August, 2019 | தன்னம்பிக்கை

Home » 2019 » August

 
  • Categories


  • Archives


    Follow us on

    உழைப்பு

    பானுப்ரியா
    நீலகிரி

    விதை தான் விருச்சமாகிறது
    உழைப்புதான் வெற்றியைத்தருகிறது
    சுடப்பட்ட தங்கம் தான் நகையாகிறது
    சோம்பரிலில்லா மனிதன் தான் வெற்றி பெறுவான்
    துன்பத்திலேயே உழன்றவனும் இல்லை
    இன்பத்திலேயே மிதந்தவனும் இல்லை
    இரண்டும் கலந்ததே வாழ்க்கை
    இதுவே உலகத்தின் இயற்கை

    உன்னையே பட்டை தீட்டிக்கொள்
    வைரமாக ஜொலிரிப்பாய்
    உறுதியோடு போராடு
    உலகையே வெல்வாய்
    மரமில்லாமல் கனியில்லை
    விளக்கில்லாமல் ஒளியில்லை
    வலிரியில்லாமல் வழியில்லை
    உழைப்பில்லாமல் வெற்றியில்லை

    விழித்திருக்கும் போது கிடைக்காத விடைகள்
    உறக்கத்திலா கிடைக்கும்
    சிறு துளி பெரு வெள்ளம்
    உன் முயற்சி உலகையே வெல்லும்
    நம்பிக்கை கொள்
    நட்சத்திரமும் நண்பனாகும்

    பயணமும் உடையும்

    காலத்தே பயிர் செய்வதுபோல் நாம் பருவத்தை உணர்ந்து நம் பயண உடைகளை தேர்வு செய்ய வேண்டும். வெய்யில் காலங்களில் மெல்லிய பருத்தி மற்றும் கதர் உடைகளை அணியலாம். இதுவே மழை அல்லது குளிர் காலத்தில் கொஞ்சம் தடிமனான உடைகளை அணியலாம். பிரயாண நேரங்களில் நாம் எளிமையான உடைகளை (Casual) அணியலாம். உதாரணமாக, ஆண்கள் டி-சர்டும் பைஜாமாவும் அணியலாம். பெண்கள் சுடிதாரைத் தேர்வு செய்யலாம். பிரயாணங்களில் உடலை இறுக்கிப்பிடிக்கும் உடைகளை அணியக்கூடாது.

    பயணக் காலங்களில் அதிகமான உடைகளை அள்ளிப்போட்டு தூக்கிக்கொண்டு திரிவது நல்லதல்ல. பயண நாட்களுக்கு ஏற்ப, தேவையற்ற அதிகப்படியான உடைகளைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக, அடர் நிறத்தில் பேன்ட்களை வைத்துக்கொண்டு அவற்றை இரண்டு நாட்களுக்கு ஒன்று என்ற விதத்தில் அணிந்துகொள்ளலாம். மேலும், இலகுவாக துவைத்துக்கொள்ளும் விதமாகவும் துணிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

    அதே சமயம் நமக்குத் தேவையான உள்ளாடைகளை போதுமான எண்ணிக்கையில்  வைத்துக்கொள்ள வேண்டும். உள்ளாடைகளை ஒரு நாளைக்கு ஒன்று என்ற விதத்தில்தான் பயன்படுத்த வேண்டும். போட்டதையே துவைக்காமல் போடுவதால் தோல் பிரச்சனைகளுக்கு நாம் வரவேற்பு அளிக்கும்படி ஆகிவிடும்.

    அப்புறம், பயணங்களில் குளிக்கத் தேவையான துண்டுகளை ஒன்றுக்கு இரண்டாக வைத்துக் கொள்வது நல்லது. அந்தத் துண்டுகளும் இலகுவாகத் துவைத்து, விரைவாக காயும்படியாக பருத்தியால் ஆன மெல்லிய தன்மையானதாக இருக்க வேண்டும்.  பிரயாணங்களில்  ஜன்னலோரம் வீசும் காற்றுக்கு காது பிரச்சனைகள் உள்ளவர்கள் காது கவசங்கள் அல்லது மஃளர் அணிந்து கொள்ளலாம்.

    அதே போல், நீண்ட தூரப் பிரயாணங்களில் கால்களில் ஷூவையும் இறுக்கமான காலுரையையும் போட்டுகொண்டு செல்வது நம் கால்களின் இரத்த ஓட்டத்தை பாதிக்கும். இதற்கு பதிலாக காலணிகளை அல்லது இலகுவாக கழட்டக்கூடிய கட் ஷூவையும் குட்டை காலுறையையும் அணியலாம். குளிர்கால பிரயாணங்களில் கையுறையையும் அணிந்து நம் தேக வெப்பத்தைக் காத்து குளிரை விரட்டலாம். மழைக்கால பிரயாணங்களில்  ஜெர்க்கின் அணிந்து கொள்ளலாம்.

