ஏன் ஆண்கள் பொய் சொல்கிறார்கள் & பெண்கள் அழுகிறார்கள்?
(Why men Lie and Women Cry)
இந்த நூலை ஆலன் மற்றும் பார்பராபீஸ் (Allan & Barbara Peace) ஆகிய இருவர் எழுதியிருக்கிறார்கள். (இந்நூலினைத் தமிழில் ஜார்கினா குமார் மொழிபெயர்த்துள்ளார். கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.) இந்நூலாசிரியர்கள் இருவரும் உளவியலில் மருத்துவப் பட்டம் பெற்ற கணவன் மனைவி ஆவர். இவர்கள் உலகம் முழுவதும் 20 ஆண்டுகளுக்கு மேல் சுற்றிவந்து ஆண், பெண் உளவியலை ஒரு கோட்பாடாக்கித் தந்துள்ளனர். இந்நூல் முன்வைக்கும் கருத்துக்கள் முழுவதும் அறிவியல் ரீதியானதாகும். இந்நூலில் முன் வைக்கப்படும் கருத்துக்கள்.
- ஆண்கள் ஏன் காதலைப் பற்றி மிகவும் குழப்பமடைகிறார்கள்?
- ஏன் பெண்கள் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்?
- ஏன் பெண்கள் சுற்றி வளைத்தே பேசுகிறார்கள்?
- ஏன் பெண்கள் அழுதுகொண்டே இருக்கிறார்கள்?
- ஆண்கள் ஏன் பொய் பேசுகிறார்கள்?
- உறவுகளில் உறுதியாக ஒன்றைச் சொல்ல ஆண்கள் ஏன் தயங்குகிறார்கள்?
போன்ற கருத்துக்களை ஆய்வுநோக்கில் அலசிப் பார்த்து ஆண், பெண் இருவரின் மனநிலை என்ன? என்பதை இந்நூல் மிக அற்புதமாக விவரிக்கின்றது. இந்நூல் முன்வைக்கும் முதல் கருத்து ஆண் வேறு, பெண் வேறு என்பது மட்டுமல்ல. இருவரும் வேறுபட்ட சிந்தனையுடையவர்கள். இவர்களுக்குள் ஒத்த சிந்தனை என்பது எப்போதும் ஏற்படாது. ஆணின் மூளை வேறு? பெண்ணின் மூளை வேறு? ஆணின் மூளை உணர்வுகளின் அடிப்படையில் இரண்டு பகுதிகளாக வலது மூளை, இடது மூளை என்ற பிரிவு மட்டுமே உண்டு. இடது மூளை பேசுவதையும், வலது மூளை அதற்கான தீர்வுகளை ஆராய்வதையும் செய்யும். பெண்களைப் பொறுத்தவரை இடது, வலது என்ற இரண்டு மூளைகளிலுமே 20 பகுதிகள் உள்ளன. ஒரு அஞ்சறைப் பெட்டி போன்று; அவள் ஒரே நேரத்தில் பேசவும், அழவும், உணர்ச்சிவசப்படவும், சிரிக்கவும் என்று உணர்வுகளை மாற்றி மாற்றி தன்னை வெளிப்படுத்த முடியும். ஆண் அப்படி அல்ல! அவனால் ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே செய்ய முடியும். ஒரு பெண்ணால் ஒரே நேரத்தில் சுய நினைவுடன் ஒன்பது வேலைகளைச் செய்ய முடியுமென்று இந்நூலாசிரியர்கள் சொல்கிறார்கள். ஒரு பெண் மூளையால் ஒரு நாளைக்கு 6000 முதல் 8000 வரை சொற்களைப் பேசி வெளியிட முடியும். ஒரு ஆனால் அதிகபட்சம் 2000 முதல் 4000 வரை சொற்களைத்தான் பேச முடியும். பெண்ணின் பேச்சுத்தனம் மூளையில் பெரியது; ஆணின் பேச்சுத்தனம் மூளையில் சிறியது. இரண்டு பெண்கள் ஒன்றாக ஒரு நாள் முழுவதும் தொடர்ந்து அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டு, வீட்டுக்குச் சென்று மீண்டும் தொலைபேசியில் தாம் விட்டதிலிருந்து பேசத் தொடங்குவார்கள். ஒரு ஆண் இதனைப் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு இவ்வளவு நேரமா நீங்கள் இருவரும் பேசிக்கொண்டுதானே இருந்தீர்கள். மறுபடியும் என்ன? போனில் பேச்சு? என்று கேட்டு விட முடியாது. காரணம் அவளால் ஒரு நாளைக்கு 8000 க்கு மேலான சொற்களையும், உரையாடல்களையும் பேசாமல் இருக்க முடியாது. ஏனென்றால் அவர்களின் மூளை வடிவமைப்பு ஆதிகாலந் தொடங்கியே அப்படியாகிவிட்டது.
