம். எங்களிடம் நம்பி உணவை வாங்கி உண்ணும் வாடிக்கையாளர்களின் நலனில் மிகுந்த அக்கரை கொண்டு செயல்படுத்தி வருகிறோம். இதனாலேயே எங்களை வாடிக்கையாளர்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆரம்பத்தில் சென்னையில் ஒரு மூன்று இடத்தில் மட்டுமே ரெட் பாக்ஸ் இருந்தது. ஆனால் தற்போது சென்னையில் எல்லா இடத்தில் ஆரம்பித்து விட்டோம். ஆர்டர் செய்த நேரத்திலிருந்து எவ்வளவு சீக்கரமாக அவர்களுக்கு உணவைக் கொடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கரமாக கொடுத்து வருகிறோம்.
கே: உங்கள் பெற்றோர் ஒரு புகழ் பெற்ற தொழில் செய்து வருகிறார்கள், நீங்கள் அதே வழியில் செல்லாமல் புதிய தொழில் தொடங்கியதன் காரணம் என்ன?
எனது பெற்றோர் தொடங்கிய நேச்சுரல்ஸ் கேர் நிறுவனமானது மிகவும் பிரபலமான ஒன்று. அதை அவர்கள் இந்த அளவிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் அதற்கு கொடுத்த உழைப்பும் அர்ப்பணிப்பு தன்மையும் அளப்பறியது. எப்போதும் அதன் வளர்ச்சியை பற்றியே மட்டுமே சிந்தித்துக் கொண்டு இருப்பார்கள். நேச்சுரல்ஸ் என்றாலே என்னுடைய பெற்றோர்களின் பெயர்களைத் தான் சொல்வார்கள். அதை நான் அடுத்த படிநிலையாக எவ்வளவு பெரிய வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றாலும் என்னுடைய பெற்றோரின் பெயரைத்தான் சாரும்.
இவர்களைப் போல நாமும் ஒரு தொழில் தொடங்க வேண்டும். அது தொடங்கியது நானாக இருக்க வேண்டும். அதன் வளர்ச்சி என்னைச் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அப்படித்தான் தொடங்கினேன். அதுவுமின்றி எனக்கு இந்த சலூன் தொழிலில் அவ்வளவு ஈடுபாடு இல்லை, அதே வகையில் உணவுத் தொழிலின் மீது பெரும் ஈடுபாடு இருந்தது. இப்படித்தான் என்னை இதில் ஈடுபடுத்திக் கொண்டேன்.
கே: ரெட் பாக்ஸ் என்று பெயர் வைப்பதற்கான காரணம் என்ன?
ஒரு நிறுவனத்தின் பெயர் அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமாக இருக்கும். இந்த ரெட் பாக்ஸ் என்பது சைனீஸ் உணவை மட்டும் தயாரித்துக் கொடுக்கும் நிறுவனம் என்பதால் இந்த உணவிற்கு என்று ஒரு பாக்ஸ் தேவைப்படும். அதில் நிரப்பப்பட்ட உணவை தான் பார்சல் செய்து ஆர்டர் செய்பவர்களுக்கு கொடுத்து வருகிறோம்.
பொதுவாக சைனீஸ் திரைப்படங்களைப் பார்க்கும் போது அதில் அனைவரும் பாக்ஸில் மட்டுமே உணவை உண்பதைப் பார்த்திருப்போம். அந்தப் பாக்ஸ் படத்தைப் பார்க்கும் அனைவரின் மனதிலும் பதியும் படி இருக்கும். சென்னை முழுவமும் நிறைய சைனீஸ் உணவகங்கள் இருக்கிறது. அதில் முற்றிலும் மாறுப்பட்டு செயல்பட வேண்டும் ரெட் பாக்ஸ் என்பது சைனீஸ் உணவைக்குறிக்கும் சொல் என்பதால் அதனாலேயே இந்த ரெட் பாக்ஸ் என்ற பெயரை வைத்தோம்.
கே: பெரிய நகரங்களுக்கு மட்டுமே இந்த உணவு முறைகள் சாத்தியமா?
உணவு என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று, உபர், சுகி போன்ற நிறுவனங்கள் பெங்களுரூ, ஹைத்ராபாத் போன்ற நகரங்களில் தொடங்கி அடுத்து தமிழ்நாட்டில் பல கிராமப்புற பகுதிகளுக்கு வருவதாக திட்டம் வைத்திருக்கிறார்கள்.