    இந்த இதழை மேலும்

    டெக் குவாண்டோ

    கொரியாவில் அறிமுகமான ஒரு தற்காப்புக் கலை தான் இந்த டெக் குவாண்டோ. இக்கலை தற்காப்பு, உடற்பயிற்சி போன்றவற்றிற்கு பெரிதும் பயன்படுகிறது. டெக் குவாண்டோ கலை கால்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது கால்களைப் பயன்படுத்தியே அதிகம் விளையாடப்படுகிறது. டெக் குவாண்டோ மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆகவே, இக்கலையைக் கற்றுக்கொள்ள பலரும் முன்வருகின்றனர். அதில் ஒருவர் தான் சாய்ஹரினி என்ற பள்ளி மாணவி. சாய்ஹரினி இந்தக் கலையில் தேர்ச்சிப் பெற்று பல்வேறு சாதனைகள் புரிந்திருக்கிறார். சாய்ஹரினி இந்தக் கலையில் பங்கு கொண்ட விதத்தையும் மற்றும் டெக்கு வாண்டோவினால் அந்த மாணவிக்குக் கிடைத்த நன்மைகளைப் பற்றியும் கலையின் பயிற்சியாளர் சுஜி அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

    அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி சாய்ஹரினி. தந்தை இழந்த இவரை இவர் தாய் தான் வளர்த்து வருகிறார். பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சார்ந்தவர். சாய்ஹரினி படித்து வரும் அரசுப் பள்ளியில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு அரசு திட்டத்தின்படி டெக் குவாண்டோக் கலை கட்டாயப் பயிற்சியாக அளிக்கப்படுகிறது. அந்தப் பயிற்சியின் பொழுது சாய்ஹரினி சிறப்பாகவும் சென்மையாகவும் செயல்பட்டதால் நாங்கள் அவரைத் தேர்ந்தெடுத்தோம்.  அதன் பிறகு மூன்று மாத காலம் சிறப்பாகப் பயிற்சி அளித்தோம்.  தற்போழுது அவர் தொடர்ந்து வெற்றிபெற்றுக் கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் அவரின் கடுமையான உழைப்பும், சாதிக்க வேண்டும் என்ற உந்துதலும் தான் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

    சேலத்தில் நடைபெற்ற ஓப்பன் சாம்பியன்சிப் போட்டியில் ஆறு சுற்றுக்கள் நடைபெற்றது.  இறுதியாக அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றார். மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரில் இவர் அரையிறுதி சுற்று வரை முன்னேறியுள்ளார். இவரது கடும் பயிற்சியே இச்சாதனைக்குக் காரணமாக அமைகிறது.

    டெக் குவாண்டோ ஒரு தற்காப்புக் கலை என்பதால்  அரசு பள்ளிகளில் இது கட்டாயப் பயிற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பயிற்சியில் ஈடுபடும் பொழுது சாய்ஹரினிக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது இதன் காரணமாக இந்தப் பயிற்சியில் கலந்து கொள்வதும் அதன் தொடர்பான போட்டிகளில் கலந்து கொள்வதும் என்று தன்னை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொண்டார். ஆர்வம் மேம்பட்டு இக்கலையில் பங்குகொண்டாலும் தான் ஒரு பெண் என்னும் பட்சத்தில் டெக்கு வாண்டோ அவருக்கு மிகவும் துணை புரிந்தது. பெண்களுக்கு நடக்கும் சீண்டல்களின் போது அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மிகுந்த துணை என்ற விதத்தில் சாய்ஹரினிக்கு இக்கலையானது அதிக ஆர்வத்தை ஊட்டியது என்றே கூறலாம்.

    தற்பொழுது சாய்ஹரினி இக்கலையில் நன்கு தேர்ச்சி பெற்று மாநில அளவிலான பதக்கத்தைப் பெற்றுள்ளார். மேலும் அவர் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் பெறும் பொழுது அரசுத் தரப்பில் இருந்து ரூபாய் மூன்று இலட்சம் தரப்படுகிறது. இதைத்தவிர முதலமைச்சர் கோப்பை பெற்றால் ரூபாய் இரண்டு இலட்சம் அரசு சார்பாக அளிக்கப்படும். இவ்வாறு சாதித்துப் பெற்ற சான்றிதழ்களைப் பயன்படுத்தி மேற்படிப்பிற்குச் செல்லும் போது கல்லூரிகளில் விளையாட்டுக் கோட்டாவில் சேர்ந்து பயன் பெறலாம்.

    மன உறுதி, மன ஒருமைப்பாடு, அன்றாடம் நாம் செய்யக் கூடிய வேலைகளை சரியாகவும் முறையாகவும் செய்யக் கற்றுக்கொள்ளலாம். இப்பயிற்சியின் மூலம் அதிகாலையில் எழுந்து புத்துணர்ச்சியுடன் அந்த நாளை கழிப்பதற்கான ஒரு உத்வேகம் நம்மிடம் கிடைக்கும். பெண்களுக்கு அதிகமான உறுதுணையை அளித்திடும். மன ஒருநிலைப்பாட்டின் காரணமாக கல்வியில் சிறந்து விளங்குவதற்கும் இக்கலையானது பெரிதும் உதவுகிறது.