ஆதிகாலத்தில் பெண்கள் குகைகளில் வாழும்போது தங்கள் குழந்தைகளுடனும்; தங்கள் குழுக்களுடனும்; உணவு தேடச் சென்ற ஆண்கள் திரும்பி வரும்வரை அவர்கள் குறித்தோ! தங்கள் வாழ்க்கை குறித்தோ பேசிக்கொண்டேயிருந்தனர். ஓர் ஆண் உணவைத் தேடுபவன். பிரச்சினையைத் தீர்ப்பவன். அவன் உயிர் வாழ இவைதான் முக்கியமானவை. ஒரு பெண் கூட்டைக் காப்பவள், அடுத்த தலைமுறைக்காக உயிர் வாழ்வதை உறுதி செய்வதுதான் அவளது கடமை. ஒவ்வொரு சிறிய விஜயத்தைப் பற்றியும் அவள் தொடர்ந்து பேசுவதற்கான காரணம், அவளது வாழ்க்கையே அந்தச் சிறிய விஜயங்களின் ஒரு கூட்டுத் தொகுப்பாக ஆகிவிட்டதுதான். பிள்ளைகள், அவர்களின் பிரச்சினைகள், அவர்களின் எதிர்காலம், தன்நிலை, தனது எதிர்காலம் என்று அவள் ஆணைத் தூண்டுகிறாள். ஆண் அவளைப் போன்று பேசமுடியாமல்; தன் வேலை என்றே குறியாக இருக்கின்றான். ஆண் உணவு தேடுபவன் என்பதால் வேட்டையில் ஈடுபட்ட ஆண் குழுக்களுக்கிடையே பேச்சுக்கு இடமில்லை. அவர்கள் ஒரு விலங்கு அகப்பட நாள் கணக்கில் பாறை மீதோ, மரத்தின் மீதோ அமர்ந்து கண்காணித்து வேட்டையாட வேண்டும். இல்லையென்றால் அன்று அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் உணவு இல்லை. இதனடிப்படையில் ஆணின் பேச்சுத்தளம் மூளையில் குறைவாகவே அமைந்துவிட்டது. இங்கே ஆணுக்காகவும் சேர்ந்து பெண்ணே பேசுகின்றாள். போனவன் வருவானா? அவனுக்கு ஏதேனும் தீயது நடந்திடுமா? அப்படி நடந்தால் நம் கதி? குழந்தைகளின் கதி? என்று புலம்புகின்றாள். ஆண் இந்த நேரத்தில் வருவதாகச் சொல்லிச் செல்கின்றான். அவனால் தான் சொல்லிய நேரத்தில் உடனடியாக வீடு திரும்ப முடிவதில்லை. இதனால் ஆண் தாமதத்திற்கான காரணத்தை விளக்க நிறைய பொய் சொல்ல வேண்டியிருக்கின்றது. இவன் பொய் பேசுகின்றான் என்பதைப் பெண் அறிகையில் அவள் அழுகின்றாள். பெண் பேசுவதற்கும், அழுவதற்கும் காரணங்கள் தேவையே இல்லை. அவள் நினைத்தால் அழுதிட முடியும்.
பெண்கள் ஏன் இவ்வளவு அதிகமாகப் பேசுகிறார்கள், அதுவும் பெரும்பாலும் நேரடியாகப் பேசாமல் சுற்றிவளைத்துப் பேசுகிறார்கள். அவள் குழந்தை பெறுபவளாகவும், கூடுகளைக் காப்பாற்றுபவளாகவும் பரிணமித்து உருவெடுத்துள்ளாள். இதன் விளைவாக, பெண்களின் மூளைகள், தம் வாழ்வில் உள்ளவர்களைக் கவனித்துப் பேணவும், உணவூட்டவும், அன்பும் அக்கறையும் செலுத்தவும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு உள்ளன. ஆண்களோ ஒரு முற்றிலும் வேறுபட்ட பணிக்கென உருவெடுத்தனர். அவர்கள் வேட்டையாடுபவர்களாக, விரட்டுபவர்களாக, பாதுகாப்பவர்களாக, பொருள் ஈட்டித் தருபவர்களாக,, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பவர்களாக வடிவெடுத்துள்ளனர்.