தற்போது எல்லாப் பொருளையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிப் பயன்படுத்தும் பழக்கம் அதிகளவில் மக்களிடையே பெருகி விட்டது. அதிக விலை கொடுத்து வாங்குபவர்களும் உண்டு, ஆன்லைனில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஒரு வித பயம் இருக்கும் பொருள் சரியாக வந்து விடுமா? ஓரிஜினலாக இருக்குமா போன்ற ஐயப்பாடுகள் ஏற்படுவது இயல்பு தான். ஆனால் இன்றும் கிராமப்புறத்தில் வாழும் மக்கள் இன்னும் கடைக்குச் சென்று தான் வாங்கி வருகிறார்கள்.
இவர்களுக்கு முதலில் குறைந்த விலையிலான உணவை முதலில் கொண்டு வந்து அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திச் செய்ய வேண்டும். அப்படி செய்தால் எல்லாப் பகுதியிலும் கொண்டு வந்து விடலாம்.
கே: எது மாதிரியான உணவுகள் இதில் கிடைக்கும்?
இதில் முழுக்க சைனீஸ் உணவுகள் மட்டுமே கிடைக்கப் பெறும். அனைத்து விதமான வெரைட்டி உணவுகளும் இருக்கும். 40 முதல் 50 வகையான உணவு வகைகள் இருக்கிறது.
ஆர்டர் செய்பவர்கள் யாரும் உணவைத் தனித்தனியாக ஆர்டர் செய்ய மாட்டார்கள். தேவையான அனைத்து உணவுகளையும் ஒன்றாகவே ஆர்டர் செய்வார்கள்.
அதில் மோமோ, சூப் போன்ற உணவுகள் சிறுதானியங்கள் மூலம் செய்யப்படுகிறது. இதில் குறைந்த அளவே எண்ணெய் உடன் தயாரித்துக் கொடுக்கப்படுகின்றன்.
அது மட்டுமின்றி சிக்கன் லாலிபப், பன்னீர், சில்லி பன்னீர் போன்ற உணவுகள் தயாரித்துக் கொடுக்கிறோம். இதில் முதன்மையான உணவு என்னவென்றால் காம்போ தான். இக்காம்போவானது ஒருவர் மட்டும் சாப்பிடும் அளவிற்கு சிக்கன் மற்றும் வெஜ் சம்பந்தமான ரைஸ் மட்டும் அதில் கிரேவி போன்றவை ஓரே பாக்ஸில் பேக் செய்யப்பட்டு கொடுக்கப்படும்.
சென்னை போன்ற பெரிய நகரங்களில் நிறைய பேர் வேலை செய்வதற்கும், படிப்பதற்கும் சொந்த ஊரிலிருந்து இங்கே வருகிறார்கள். அவர்களின் நிறைய பேர் ஹோட்டலை நம்பி வாழ்க்கையை நடத்துபவர்கள். இப்படிப்பட்டவர்களைக் கருத்தில் கொண்டு இந்த முறையைக் கொண்டு வந்தோம். அவர்கள் எங்கு வேண்டுமென்றாலும் இப்பாக்ஸை எடுத்துச் செல்லலாம். அந்த அளவிற்கு பாக்ஸ் நன்றாக கவர் செய்யப்பட்டிருக்கும். இவர்கள் எங்கிருந்தும் ஆர்டர் செய்யலாம். அவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் உணவு வந்து சேர்ந்து விடும். இதுவே எங்களின் தலையாய நோக்கம்.
கே: ரெட்பாக்ஸ் குழுவைப் பற்றிச் சொல்லுங்கள்?
குழு என்பது பலரை ஒற்றிணைக்கும் ஒரு வழி ஆகும். நாங்கள் இதை ஐந்து பேர் கொண்ட குழுக்களாகவே இணைந்து தொடங்கினோம். ஆரம்பத்தில் நாங்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழி என்னவென்றால் எப்போதும் இதை நாம் ஒற்றுமையாகவே இருந்து செயல்படுத்த வேண்டும். எல்லோரும் ஒரே பணியைப் பார்க்காமல் எங்களுக்குள் தனித்தனி துறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டோம். அதில் அனிதா அவர்கள் பைனாஸ் துறையிலும், பிரசன்னா அவர்கள் என்னுடனும், ஸ்வேதா, பிந்து இருவரும் மார்கெட்டிங் துறையிலும் இணைந்து கொண்டோம். இப்படி அன்று முதல் இன்று வரை இனி என்றும் தொடர்ந்து வரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
கே: இந்த சைனீஸ் உணவை மக்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறார்கள்?