    சாய்ஹரிணிக்கு ஒருநாளைக்கு காலை மற்றும் மாலை என இரண்டு நேரங்களிலும் பயிற்சி செய்து வருகிறார்.  பொருளாதாரம் சம்மந்தமான ஒத்துழைப்புக்கு குடும்ப உதவிகள் இல்லாவிடினும் பயிற்சியாளர்களின் மூலம் ஒத்துழைப்புக் கிடைக்கிறது.  குடும்ப நபர்களின் மூலமாக ஒரு நல்ல ஊக்குவிப்புக் கிடைத்தது என்றே கூறலாம்.

    இந்த இதழை மேலும்

    மழையில் மூழ்கிய மாநகரம்..

    கொட்டித் தீர்த்த மழை மும்பையில் பெரும் அழிவை ஏற்படுத்தி உள்ளது. கடுமையான வெப்பமும், குடிநீர்த் தட்டுப்பாடும் நிலவிய கோடை காலத்தில் இருந்து பருவ மழைகாலத்திற்கு உள்ள மாற்றம் என்றாலும் இப்படி ஒரு மழையை மும்பை எதிர்பார்க்கவில்லை. மும்பை  மாநகரம் திகைத்துப் போய் நின்ற நாட்களாக இருந்தன ஜூலை மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வாரங்கள்..காலநிலை முன்னறிவிப்புகளையும் கூட தாறுமாறாக்கி விட்டுப் பெய்த பெரு மழையில் இந்த நகரம் உண்மையில் நிலை குலைந்து நின்று போனது.

    மக்களின் இயல்பான அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு பல உயிரிழப்புகளும் சம்பவித்தன. ஆயிரக்கணக்கான சாதாரண மக்களின் வாழ்வாதாரமும் பறிபோய் உள்ளது. கோடிக்கணக்கான ரூபாய்நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அணைக்கட்டும் மதில்சுவர்களும் இடிந்து விழுந்ததால் தான் பெரும்பாலான மரணங்களும் ஏற்பட்டுள்ளன.

    ஏறக்குறைய 2000 பேர்களை நிவாரண முகாம்களுக்கு அனுப்ப வேண்டி நேரிட்டது. தாழ்வான பகுதிகளான குர்லா, சயான், தாதர், டாட்கோபர், மலாட் ஆகிய இடங்களில் இருந்து மக்கள் நிவாரண முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வெள்ளப் பெருக்கு குறைந்த பிறகு தான் பலராலும் அவரவர்களின் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல முடிந்தது. வீடுகளை இழந்தவர்களும், மற்ற விதங்களில் பாதிக்கப்பட்டவர்களும் எல்லாம் இப்போதும் மகாராஷ்டிரா அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள நிவாரண முகாம்களில் தான் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சிலர் சொந்தக்காரர்களின் வீடுகளில் வசித்து வருகின்றார்கள். ஐந்து நாட்கள் தொடர்ச்சியாகப் பெய்த மழையை இந்தியாவின் நுழைவாயில் நகரத்தால் தாங்க முடியவில்லை.

    மழை நின்றாலும் ரயில் பாதைகளில் வழிந்தோடிய தண்ணீரின் அளவு குறையாதன் காரணமாக ரயில் போக்குவரத்துத் தொடங்க நாட்களானது. எஜின்களில் தண்ணீர் புகுந்ததால் உள்ளூர் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. பெரு வெள்ளப் பெருக்கிற்குச் சமமான ஒரு நிலைமை தான் மும்பையில் சம்பவித்துள்ளது.

    ரயில்சாலை, விமானப்போக்குவரத்து ஆகியவை எல்லாம் முழுமையாகப் பாதிக்கப்பட்டது. ஏற்கனவே ஏற்பட்ட பெருமழையால் தவிப்புக்கு உள்ளான சாதாரண மக்களின் வாழ்க்கை போக்குவரத்தில் ஏற்பட்டநெருக்கடிகளால் மேலும் துயரம் அடைந்தது. ஜூலை மாதத்தில் முதல் வாரத்தில் பெய்த மழை கால நிலை ஆய்வாளர்களையே ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்தது. 9 மணிநேரங்களுக்குள் அங்கு பெய்த மழையின் அளவு 375.2 மி.மீஆகும். இரண்டு நாட்களில் மட்டும் 540 மி.மீமழை பெய்தது.

    2005 ல் ஆயிரக்கணக்கானவர்களின் உயிரை பலி வாங்கிய பெருமழைக்குப் பிறகு இந்த அளவிற்குப் மழை பெய்துள்ளது இப்போதுதான். கனமழையின் காரணமாக பொது விடுமுறை வழங்கப்பட்டது. மும்பையைத் தவிர நவீன் மும்பை, கொங்கன், தானே பிரதேசங்களிலும் பெருமழை பெய்தது. மும்பையில் இருந்து 275 கி.மீ தொலைவில் உள்ள திவாரி அணைக்கட்டு தான் மழையால் உடைந்து போனது. இந்தத் திடீர்வெள்ளப் பெருக்கல் 7 கிராமங்கள் தண்ணீருக்கு அடியில்மூழ்கிப்போயின. பெருவெள்ளப் பெருக்கில் மூன்று உள்ளூர் ரயில்கள் மூழ்கிவிட்டன.

