ஆஸ்த்துமா
ஆஸ்த்துமா நுரையீரல்களை பாதிக்கக்கூடிய ஒரு நோய். குழந்தைகளைப் அதிகம் பாதிக்கக்கூடிய நோய். இதனால் அடிக்கடி இளைப்பு, சுவாசிக்க முடியாத நிலை, மார்புக்கூட்டில் ஓர் இறுக்கம், இருமல் போன்றவை வரும். எப்போதுமே ஆஸ்த்துமா இருந்தாலும் ஒவ்வாமை ஏற்படும் போது இதன் தீவிரம் அதிகரிக்கும். குடும்பத்தில் யாருக்கேனும் ஆஸ்த்துமா இருந்தால் குழந்தைக்கு இந்நோய் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். எனினும் ஆஸ்த்துமா வருவதற்கு என்ன முக்கியக் காரணம் என்பது இன்னும் தெளிவாக அறிந்து கொள்ளப்படவில்லை.
அதேபோல இதை முற்றிலும் குணப்படுத்துதலும் முடியாது. மருந்துகளால் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். கட்டுப்பாட்டில் இருக்கும் போது இளைப்பு, மூச்சுத் திணறல் வராமல் இருக்கும், நன்றாக தூங்க முடியும் என்பதால் பள்ளிக்குச் செல்வதோ விளையாடுவதோ தடைபடுவதில்லை.
ஆஸ்த்துமாவை கண்டறியும் வழிகள்
ஆஸ்த்துமாவை கண்டறிவது மிகக் கடினம். அதுவும் 5 வயதுக்குள்ளான குழந்தைகளிடம் கண்டறிவது இன்னும் கடினம். மருத்துவ பரிசோதனைக்குச் செல்லும் போது மருத்துவர் கேட்கும் சில கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதிலை வைத்தே கண்டறிய முடியும். அதன்பின் நுரையீரல் பரிசோதனை செய்து அதை ஊர்ஜிதம் செய்து கொள்வார்கள்.
பரிசோதனை செய்யும் மருத்துவர் இரவில் மூச்சுத்திணறல் இருக்கிறதா? வீட்டில் யாருக்கேனும் ஆஸ்த்துமா இருக்கிறதா? மார்பு தசைகளில் இறுக்கமான உணர்வு இருக்கிறதா என்று கேட்பார். ஸ்பைரோமீட்டர் என்ற குழாய் மூலம் அதிகப்படியாக குழந்தையால் எவ்வளவு காற்றை உள்ளிழுக்க முடியும் என்பதையும் பார்க்க முடியும். இந்த காற்று அளவு ஆஸ்த்துமா மருந்து எடுத்துக் கொள்வதற்கு முன், மருந்து எடுத்துக் கொண்டதன் பின் கணக்கிட்டுப் பார்க்கப்படும். அதிக முறை ஒவ்வாமை விளைவுகள் ஏற்படும் போது அது ஆஸ்த்துமாவாக மாற வாய்ப்பு இருக்கிறது. காற்று மூச்சுக்குழாய்கள் மூலம் நுரையீரலுக்குள் செல்கிறது. ஆஸ்த்துமா விளைவு ஏற்படும் போது அந்த குழாய்கள் சுருங்கிவிடுவதால் தேவையான காற்று செல்ல முடியாமல் தடைபடுகிறது. அதிக மியூக்கஸ் எனப்படும் திரவம், சளி சுரந்து இருமலை இன்னும் அதிகமாக்கும். பிறகு இது மூச்சு இளைப்பில் முடியும். சில சமயம் தக்க மருந்து கொடுத்து மூச்சுக் குழாய்களை விரிவடையச் செய்ய முடியாவிட்டால் உயிரிழக்கவும் நேரிடும்.
ஆஸ்த்துமாவை எப்படி கட்டுப்பாட்டில் வைத்திருப்பது?
