மு.மாரிராஜன்
நிறுவனர், REMINGO – Reminder on the GO,
MKSG Solutions PVT.LTD, நவி மும்பை.
வாழ்க்கையில் தன்னம்பிக்கை இருந்தால்
எல்லாம் வந்துவிடும்…என்னும் வார்த்தை தான் இவரின் வர்த்தக வரிகள்..
ஒவ்வொரு நாளும் ஏதேனும் புதுமையை படைக்க வேண்டும், அந்தப் புதுமைகள் எல்லோருக்கும் ஒரு புத்துணர்வு கொடுக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நாளும் புதுமையைப் படைத்து வரும் மனிதர்.
கணினித் துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் இவர் கணினித் துறையில் பல்வேறு மாற்றங்களையும், சமுதாயத்திற்குத் தேவûயான தொழில் நுட்பத்தையும் தனது அசாத்திய திறமையால் கொண்டு வந்தவர்.
கணினித் துறையில் இந்திய மற்றும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களாகிய Motorola, Anderson Consulting, ONGC, Cibatul, Airfreight, DHL மற்றும் சிங்கப்பூர் தொலைத் தொடர்பு நிறுவன குழுமம் ஆகியவற்றில் இணைந்து பணியாற்றிய அனுபவம் மிக்கவர். அரசு மற்றும் அரசு சாரா துறைகளில் பணிபுரிந்து அனுபவம் பெற்ற இவர் ரோபாட்டிக்ஸ் ஆட்டோமேஷன், டிஜிட்டலேசன் போன்ற துறைகள் ஆழ்ந்த அனுபவம் மிக்கவர்.
VHNSN கல்லூரியில் இளங்கலை இயற்பியல் துறையில் பட்டம் பெற்றவர், பின்னர் முதுகலை டிப்ளமோ படிப்பை முடித்த அவர் ஆஸ்திரேலியாவிலுள்ள கர்டின் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில் நுட்பத்துறையில் எம்பிஏ பட்டமும் பெற்றிருக்கிறார்.
இவரின் முன்னோடியான கல்விக்கண் திறந்த காமராஜரின் வழி பல குழந்தைகளுக்கு கல்வி பயில உதவி செய்து கொண்டிருக்கிறார்.
தான் பிறந்த சமுதாயத்தில் தன்னால் ஆன கடமைகளை தனக்கும் உகந்து தன் தாய் நாட்டிற்கும் உதவ வேண்டும் என்று கணினித் துறையில் பல மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
உலக நாடுகள் பலவற்றிற்கு பயணம் செய்து, அங்கெல்லாம் தனது திறமையால் புகழ்கொடி நாட்டியவர் REMINGO – Reminder on the GO நிறுவனர் மு.மாரிராஜன் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு…
கே: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?
நான் பிறந்தது ஸ்ரீவில்லிப்புத்தூர். தந்தை திரு. வீ. முத்துகிருஷ்ணன் விவசாய பின்னணி உடைய குடும்பம்.. அவர் சுயத்தொழில் செய்து விட்டு பின்னர் இந்திய தபால் தந்தித் துறையில் வேலை செய்து கொண்டிருந்தார். ஆனாலும் எங்கள் பள்ளி காலம் முழுவதும் விருதுநகரில் தான் இருந்தது. என் தாயார் திருமதி. கோவிந்தமாள் இல்லத்தரசி. என்னுடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன், ஒரு அக்காள், ஒரு தங்கை. என்னுடைய படிப்பு விருதுநகரிலுள்ள திருவள்ளுவர் வித்யா சாலை மற்றும் சத்திரிய வித்யா சாலை ஆகிய பள்ளிகளில் படித்தேன். பள்ளியில் படிக்கும் போது நன்றாகப் படிக்கும் மாணவன் தான் ஆனாலும் குறும்புக்கும் துறுதுறுக்கும் சற்றும் குறைவில்லாமல் இருந்தேன். கால்பந்து விளையாட்டின் மீது எனக்கு அளப்பரிய ஆசை நன்றாக விளையாடுவேன். அது மட்டுமின்றி என்சிசி யிலும் இருந்தேன். படிப்பின் மீது இருந்த பற்றுதலால் என்னுடைய பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்து VHNSN கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியல் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன். மூன்று ஆண்டுகள் சென்றதே தெரியவில்லை. ஒரு புறம் படிப்பு, விளையாட்டு, நண்பர்கள், மறுபுறம் சமூக சேவைகளான என்எஸ்எஸ் யிலும் இருந்தேன். இப்படி பல மறக்க முடியாத தருணங்களுடன் என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரிப் பருவம் இனிதாகச் சென்றது.
கே: கல்லூரிப்படிப்பை முடித்தவுடன் உங்களின் பயணம் எப்படியிருந்தது?
கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் மேலும் படிப்பதற்கு முதுகலை இயற்பியல் துறையில் இடம் கிடைக்கவில்லை. இதனால் மும்பை செல்ல அறிவுறுத்தப்பட்டேன். நெடு தூர இரயில் பயணம், முதன் முறையாக குடும்பத்தை விட்டு சென்றது மனதிற்கு மிகவும் வருத்தத்தையும் சலனத்தையும் கொடுத்தது. கல்லூரி வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களுடன் பயணப்பட்டேன். ஆனாலும் சாதிக்க வேண்டுமென்று புறப்பட்டு விட்டேன் இனி, சங்கடம் படுவதில் எவ்வித பயனும் இருந்துவிடாது என்று என் மனதை நானே தேர்த்திக் கொண்டேன். ஒரு வழியாக மும்பை சென்று விட்டேன் முற்றிலும் மாறுபட்ட முகங்கள், ஒவ்வொருவரின் முகத்திலும் ஒரு தேடுதல் இருந்தது. இங்கு தான் இனி என்னுடைய வாழ்க்கை அமையப் போகிறது என்று அப்போது எனக்குத் தெரிவில்லை.
பொது அறிவு மற்றும் வங்கித் தேர்விற்கான தயாரிப்புகளுடன் நேர்காணல் செல்ல முயன்றேன். Puma Carona, Bhabha Atomic Research Centre, Bajaj, Indian Airforce, Indian Rare Earths ஆகிய நிறுவனங்களில் முயற்சித்து தோல்வியுற்றேன். பின்னர் கணினித் துறையில் ஒரு வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன்.
கே: படித்தது இயற்பியல் துறை பணியாற்றுவது கணினித் துறை இது எப்படிச் சாத்தியமானது?
நான் படிக்கின்ற காலத்தில் பொது அறிவு மற்றும் வங்கிப் பணிக்கான தேர்வுக்கு செய்த பயிற்சியின் உதவியால் கணினித்துறையில் பணி கிடைத்தது. அந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொண்டேன்.
1986 ஆம் ஆண்டு ஐ.டி துறை வளர்ந்து வரும் காலமாகும். அப்போது இணையதள வசதி இல்லை என்றே கூறலாம். ஆனாலும் பெரிய வணிக நிறுவனங்கள் கணினியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆகையால் கணினித் துறையில் அதிக வேலை வாய்ப்பு வந்து கொண்டிருந்தது. அப்படியிருக்கும் போது அத்துறையில் நான் பணியாற்றியது புதுமையாக இருந்தது.
எனக்கு ஏழு நாள் அவகாசத்தில் ஒரு புரோகிராம் செய்து தரும் படி வலியுறுத்தப்பட்டு ஒரு புத்தகம் கொடுக்கப்பட்டது, அந்த நிறுவனத்தில் இரு கணினிகள் இருந்தன. அப்போது தான் கணினியை முதன் முதலாகப் உபயோகப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றேன். கடின முயற்சி, உடன் பணிப்புரிபவர்களின் ஆலோசனையின் பேரில் கொடுக்கப்பட்ட காலத்திற்குள் புரோகிராம் செய்து கொடுத்து எனது பணியை தக்கவைத்துக் கொண்டேன். இதன் பிறகு தான் எனக்கே என் மீது நம்பிக்கை வந்தது. இதனால் இந்நிறுவனத்திற்கு என் மீது மரியாதையும் நம்பிக்கையும் வந்து மேலும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு புரோகிராம் செய்யப் பணிக்கப்பட்டேன். அப்போது கிடைக்கப் பெற்ற புதிய சிறப்பான அனுபவமும் உந்துதலும் இன்று வரை என்னுள் இணைந்திருக்கிறது.
நான் பணிபுரியும் நிறுவனத்திற்கு மும்பை மற்றும் குஜராத்தில் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை செய்ய பணிக்கப்பட்டு கணினித்துறையில் நிறைய கற்றுக் கொண்டேன்.
கே: கம்யூட்டர் மேனேஜ்மென்ட் படித்த அனுபவத்தைச் சொல்லுங்கள்?
குஜராத்தில் உள்ள வல்சாத் நகரில் வேலை செய்யும் பொழுது கணினித்துறையில் திறன்களை மேலும் வளர்ப்பதற்காக மும்பையில் டிப்ளமோ படிப்பில் சேர்ந்தேன். நான் பணியாற்றும் இடத்திலிருந்து மும்பையை அடைய 4 முதல் 5 மணி நேரம் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது படிப்பைத் தொடர இது பெரும் சவாலாக இருந்தது, வார இறுதி நாட்களில் மட்மே என்னால் படிப்பதற்கு நேரத்தை செலவிட முடிந்தது. மேலும் குஜராத் மற்றும் மும்பையில் வேலை பார்த்தால் பிற மொழி கற்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதனால் புதிய விசயங்கள் கற்றுக் கொள்ளவதில் ஆர்வமும் உந்துதலும் மேன்மேலும் அதிகரித்தது.
கே: உங்கள் வாழ்வில் ஏற்பட்ட திருப்புமுனை சம்பவம் பற்றிச் சொல்லுங்கள்?