    இந்த இதழை மேலும்

    ஆசையும் இயக்கமும்

    வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமா? தன்னிறைவு வேண்டுமா? இன்பம் வேண்டுமா? மகிழ்ச்சி வேண்டுமா? வேண்டுமென்றால் நான் சொல்வதை மாட்டேன் என்று சொல்லாமல் அதைச் செய்தால் ஆயுள் முழுக்க என்றும் நிம்மதி கிடைக்கும்.

    இதோ நீ ஒரு கொலை செய்ய வேண்டும். ஐய்யோ, இதுவா முடியாது என்று பதில் சொல்லிவிடாதே கண்டிப்பாக செய்து தான் ஆக வேண்டும். இக்கொலை செய்வது கடினமாகக்கூட உனக்கு இருக்கலாம். வாழ்க்கையை வென்று முடிக்க ஆசையைக் கொன்று முடிக்க வேண்டும். வாழ்வில் வெல்ல ஆசை, காமம் போன்றவற்றை கொல்ல வேண்டும் கொன்றால் வெல்லலாம்.

    எதைக் கொடுத்தாலும் ஒருவனிடமிருந்து வருகிற பதில் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நிம்மதியைக் கொடுத்துப்பாருங்கள். என்ன பதில் வேண்டுமானாலும் வரும், வேண்டாம் என்கிற பதில் மட்டும் வாயிலிருந்து வராது.

    இயங்குவது வேண்டுமானால் நீயாக இருக்கலாம். ஆனால் இயக்குவதும் நீயாகத்தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உனக்கு நல்லது. இயக்குவதும் இயக்குவதை இயக்குவதும் நீயாகத்தான் இருக்க வேண்டும். இயங்கினால் மட்டும் போதாது. இயக்கியதும், இயக்கியது இயக்கியபடி இயக்குவதும் நீயாகவும், சரியாகவும், முறையாகவும் இருக்க வேண்டும்.

    எதையும் உன் அறிவில் சுயமாக சிந்தித்து சுயமாக என்றும் முடிவெடுக்க வேண்டும். சுய இயக்கம் வலிமையானதாக இருந்தால் நீ வலிமையானவனாய் இருப்பாய். அப்பொழுது செயலில் உன் புறத்தாக்கமும் வலிமையானதாக இருக்கும்.

    சுய இயக்கம் ஒருவனது ஆற்றலை அதிகரிக்கும் ; மேன்மையைக் கொடுக்கும். ஜோசியம், ஜாதகம், கைரேகை போன்றவைகள் உன்னை இயக்குவதாக இருக்கக்கூடாது. இயக்கினாலும் அதன் வழி இயக்கினாலும் உன் வாழ்க்கை வீண்; இளமை வீண்; காலம் வீண்; வெற்றியும் வீண்;அனைத்தும் வீண்.

    குரு பெயர்ச்சியை நம்பாதே. உன் முயற்சியை நம்பு. குருபெயர்ச்சியை நம்பினால் அதுதான் இடம் மாறும், நீ இடம்மாற மாட்டாய். இருந்த இடத்திலேயே தான் இருப்பாய்.

    நேரம் நல்ல நேரம்

    எல்லா நேரமும் நல்ல நேரம் தான். நேரம் என்றாலே நல்ல நேரம் என்று தான் அர்த்தம். நேரத்தில் கெட்ட நேரம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை.

    இந்த இதழை மேலும்

    பழிக்குப்பழி பயனற்றது

    ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களது வாழ்வில் ஏதோ சில, மிக சிறப்பான, அற்புதமான விஷயங்கள் தானாகவே தேடி வந்திருக்கும். அவர்கள்தான் அதை நினைத்து பார்ப்பதில்லை. பொருட்படுத்துவதில்லை. அதன் மகத்துவம் அறிவதில்லை.

    உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ, எதன் மீதோ, மிகத்தீவிர அதீதமான ஆசை இருக்கவே செய்கிறது. பணம், பதவி, அதிகாரம் என  பெரிய அளவில்  ஆசைப்பட்டவர்கள் பெரிய அளவில் முன்னேறுகிறார்கள்.  சிறிய ஆசைகளே குறிக்கோள்களே வாழ்வில் நம் சிறகுகளை முடக்கி விடுகிறது. சிறிய ஆசை, சிறிய இலக்குகள் மிகச்சிறிய வாழ்வைத்தான் அமைத்துத் தருகிறது.

    சூரியனை சுற்றி பூமி வலம் வருவது போலவே, மனிதனுக்கு எதன் மீது அதிக ஆசையோ, அதைச் சுற்றியே தன்னை அறியாமல் வாழ்நாள் முழுவதும் வலம் வருகிறான் என்பது உண்மை.