மருத்துவர் தரும் மருந்துகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல சுற்றுப்புறத்தில் உள்ள மாசினைத் தவிர்க்க, கூடிய மட்டும் முயற்சி செய்யுங்கள். வீட்டில் புகை பிடிப்பவர்கள் இருப்பின் வெளியே சென்று புகை பிடித்தல் அல்லது வீட்டுச் சன்னல்களைத் திறந்து வைத்தல் போன்றவற்றைச் செய்யவும். ஆஸ்த்துமாவிற்கு சில மாத்திரைகள் அல்லது ஒரு மூச்சு இழுக்கும் குப்பியிலோ மருந்து இருக்கும். பெரும்பாலும் இவை மூச்சுக் குழாய்களை விரிவாக்கும் மருந்துகளே. அடிக்கடி உபயோகிக்காமல் தேவைக்கேற்ப மருத்துவரின் அறிவுரையைப் பின்பற்றிக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.
ஆஸ்த்துமா வரக்காரணங்கள்
சுற்றுப்புறச் சூழலில் உள்ள மாசு, சிகரெட் புகை போன்றவை முக்கிய காரணங்களாகும்.
தூசி
தலையணை உறைகள், படுக்கை விரிப்புகள் இவற்றைத் துவைத்து உபயோகிக்க வேண்டும். அதே போல வீட்டு மிருகங்களுடன் விளையாடுதல் மற்றும் ரோமம் உள்ள விளையாட்டுப் பொம்மைகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். வீட்டிற்கு வெளியே காற்றில் உள்ள மாசு, சில நிறுவனங்கள் வெளியேற்றும் புகை, கார் போன்ற வாகனங்கள் வெளிவிடும் புகை போன்றவை ஆஸ்த்துமா உள்ளவர்களுக்கு ஆபத்தை வரவழைக்கக் கூடும்.
கரப்பான் பூச்சிகள் அடைசல் அதிகம் இருக்கும் இடத்தில் நிறைய இருக்கும். இவற்றைக் கொல்லப் பயன்படுத்தும் மருந்தின் வீரியம் ஆஸ்த்துமாவை வரவழைக்ககூடியது. அதனால் வீட்டில் நீர் தேங்கி இருக்கும் இடங்களைச் சுத்தம் செய்து துப்புரவாக வைத்திருத்தல் அவசியம்.
செல்லப் பிராணிகள் பூனை, நாய் போன்றவற்றின் முடி பலருக்கு ஒவ்வாமை தரக்கூடியது. எனவே எவ்வளவுதான் நண்பனாக இருந்தாலும் அதிக முடியுள்ள செல்லப் பிராணிகளைப் படுக்கை அறையில் அனுமதிக்காதீர்கள்.
பாசி
பாசி, மோல்ட் இவற்றை சுவாசிப்பதன் மூலம் அதிக ஆஸ்த்துமா விளைவுகள் நேரலாம். வீட்டில் அதிக ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். எங்கேயாவது தண்ணீர் கசியுமானால் அதை உடனே சரி செய்ய வேண்டியது அவசியமாகும். உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க சத்துள்ள காய்கறிகள், வைட்டமின் இ அதிகம் உள்ள பழங்களை உண்பது அவசியம்.
ஆஸ்த்துமா நோய் அறிகுறி
வருடம் 1900-இல் ஆஸ்த்துமா நோய் என்பது மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது. ஆனால் இப்பொழுதோ, அது பெருவாரியான குழந்தைகளை பாதிக்கும் நோயாக வளர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் ஒன்றரைக்கோடிக்கும் மேலான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகமாய் இந்நோய் உலகளவில் மக்களைப் பாதித்திருக்கிறது. ஆஸ்த்துமா நோய் கொண்ட தாயோ அல்லது தகப்பனோ, ஒரு குழந்தை ஆஸ்த்துமா நோய் அடைவதற்குக் காரணமாக இருக்கலாம் என்றிருந்தாலும், புள்ளிவிவரங்கள் மூலம், வம்சாவழி மரபை விட சுற்றுப்புறச் சூழலும், வளரும் வாழ்க்கை முறையும்தான் மிக அதிகமாய் ஆஸ்த்துமா நோய்க்கு காரணமாய் இருப்பதாய் தெரிகிறது. எனினும் எந்தெந்த அம்சங்கள் ஆஸ்த்துமா நோய்க்குக் காரணமாய் இருக்கின்றன என நுண்மையாக இன்னும் தெரியவில்லை. தற்போதைய குழந்தைகள் முந்தைய காலத்தவர்களை விட அதிகமாய் வீட்டுக்குள்ளும், கட்டிடத்துக்குள்ளும் நேரத்தை செலவிடுவதும், வெளிப்புற விளையாட்டை புறக்கணிப்பதும் இவ்வகை ஒவ்வாமை ஏற்படக் காரணமாக இருக்கலாம்.