தரமும் சுவையும், உடலுக்கு தீங்கும் இன்றி கிடைக்கும் உணவை எப்படி மக்கள் மறுக்க நினைப்பார்கள். நாங்கள் எப்போதும் ஆர்டர் செய்து விட்டார்களே அவர்களுக்கு எப்படியும் நேரத்திற்கு ஏதோ ஒரு சுவையில் கிடைத்துவிட்டால் போதும் என்று ஒரு போதும் உணவைத் தயாரிக்க மாட்டோம். ஒரு முறை ஆர்டர் செய்து எங்களின் உணவை ருசித்து விட்டால் அவர்கள் எங்களின் ரெகுலர் கஸ்டமராகி விடுவார்கள். நிறைய பெரிய பெரிய சினிமா நட்சத்திரங்கள், பிரமுகர்கள் என்று எங்களுக்கு நிறைய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஆர்டர் செய்யும் பொழுது யார் என்று எங்களுக்குத் தெரியாது ஆனால் இணைய வழியில் பார்க்கும் போது நிறைய பிரபலங்கள் எங்களின் உணவை சாப்பிடுவதை அறிந்து கொள்ள முடியும்.
எங்களின் உணவு எப்படித் தரமானதாக இருக்கிறதோ, அதை விட நாங்கள் உணவைக் கொடுக்கும் பாக்ஸ் மிகவும் தரமானதாக இருக்கும். வாங்கும் வாடிக்கையாளர்கள் எப்படிப்பட்ட பயணத்திலும் எவ்வித நெருடலும் இன்றி சகஜமாக சாப்பிடலாம்.
நிறைய பேர் எங்களிடம் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இவ்வளவு குறைத்த விலையில் எப்படி இவ்வளவு விலையில் பாக்ஸ் உங்களால் கொடுக்க முடிக்கிறது என்று. அவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக் கொள்வது தரம் தான் ஒரு நிறுவனத்தின் மிகப்பெரிய சொத்து. அதை நாங்கள் எப்போதும் கொடுத்துக் கொண்டே தான் இருப்போம்.
இந்தப் பாக்ஸை நாங்கள் கண்டுபிடிப்பதற்கு மிகவும் சிரமப் பட்டோம். நிறைய பேரிடம் கேட்டோம். அதற்கு அதிக விலையைக் கூறினார்கள். ஆனாலும் எங்களின் நோக்கத்திலிருந்து ஒரு போதும் பிறழாமல் இதை செய்து முடித்தோம். இதைப் பாராட்டி நிறைய பேர் என்னிடம் நேரடியாக மற்றும் இணையத்தின் மூலமும் சொல்லியிருக்கிறார்கள். இப்படித்தான் மக்கள் எங்களை ஏற்றுக் கொண்டதாக நினைக்கிறேன்.
கே: இத்துறையில் உள்ள சவால்கள் பற்றிச் சொல்லுங்கள்?
இங்கு சவால் இன்றி சாதிப்பில்லை. சவால்களை எதிர்கொள்ளாமல் இருந்தால் அந்த சாதிப்பில் எவ்வித பயனுமில்லை. அன்றாடம் நம் கண் முன்னே பார்க்கும் எல்லோரும் ஏதேனும் ஒரு தேடுதலை நோக்கி பயணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்குள்ளும் ஏதேனும் ஒரு சவால்கள் இருக்கத்தான் செய்கிறது. இது மனித மாண்பு தான் இதைத் தவிர்க்க முடியாது. அந்த வகையில் இத்துறையிலும் சவாலுக்கு பஞ்சமில்லை.
உணவகத்தில் எல்லா நேரமும் ஒரே மாதிரியாக இருக்காது. உணவிற்கு உண்பதற்கென்று நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் தான் உண்ண வேண்டும். சிலர் வேலை நிமிர்த்ததின் காரணமாக நேரம் தாழ்த்தி உண்பார்கள். அவர்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டாம். உணவு இடைவேளையின் போது அனைவரும் ஒரே நேரத்தில் உணவை ஆர்டர் செய்வார்கள். செய்பவர்கள் அனைவரும் ஒரே உணவை ஒரே மாதிரியாக ஆர்டர் செய்வதில்லை. இப்படி ஒரே நேரத்தில் பலதரப்பட்ட உணவை சரியான நேரத்தில் அவர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.
ஒரு சில அலுவலகத்தில் உணவு இடைவேளை என்பது மிகவும் குறுகியதாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் உணவை ஆர்டர் செய்யும் போது குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அப்போது அவர்கள் சாப்பிட முடியும். காலம் தாழ்த்தி கொண்டு சேர்த்தால் அவ் உணவு வீண் என்பதால் சமைப்பவர் முதல் பார்சல் செய்பவர், பில் போடுபவர், ஆர்டர் எடுப்பவர் என அனைவரும் இயந்திரம் போல் சுழன்று கொண்டே இருக்க வேண்டும்.