    நம் நிறம் வாழ்நாள் முழுதும் நம்மால் மாற்றிக் கொள்ள முடியாதது. ஆனால், தீயப் பழக்கங்களை தவிர்த்து உடற்பயிற்சியின் மூலம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அது நம் கையில்தான் உள்ளது.

    நேர்மறையான நல்ல, எளிமையான விஷயங்களுக்கு உலகில் அதிக கவர்ச்சி ஈர்ப்பு இருப்பதில்லை. எதிர்மறையான தீய விஷயங்களுக்கு வரவேற்பு ஏராளமாய் அபரிதமாய் இருக்கிறது. ஊடகங்களும் அதில்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றன.

    நூறு சதவிதத்திற்கு இலக்கு வைத்தால் தான் நாற்பது சதவீதமாவது அடைய முடிகிறது. அந்த நாற்பது சதவீதத்தை எட்டுவதற்கே நூறு சதவீதத்திற்கு இலக்கை நிர்ணயிக்க வேண்டியுள்ளது. மலையளவு முயற்சி செய்தால் தான் துளியளவாவது முன்னேற முடிகிறது. துளியளவு முன்னேறவே மலையளவு முயற்சிக்க வேண்டியுள்ளது.

    பட்டம், பதவி, பணம், திருமணம், குழந்தை, சொந்த வீடு, அதிகாரம் என்று நாம் விரும்பிய ஆசைப்பட்ட ஏதேதோ கிடைத்துவிட்டால் மட்டும் சந்தோஷமாக இருக்கிறோமா என்றால் அதுதான் இலலை. புதிய இலக்குகளுடன் ஏக்கங்களுடன் ஏதோ முடிவில்லாத போராட்டத்துடன் வாழ்வு நகர்கிறது.

    இன்றைய நவீன உலகில், பைக், கம்ப்யூட்டர், வண்ண தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றை நாம் மிகச்சாதாரணமாகப் பயன்படுத்துகிறோம். நம் முன்னோர்கள் காலத்தில் இத்தகைய நவீன வசதிகள் இல்லவே இல்லை.

    மனிதன் தான்; விரும்பியதை, ஆசைப்பட்டதை அடைய முழுமூச்சுடன் செயலாற்றும் போது அது கஷ்டமாக தெரிவதில்லை. வெற்றி பெற்றபின் சிலர் பாராட்டு மழையில் நனைக்கும் போது, தன்னை மறந்து, கண்மண் தெரியாமல் நடந்து கொள்கிறான். நம்மைவிட வலியவர்கள் நம்மை குட்டும்போதுதான் நம் நிலை நமக்குப் புரிகிறது. வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் போராட்டங்கள், பிரச்சினைகள், நெருக்கடிகள் நம்மை வலிமை பெற வழிச் செய்கின்றன. எதிரிதான் நம் நரம்பை முறுக்கேற்றுகிறான். நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் நமது எதிர்ப்பார்ப்பை நிராகரிக்கும் போது அதைவிட பல மடங்கு உயரத்தை இலக்கை அடைவதற்கு மறைமுகமாக உதவுகிறார்கள். புதிய தடம் அமைத்துத் தருகிறார்கள். புதிய சிந்தனைக்கு முயற்சிக்கு வழிவகை செய்கிறார்கள்.

    பணி இழப்பு, திடிர் நோய்த்தாக்குதல், தொழிலில் நஷ்டம் என எவ்வளவோ சிக்கல்கள் நம்மை முடக்கி போடுகிறது. இது தவிர, நாம் நம்மை அறியாமலேயே நம்மை சுற்றி இருப்பவர்களிடம் வரம்பு மீறி நடக்க நேரிடும் போதுதான் மோதல்கள் உருவாகிறது.

    நம் வாழ்வு ஒரு நாள் முடியப் போகிறது. நாம் உயர்நிலை அடையவே ஆசைப்படுகிறோம். உயர்நிலை அடைந்து விட்டாலும் அதை தக்க வைத்துக் கொள்ளவும் திறமை வேண்டும். நாம் வீழ்த்தப்படாமல் இருப்பதற்கு நமக்கு கீழ் உள்ளவர்களின் அங்கீகாரமும் வேண்டியுள்ளது.

    ஜாதகப் பொருத்தம் பார்த்து செய்யப்பட்ட திருமணங்கள் சில விவாகரத்தில் முடிவதில்லையா? நியூமராலஜிபடி பெயரில் எழுத்துக்களை மாற்றிக்கொண்டு விட்டால் மட்டும் தொழிலில் நஷ்டம் ஏற்படுவதில்லையா? ராசியான எண் என்று வாங்கிய வாகனம் விபத்துக்குள்ளாவதில்லையா? ஜாதகம், ஜோசியம், நியூமராலாஜி, ராசியான எண், ராசியான கற்கள் நம் வாழ்வை எப்படி மாற்றியமைத்து விட முடியும்?  ஆனாலும் மனித நம்பிக்கை தொடர்கிறது.