மும்பையிலுள்ள எனது இரண்டாவது வேலைக்கான நேர்காணலுக்கு போயிருந்த போது தேர்வு எழுதப் பணித்தார்கள் தேர்வு முடிந்தவுடன் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டேன். அப்பொழுது அந்நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர் நீங்கள் தேர்வில் தோற்றுவிட்டீர்கள் ஆனால் உங்களுடைய அனுபவத்திற்கு சிறப்பாக செய்திருக்கலாம் என்று கூறினார்.
சற்று யோசனைக்குப் பின் நான் தேர்வாகவில்லை அது உண்மை தான். ஆனால், அடிப்படையில் உங்களின் வினாக்களில் பிழைகள் நிறைய இருக்கிறது என்று சொன்னேன். இதைக் கேட்டவுடன் அவர் அதிர்ந்து விட்டார். தவறை உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா என்று கூறினார். நிச்சயம் முடியும் என்று கூறி அதை அவருக்கு விளக்கிக் கூறினேன். அவரும் விசாரித்தப் பின்னர் என்னுடைய கருத்தை ஏற்றுக் கொண்டதோடு இல்லாமல் எனக்கு பணி ஆணையும் வழங்கினார். இந்த கம்பெனி ஒரு பெரிய கார்ப்ரேட் நிறுவனம். இவர்களுக்கு இந்தியா முழுவதும் 60 கிளைகள் இருந்தன. இங்கு பணியாற்றும் போது நிறைய நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். இது என் வாழ்வில் திருப்பு முனை என்று சொல்லலாம். .
கே: நீங்கள் எதிர்கொண்ட சவாலான நிகழ்வுகள் பற்றிச் சொல்லுங்கள்?
நேரம் கிடைக்கும் போது பொழுதுப் போக்காக UNIX மற்றும் scripting சுயமாகக் கற்றுக்கொண்டேன். அந்தக் காலக்கட்டத்தில் இணையதள வசதிகள் இல்லை. இதனால் புத்தகத்தைப் பார்த்து கணினியில் முயற்சி செய்து கற்றுக்கொண்டேன். பின்நாளில் இது உதவும் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கு PDP11, PSI Omni போன்ற கணினிகளில் சிறப்பான அனுபவம் உண்டு. பெரிய நிறுவனங்கள் இது போன்ற கணினிகளை தங்கள் சேவைக்குப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட ஒரு இடரைத் தீர்வுகாண்பதற்கு பொழுது போக்காக நான் கற்ற வழி முறையில் தீர்வு காண முயற்சி செய்தேன்.
அதன் படி மேனேஜரிடம் நேரடியாகச் சென்று இதை நான் சரி செய்யலாமா என்று அவரிடம் கேட்டேன். நாளைக்குச் சொல்கிறேன் என்று அவர் கிளம்பி விட்டார். சில நாட்களுக்குப் பின் என்னிடம் இந்த வேலையைச் செய்யும் படி சொன்னார். உடனே ஆர்வத்தோடு மொத்தம் இருந்த 60 புரோகிராம் களை சோதனை செய்து நிவர்த்தி செய்து கொடுத்தேன். அனைத்தையும் சரிசெய்தது மூலம் மேலும் மேனேஜருக்கு என் மீது நம்பிக்கை அதிகரித்தது. பின்னாளில் தான் எனக்கு இந்த புரோகிராமங்களை சரி செய்வதற்காக தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கப் பெற்று அவர்களால் 50 சதவீதம் மட்டுமே சரி செய்ய முடிந்தது என்பதை அறிந்தேன். அதன் பிறகு நிறைய வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது. இது என்னுடைய வாழ்வில் ஒரு சவாலான நிகழ்வாகக் கருதுகிறேன்.
கே: கார்கோ நிறுவனத்திற்கு செய்த புரோகிராமிங் பற்றிச் சொல்லுங்கள்?
நான் வேலை பார்த்த நிறுவனம், அனைத்து வகையான சரக்கு மற்றும் கூரியர் வியாபாரத்தில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமாகும். இங்கு புதிதாக டோர் டு டோர் கார்கே டெலிவரி சேவைக்கு வியாபார பிரிவு தொடங்கப்பட்டது. அடிப்படையில் இந்தப் பிரிவு Hub & Spoke மாதிரியை தழுவியது. இதில் கணினியின் மூலம் தகவல்களை தொலைபேசியின் வாயிலாகப் பரிமாறிக்கொள்ளும் திறனை முதன் முதலாக அறிமுகப்படுத்தினோம்.
இப்போது இருப்பதைப் போல 80களில் இணையதள வசதிகள் இல்லை. ஆகையால் இரவு பத்து மணிக்கு மேல் தொலைபேசி வாயிலாக மிகவும் குறைவான கட்டணத்தில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுத் திறம்பட நிர்வாகம் செய்யப்பட்ட வியாபார பிரிவு இது. இந்தியாவின் முன் மாதிரி கார்கோ டெலிவரி சேவையில் முழுமையாக ஈடுபட்ட அனுபவம் மேலும் என்னுடைய ஊக்கத்தையும் ஆர்வத்தையும் வளர்த்தது. இதில் எண்ணற்ற சவால்கள் இருந்தது. அதை எல்லாம் நாங்கள் சரியாக கையாண்டோம்.
இந்த இதழை மேலும்