ஒரு பெண் மூளை ஒரே சமயத்தில் பல்வேறு விஜயங்களில் ஈடுபடுவதற்கெனப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் நான்கு அல்லது ஐந்து பந்துகளை அவளால் காற்றில் வீசியெறிந்து விளையாட முடியும். ஒரு கம்ப்யூடடர் புரோகிராமை ஓடவிட்டுக் கொண்டே. தொலைபேசியில் பேசிட முடியும். அதேவேளையில் தனக்குப் பின்னால் என்ன உரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்றும் கவனிக்க முடியும். ஒரே ஒரு உரையாடலில் பல தொடர்பற்ற விஜயங்களைப் பற்றி அவளால் பேச முடியும். அவ்வாறு பேசும்பொழுது விஜயங்களை மாற்றுவதற்கோ அல்லது தான் கூறும் கருத்தை வலியுறுத்துவதற்கோ அவளால் ஐந்து குரல் ஒலிகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்த முடியும். இவற்றுள் மூன்றே மூன்று ஒலிகளை மட்டுமே ஆண்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியும். இதன் விளைவாக, பெண்கள் பேசுவதைக் கவனிக்கும்பொழுது அவர்கள் மையக் கருத்தைப் பல சமயங்களில் ஆண்கள் கோட்டைவிட்டு விடுகின்றனர்.
பெண் கேட்கும் கேள்விக்கு ஆண் ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்வான். ஆனால் பெண்கள் விரிவான அவர்கள் எதிர்பார்க்கிற விளக்கங்களை ஆண் விவரிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர். இது நடைபெறாமல் போகையில் பெண் அழுகின்றாள். ஆண் செய்வதறியாது திகைத்துப் போய் அமைதியாகி விடுகின்றான். இந்த நூல் முன்வைக்கும் கருத்து ஆண் வேறு பெண் வேறு என்பதே.
ஆண் வேறு! பெண் வேறு!
ஆண்களின் மூளைகள் தீர்வை மையம் கொண்டவை. பெண்களின் மூளைகள் செயல்பாட்டை மையம் கொண்டவை. ஒரு பெண் பேசுவதற்கான முக்கியக் காரணம் பேசுவது மட்டுமே. தனது அன்றைய தினத்தைப் பற்றி உங்களிடம் பேசுவதும், உங்களுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வதும் தானே தவிர, அவள் பேசுவதற்குத் தீர்வு வேண்டி அவள் பேசுவதில்லை. ஆண் அங்கு என்ன பேசுகிறான் என்பது முக்கியமல்ல. அவன் பங்கு கொள்வது மட்டுமே முக்கியம். பெண்கள் சராசரியாக ஆண்களை விட ஏழு ஆண்டுகள் அதிகமாக வாழ்கிறார்கள். இதன் காரணம் அவர்களால் அழுத்தத்தை நன்றாகச் சமாளிக்க முடிவது தான். ஆண்கள், பெண்கள் இருவருமே மிகைப்படுத்துகிறார்கள். வேறுபாடு என்னவென்றால் ஆண்கள், உண்மைகள், புள்ளி விபரங்கள் இவற்றை மிகைப்படுத்துகிறார்கள். பெண்களோ உணர்ச்சிகளை மிகைப்படுத்து கிறார்கள். ஆண்களின் மூளைகள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கென உருவானவை! பெரும்பாலான ஆண்கள் சொல்வதற்கு ஏதாவது இருந்தால் மட்டுமே பேசுவார்கள். இது பெண்களிடம் பேசும் பொழுது தீவிரமான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. ஏனெனில் பெண்களின் ‘பேச்சு’ முற்றிலும் வேறுபட்டது. பெண்களின் பேச்சு, ஒரு பரிசாகவும், மற்றொரு நபருடன் தொடர்பும் பிணைப்பும் ஏற்படுத்திக் கொள்வதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாகச் சொல்வதானால் அவளுக்கு உங்களைப் பிடித்திருந்தால் அல்லது அவள் உங்களை நேசித்தால், நீங்கள் சொல்வது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருந்தால், நீங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டவராக, முக்கியமானவராக இருப்பதாக உங்களை உணரச் செய்ய விரும்பினால், அவள் உங்களிடம் பேசுவாள். அவளுக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றால், அவள் பேசமாட்டாள்.