    வாழ்க்கை என்கிற விளையாட்டில் எதிர் அணியை சந்திக்க வேண்டியுள்ளது. வெற்றி பெற்றால்தான் வாழ்வு. அரசியலில் எதிர்க்கட்சியை சந்திக்க வேண்டியுள்ளது. தொழிலில், வாழ்வில் நமக்கு எதிராக ஒரு அணி இருக்கவே செய்கிறது. நம் பணியை தரமாகச் செய்தால் பலன் நிச்சயமாக உண்டு. நம் அணி உறுதியாக வெற்றி பெறும்.

    இந்த இதழை மேலும்

    அதிவிரைவு செயல்திறன் குறைபாடு

    அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கும் குழந்தைகளில் இருந்து சில குழந்தைகள் முற்றிலும் வேறுபட்டு காணப்படுவர். அதாவது அக்குழந்தைகளால் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக சிறிது நேரம் கூட அமர முடியாது. அவர்கள் தங்களை ஏதாவது ஒரு விஷயத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர் களாகவே காணப்படுவர். அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக செய்து முடிக்க மாட்டார்கள். எதையும் செய்வதற்கு முன் அவர்கள் யோசிக்க மாட்டார்கள். இம்மாதிரிக் குழந்தைகள் வகுப்பறைகளில் சரியான கவனத்துடன் செயல்பட மாட்டார்கள். இவர்கள் மற்றவர்கள் கூறும் எந்த ஒரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள மாட்டார்கள்.

    இம்மாதிரி கவனமில்லாத மற்றும் உத்வேகத்தன்மை அதிகமாக வெளிப்படுத்தும் குழந்தைகளுக்கு ADHD என்ற குறைபாடு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

    காரணங்கள்

    இக்குறைபாடு ஏற்படுவதற்குப் பலவிதமான விஞ்ஞானப் பூர்வமான கோட்பாடுகள் மட்டுமே உள்ளன. அதன்படி மூளையில் ஏற்படும் சிறிதளவான பாதிப்பு கூட இந்நோய் ஏற்படுவதற்கு ஒரு காரணமாக உள்ளது. இக்குறைபாட்டிற்கும், வீட்டின் சூழ்நிலை அமைப்புக்கும் எந்த ஒரு தொடர்பும் இருப்பதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

    ADHDக்கு உண்டான தனிப்பட்ட குணாதிசயங்கள்

    இக்குறைபாடு கண்டறியப்பட்ட குழந்தைகளில் சில பிரத்தியேகமான குணாதிசயங்கள் காணப்படும். அவை பின்வருமாறு

    • கவனமின்மை
    • எண்ணங்களில் தடுமாற்றம்
    • எந்த ஒரு விஷயத்திலும் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்த இயலாமை
    • அதிகமான செயல்திறன், சுறுசுறுப்பு (Hyperactivity)
    • எதையாவது செய்ய வேண்டும் என்ற உத்வேகம் (Impulsivity)

    கண்டுபிடிக்கும் முறைகள், கவனமின்மை (Inattention)

    பின்வரும் அறிகுறிகளில் ஆறு அல்லது அதற்கும் மேற்பட்டவை தொடர்ச்சியாக ஆறு மாதங்களாவது இருந்து அவை அக்குழந்தையின் செயல்களில் பக்குவமின்மையை ஏற்படுத்தினால் அது ADHD ஆக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    • அடிக்கடி கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயங்களில் கவனம் செலுத்தாமல் இருத்தல், பள்ளி சம்பந்தமான வேலைகளில் அஜாக்கிரதையாகத் தவறிழைத்தல், மற்ற விஷயங்களில் தவறிழைத்தல்
    • பலமுறை தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தி வேலையை முடிக்க வேண்டிய இடங்களில் முடிக்க இயலாமல் சிரமப்படுதல் அல்லது விளையாட்டு சம்பந்தமான செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட முடியாமல் இருத்தல்.
    • பலமுறை அவர்களுடன் நேரடியாக பேசும் போது அதை உற்றுக் கேளாமல் இருத்தல்
    • பலமுறை குறிப்புகள் அளித்தும் அதன்படி நடக்காமல் இருத்தல் மற்றும் பள்ளியில் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வதிலிருந்து தவறுதல்.
    • பலமுறை ஒழுங்குபடுத்தி முடிக்க வேண்டிய வேலைகள் மற்றும் செயல்களில் சிரமப்படுதல்
    • தொடர்ச்சியாக மனதை ஒருநிலைப்படுத்தி ஈடுபடும் வேலைகளை அடிக்கடி தவிர்த்தல் அல்லது தயக்கம் காட்டுதல். எ.கா. பள்ளிக்கூட வேலைகள், வீட்டுப்பாடம் செய்தல்.
    • ஏதாவது ஒரு வேலையை முடிப்பதற்கு தேவையான பொருட்களை அடிக்கடி தொலைத்தல். உதாரணமாக பென்சில், புத்தகம், பேனா, பொம்மைகள்.
    • தினசரி செய்யும் செயல்களை அடிக்கடி மறந்து போதல்
    • அடிக்கடி கவனத் தடுமாற்றம் ஏற்படுதல்
    • அதிகமான செயல்திறன் (Hyperactivity)
    • ஒரே இடத்தில் தொடர்ச்சியாக அமர்ந்து அவர்களால் வேலை செய்ய இயலாதிருத்தல்.
    • வகுப்பறையில் உட்கார்ந்த இடத்தில் இருந்து அடிக்கடி எழுதல் அல்லது ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதற்குச் சிரமப்படுதல்.
    • விளையாட்டுப் பயிற்சிகளில் பங்கேற்பதிலும், அமைதியாக ஈடுபட வேண்டிய செயல்களை முடிப்பதிலும் பலமுறை சிரமப்படுதல்.
    • அடிக்கடி தேவையில்லாமல் அதிகமாகப் பேசிக்கொண்டிருத்தல்
    • உத்வேகத்தன்மை (Impulsivity)
    • பலமுறை கேள்வி கேட்டு முடிக்கும் முன்பே யோசனையின்றிப் பதிலளித்தல்
    • பலமுறை எதையும் காத்திருந்து முறைப்படி செய்வதில் கஷ்டப்படுதல்.
    • அடிக்கடி மற்றவர்களைத் தடை செய்தல் அல்லது இடையூறு விளைவித்தல்.
    • சில அதிக செயல்திறன் – உத்வேகம் அல்லது கவனமின்மை அறிகுறிகள் ஏற்படுத்தும் குறைபாடுகள் 7 வயதுக்கு முன்னதாகவே காணப்படும்.
    • சில பேருக்கு அறிகுறிகளால் ஏற்படும் பிரச்சனைகள் 2 அல்லது அதற்கு மேற்பட்ட சூழ்நிலைகளிலும் காணப்படும் (எ.கா. பள்ளி மற்றும் வீடு)
    • சமுதாயம், கல்வி மற்றும் வேலை போன்றவற்றில் குறைபாடுகள் காணப்படும்.

    குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் ஆசியர்களை நேரடியாக அணுகுவதன் மூலம் குழந்தையைப் பற்றிய விஷயங்களை அறிந்து கொள்ள முடியும். எந்த மாதிரி சூழ்நிலைகளில் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதையும் அறிய முடியும்.

    இந்த இதழை மேலும்

    தடம் பதித்த மாமனிதர்கள்

    வீரம், விவேகம், புத்திக்கூர்மை மற்றும் பல்வேறு குணாதியங்களை ஒருங்கே பெற்ற உலகப்புகழ் மாவீரன் அலெக்சாண்டர் பற்றி இக்கட்டுரை விவரிக்கின்றது. இவனது பெயரை உச்சரிக்கும் போதே நமக்குள் ஒரு பெருமிதம் உண்டாவதை நம்மால் உணரமுடியும். ஏனென்றால் மனித இனமான நமக்குள் ஒரு சாதனையாளன் அவன் என்பதால் தான். ஒருவன் எத்தனை ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்தான் என்பது முக்கியமல்ல. ஒருவன் எப்படி வாழ்ந்தான் என்பது முக்கியமல்ல. ஒருவன் எப்படி வாழ்ந்தான் என்பதே முக்கியமாகும். தன்னுடைய 7 ம்  வயது தொடக்கம் முதல் அவனது 32 ம் வயது வரை அவன் நிகழ்த்திய நிகழ்வுகள் எக்காலத்திற்கும் அழியாதவை. நம்முடைய தமிழ்நாட்டில் பிறந்த மாமனிதர்கள் முறையே கவிஞர் பாரதியார் மற்றும் விவேகானந்தர் தங்களது 39 ம் வயதில் இம்மண்ணுலகை விட்டு மறைந்தாலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பது போல், இன்று வரை எவரும் தோன்றவில்லை, என்ற பெருமையுடன் மாவீரன் என்றால் அலெக்சாண்டர் ஒருவர் தான். அவரின் வாழ்க்கைக் குறிப்புகள் சிலவற்றை இக்கட்டுரைகள் பார்க்கலாம்.

    மகா அலெக்சாண்டர் பேரரசன் கி.மு 356 ம் ஆண்டு ஜீலை மாதம் 6 ம் நாள் மாசிடோனியாவின் தலைநகரான பெல்லாவில் இரண்டாம் பிலிப்பின் நான்காம் மனைவி ஒலிம்பியாவிற்கும் பிலிப்பிற்கும் மகனாய் பிறந்தார். அவர் பிறக்கப் போகும் தருணத்தில் நிகழ்ந்த சில குறிப்புகள், இவர் பிற்காலத்தில் உலகப்புகழ் மிக்கவன் ஆவான் என்பதற்கான அறிகுறிகள் என வரலாற்றுக் குறிப்புகள் குறிப்பிட்டுள்ளன.

    பிலிப்ஸின் குதிரை ஒன்று முதல் முதலாக குதிரை ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றது என்ற செய்தி.

    பிலிப்ஸின் படைகள் அது சமயம் நடந்த போரில் வெற்றி பெற்றதான செய்தி.

    இவரின் கனவில், சிங்கம் ஒன்று தன்னுடைய கேசத்தை சிலிர்த்து நின்ற காட்சி.