அதே போல் பெரிய பெரிய ஐ.டி நிறுவனங்கள் பெரிய அளவில் உணவை ஆர்டர் செய்து விடுவார்கள். அவர்கள் அனைவரையும் உணவில் திருப்தி படுத்த வேண்டும். இப்படி எண்ணற்ற சவால்கள் நிறைந்தது தான் இந்த துறை.
கே: உங்கள் பெற்றோரிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்டது.?
என் பெற்றோர் இருவரும் கடுமையான உழைப்பாளிகள். 24 மணி நேரமும் வேலை செய்ய வேண்டும் என்றாலும் சற்றும் மனம் தளராமல் செய்வார்கள்.
ஒரு வேலையை எடுத்துக் கொண்டாலும் அதை முடிக்கும் வரை அதைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.. சின்ன வயதிலிருந்தே அவர்களைப் பார்த்து வருகிறேன், அந்த வகையில் அவர்களின் ஒவ்வொரு அசைவையும் என் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து வருகிறேன்.
சாதாரணமாக தொடங்கி சலூன் தொழில் இன்று காணும் இடமெல்லாம் காட்சியளிக்கிறது என்றால் அதற்கு அவர்கள் பட்ட இன்னல்களும் வழிகளும் சொல்லால் சொல்லி விடமுடியாது.
அவர்கள் தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் பழகும் விதம் என்னை பல விதத்தில் கவர்ந்திருக்கிறது. அவர்களை போலவே நானும் அதை கடைபிடித்து வருகிறேன்.
என் பெற்றோர்களிடம் நானும் தொழில் தொடங்குகிறேன் என்ற உடன் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் இன்று வரை என்னுடைய வாழ்விற்கு ஒரு கலங்கரை விளக்காய் இருந்து என் வாழ்க்கைக்கு நல்லதொரு ஒளியைக் கொடுத்து வருகிறார்கள்.
என்னிடம் ஆலோசனை கூறும் பொழுது கூட அவர்களின் அனுபவத்தைக் கூறாமல், உன்னால் இது முடியும் செய் என்று கூறி ஊக்கப்படுத்துவார்கள். அந்த வகையில் என்னுடைய பெற்றோர் என்னுடைய வளர்ச்சிக்கு பெரும் ஊன்று கோல் என்று சொன்னால் அது மிகையாகாது.
கே: உங்களின் எதிர்காலத்திட்டம் பற்றிச் சொல்லுங்கள்?
நாங்கள் இந்நிறுவனத்தை 2017 ஆம் ஆண்டு சென்னையில் ஒரு சிறிய அளவில் தொடங்கினோம். ஆரம்பத்தில் மூன்று அவுட்லெட்டுடன் அமைந்த இந்நிறுவனம் ஓரே ஆண்டில் 50 ஆக உயர்ந்தது. தற்போது பார்த்தால் சென்னையில் இல்லாத இடங்களே எதுவும் இல்லை என்று கூறலாம்.
அடுத்து எங்களின் திட்டம் கோவை பகுதியில் கொண்டு வர வேண்டும் என்பதாக இருக்கிறது, அதற்கான இடத்தை எல்லாம் தேர்வு செய்து விட்டோம். அங்கு வெகு விரையில் தொடங்க இருக்கிறோம்.
அதுபோலவே பெங்களுரூ, ஹைத்ராபாத், கேரளா, கொச்சின் போன்ற இடங்களின் அடுத்தடுத்த தொடங்க திட்டம் வைத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வரும் நாட்களில் தொடங்கி விடுவோம். தற்போது இது மட்டுமே திட்டமாக இருக்கிறது.
கே: இளைய தலைமுறையினருக்கு நீங்கள் கூற விரும்புவது?
நானும் ஒரு இளைஞன் தான். இது சாதிப்பு நிறைந்த உலகம். இங்கு சாதிக்க ஏராளமான வழிகள் இருக்கிறது.
புதிது புதிதாக சிந்தியுங்கள், உங்கள் சிந்தனைக்கு உருவம் கொடுங்கள், அந்த உருவத்தை நடைமுறைப் படுத்துங்கள் அது தான் உங்களின் வெற்றி.
ஒரு முறை தோல்வியா? அழுது விடுங்கள், மனதில் போட்டு அடக்கி வைத்து விடாதீர்கள், அது உன்னை அழுத்தி விடும். நீ சிந்தும் ஒவ்வொரு கண்ணீர் துளியும் உன் இலட்சியத்தை நோக்கி பெருகெடுத்து ஓட வேண்டும். அப்போது தான் வெற்றியின் மகத்துவம் என்ன என்பதை உன்னால் முழுமையாக உணர முடியும்.
இந்த இதழை மேலும்