இப்படி நான்கு சுவற்றுக்குள் அடைந்து கிடப்பதால், இவர்கள் மிக அதிகமாய் வீட்டில் இருக்கக்கூடிய அலர்ஜி சம்பத்தப்பட்டவைகளினால் (தூசிகளில் வளரும் பூச்சிகள், எலி, கரப்பான் போன்றவைகள் உட்பட) பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ஓரு முக்கியமான கருத்தின் படி, மேலை நாடுகளின் குழந்தைகளின் நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகளின் தடுப்புச்சக்தி, வளரும் நாடுகளின் குழந்தைகளின் தடுப்புச்சக்தியை விட குறைந்ததாய் இருக்கிறது. எனவே, இவர்கள் மிக எளிதாக ஆஸ்த்துமா நோய்க்கும், வேறு சில அலர்ஜி சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும் (Hay Fever and Eczema) ஆளாகி விடுகிறார்கள்.
அநேகமாக, பாதி ஆஸ்த்துமா நோய்க்காரர்கள் அலர்ஜி (குடும்ப வம்சாவழி சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடியது) மூலமாக ஆஸ்த்மா நோய் அடைந்திருக்கிறார்கள்.
இரசாயனத் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர் களிடம், அந்த இரசாயனப் பொருட்களின் மூலமாகக் கூட ஆஸ்த்துமா ஏற்பட்டிருக்கிறது. வீட்டிலுள்ள தொற்றுநோய் கிருமிகளிலிருந்தும், உடற்பயிற்சி, குளிர்காற்று, உணர்ச்சி கொந்தளிப்பு மற்றும் ஓசோன் போன்ற இரசாயனப் பொருட்களும் ஆஸ்த்துமா நோயைத் அதிகப்படுத்துபவையாக இருக்கின்றன.
இருந்த போதிலும், வெளிக்காற்றின் கிருமிகள் ஆஸ்த்துமா நோய் உருவாகக் காரணம் என இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. புகை பிடிப்பது ஆஸ்த்துமா நோயை அதிகரிக்கச் செய்கிறது. கர்ப்பமாக இருக்கும் போது, புகை பிடிப்பது, பிறக்கும் குழந்தைக்கு ஆஸ்த்துமா நோய் வருவதற்கு வாய்ப்பினை அதிகப்படுத்துகிறது. உடல் குண்டாக இருப்பது கூட ஆஸ்த்துமா நோயுடன் சம்பந்தப்பட்டது தான்.
இப்படி மிக ஏராளமான காரணங்களும், விவரங் களுடனும் ஆஸ்த்துமா நோய் சம்பந்தப்பட்டிருப்பதால், இதுவரை இதன் முழுத்தன்மையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இருந்த போதிலும், ஸ்டீராய்டு சுவாசித்தல் போன்ற ஒருசில மருந்துகள் சில புதிய மருத்துவ முறை களையும் சரியாகவும், தொடர்ந்தும் உபயோகப் படுத்தினால், ஆஸ்த்துமா நோய் மூலமான பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.
ஆஸ்த்துமா நோய் உள்ள குழந்தைகள் தவிர்க்க வேண்டியவை
- பஞ்சு மெத்தை, தலையணை
- கொசுவர்த்திச் சுருள், ஊதுபத்தி, சாம்பிராணி புகை
- புகை மற்றும் புகைபிடிப்பவர்கள்
- நீண்ட நாள் நோயுற்றவர்கள்
- போக்குவரத்தின் மூலம் ஏற்படும் தூசு, புகை
- வீட்டுப் பிராணிகள்
- குறிப்பிட்ட பொம்மைகள்
இந்த இதழை மேலும்
0 comments Posted in Articles