ஆண்கள் தெளிவான உத்தரவுகளை விரும்புகிறார்கள். ஆண்களைப் பொறுத்தவரையில் நேரடிப் பேச்சு மிகச் சரியானது. ஏனெனில் அவர்கள் அவ்வாறு தான் கருத்துத் தொடர்பு கொள்கிறார்கள். சுமார் நூறாயிரம் ஆண்டுகளாக ஆண்கள் காலையில் எழுந்து தமது குடும்பத்தினருக்கு உணவு தேடி வெளியில் சென்றுள்ளனர். மனித குலம் உயிர் வாழ்வதற்கு ஆணின் பங்களிப்பு வெகு தெளிவாகவும், எளிமையானதாகவும் இருந்து வந்துள்ளது. ஒரு உண்ணப்படக்கூடிய இலக்கைக் கண்டுபிடித்து அதை அடித்து வீழ்த்துவதாகும். இதன் விளைவாக அதை மட்டுமே வெற்றிகரமாகச் செய்வதற்காகச் சிறப்பாக உருவமைந்துள்ள சில பகுதிகளைக் கொண்டு அவனது மூளை வளர்ந்துள்ளது. அதற்கு காட்சி – இடைவெளிப் பகுதி என்ற பெயர். இது மேகங்கள், கோணங்கள், தூரங்கள் மற்றும் இடைவௌல் பற்றிய தொடர்பற்ற விஜயங்களை அளக்கப் பயன்படுகிறது. இதே பகுதிதான் நாகரீக ஆண்களால், காரைப் பின்னால் திருப்பி இணையாக நிறுத்துவதற்கும், வரைபடங்களை வாசிப்பதற்கும், ஒரு சாலையில் ஏற்கெனவே சென்று கொண்டிருக்கும் வண்டிகளுடன் இணைந்து கொள்வதற்கும், பந்து விளையாடவும், குறி வைத்து அடிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாகச் சொல்வதானால் இது மூளையின் வேட்டையாடும் பகுதியாகும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு ஆணின் பணி குறிப்பாக வேட்டையாடுவதாகும். பெண்கள் கூடுகளைப் பாதுகாப்பவர்களாகப் பரிணமித்து வளர்ந்துள்ளனர்.
உணர்ச்சிவசப்பட்ட பெண் நிதானமாக அதைப் பற்றி பேசுவதையே விரும்புவாள். ஒரு பெண் உணர்ச்சியோடு பேசும் போது அவள் வெளிப்படையான முக பாவங்களை, உடல் அசைவை, பல்வேறு தொனிகளை வெளிப்படுத்துவாள். தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆண் ஒரு பாம்பைப் போல சீறுவான், வார்த்தைகளைக்கொட்டுவான், முரட்டுத்தனமாக நடந்துகொள்வான். ஒரு பெண் தன் உறவுகளில் சந்தோஷமின்றி இருந்தால் அவளால் தன் வேலையில் கவனம் செலுத்த முடியாது. ஓர் ஆண் தன் வேலையில் சந்தோஷமின்றி இருந்தால் அவளால் தன் உறவுகளில் கவனம் செலுத்தமுடியாது. உலகெங்கும் உள்ள ஆண்களில் 70-80% தங்கள் வேலைதான் தங்கள் வாழ்வின் மிக முக்கியமான பாகம் என்று கூறுகிறார்கள். 70-80% பெண்கள் தங்கள் குடும்பம் தான் தங்கள் வாழ்வின் மிக முக்கியமான பாகம் என்று கூறுகிறார்கள். இதன் பலனாக மன அழுத்தமுள்ள சிக்கலான சூழலில் தனது கணவனுடன் பேசி நேரம் செலவழிப்பதை ஒரு பரிசாக பெண் கருதுவாள். ஆனால் ஓர் ஆண் அதையே பிரச்சினையைத் தீர்க்கச் செய்யும் முயற்சியில் ஒரு தடையாகக் கருதுவான். பேசி, அணைக்க அவள் விரும்புவாள். அவன் கால்பந்து விளையாட்டை இரசிக்க விரும்புவான். அவனது மூளை ஒரு பிரச்சினையைத் தீர்க்கும் எந்திரம். அது எப்போதும் ஓய்வெடுப்பதில்லை. ஒரு மருத்துவமனைக் கட்டிலில் அவன் சாகக்கிடந்தால் கூட இயற்கையான வெளிச்சத்தைப் பெறவும் ஜன்னல் வழியே வயல்வெளியைப் பார்க்கவும் அறையை மாற்றி அமைக்கும் முறைகள் பற்றித்தான் யோசிப்பான். ஆணும் பெண்ணும் வேறு வேறு. மேலானவர்களோ கீழானவர்களோ அல்ல – வேறுபட்டவர்கள் அவ்வளவுதான். விஞ்ஞானத்திற்கு இது தெரியும் என்று இந்நூல் நிறைவுபெறுகிறது. ஆண், பெண் இருவரின் குணநலன்களைத் தெரிந்து நெளிவு சுளிவுடன் வாழ இந்நூல் கட்டாயம் துணைசெய்யும் என்று நான் உறுதி கூறுகின்றேன்.
– வாசிப்புத் தொடரும்…[/hide]
இந்த இதழை மேலும்