    ஒலிம்பியாவின் அருகில் அவர்களின் தெய்வம் பாம்புஉருவில் படுத்திருத்த காட்சி.

    போன்ற நிகழ்ச்சிகள் கண்டு மகிழ்ச்சியடைந்த பிலிப்ஸ் தன் மகனிற்கு அலெக்சாண்டர் என்று பெயர் சூட்டினான். அலெக்சாண்டர் என்றால் தெய்வீக குணமுடையவன் என்று பொருள்.

    அலெக்சாண்டரின் வீரச்செயல்கள் எண்ணில் அடங்காதவை. இவனது பத்தாவது வயதில், தேச்சாபி என்ற இடத்திலிருந்த வணிகர் ஒருவர், பிலிப்ஸ் மன்னனிடம் ஒரு குதிரையை விற்க வந்திருந்தான். அந்தக்குதிரை மிகவும் முரட்டுத்தனமாக யாருக்கும் அடங்காமல் இருப்பதை உணர்ந்து அம்மன்னன் அக்குதிரையை வாங்காமல் அனுப்பிவிட நினைத்தான். ஆனால் அலெக்சாண்டர், அந்த சிறுவயதிலேயே, அந்தக்குதிரை யாருக்கும் அடங்காமல் இருப்பதற்கு காரணம், சூரிய ஒளியில் ஏற்பட்ட தன்னுடைய நிழலைப் பார்த்து மிரட்சியால் அப்படி செய்கின்றது என்ற உண்மையை அறிந்து, அக்குதிரையை வேறு திசையில் திருப்பி அடக்கியதோடு மட்டுமல்லாமல், அதைப் பழக்கப்படுத்தினான் என்ற குறிப்புகளை புளூட்டாக் என்ன எழுத்தாளர் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தன் குறிப்பில், பிலிப்ஸ் மன்னன் தன் மகனிடம்.

    மகனே, நீ கண்டிப்பாக இந்த உலகத்தையே வெல்லப் போகிறாய். உன்னைப் பொருத்தவரையில் இந்த மாசிடோனியா மிகச்சிறியது, என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அலெக்சாண்டர் அந்தக்குதிரைக்கு பூசிஃபலாஸ் என்று பெயரிட்டான். அந்தக்குதிரை தான். அலெக்சாண்டரை இந்தியத் துணைக் கண்டம் வரை அழைத்துச் சென்றது. பிற்காலத்தில் வயோதிகம் காரணமாக, அதனுடைய முப்பதாவது வயதில் இறந்து போனது. அந்தக்குதிரையின் நினைவாக பூசிஃபலா என்று ஒரு நகரத்திற்கு அலெக்சாண்டர் பெயரிட்டான்.

    கிரேக்க நாட்டின் மாபெரும் சிந்தனையாளர் சாக்ரடீசின் மாணவன் பிளேட்டோவின் சீடர் அரிஸ்டாட்டில் அலெக்சாண்டரின் குருவாக பிலிப்ஸ் மன்னரால் நியமிக்கப்பட்டார். அதனால் அலெக்சாண்டர் மிகப்பெரிய வீரனாக மட்டுமல்லாமல், திறமை மிக்க ராஜதந்திரியாகவும், நீதிமானாகவும் உருவானான். இவன் சில இசைக் கருவிகளை மீட்டவும் கற்றுக் கொண்டான் பிலிப்ஸ் மன்னன், ஒரு போரில் ஈடுபட்டிருந்த சமயம் எதிரிகளின் சூழ்ச்சியால் கொலை செய்யப்பட்டான். அதனால், அலெக்சாண்டர் தன்னுடைய 20 வது வயதிலேயே மாசிடோனியாவின் மன்னரானான்.

    இந்த இதழை மேலும்

    நில்! கவனி !! புறப்படு !!! – 6

    ஆரோக்கியமே ஆனந்தம் ! (பாதை 5)

    வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் நண்பர்களே !

    “அனைத்திலும் சிறக்கும் ஆறு லட்சம் குடும்பங்கள்” – ஒரு ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்குவதே உங்கள் வண்ணமயமான வாழ்வுக்கு வழி காட்டும் வாழ்வியல் பயிற்சியாளரான  என் லட்சியம்.

    அந்த ஆனந்தக்குடும்பத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ள – இந்தத்தொடர் ஒரு இணைப்புப்பாலம்.

    ஆரோக்கியமே ஆனந்தம் !

    “உள்ளத்தை உறுதி செய்” என்ற வாசகம் போலவே “உடலினை உறுதி செய்” என்ற வாசகமும் தரணி ஆளும் ஆசை கொண்டவரின் தாரக மந்திரம்.

    WEALTH vs HEALTH என்ற போட்டியில் யாரோ ஒருவர் தான் ஜெயிக்கிறார்.

    WEALTH க்காக ஓடி ஓடி உழைத்து HEALTH ஐ இழந்தவர்களும் உண்டு.

    HEALTH க்காக கவனமாக இருந்து WEALTH ஐ இழந்தவர்களும் உண்டு.  மற்றுமொரு கூட்டம் WEALTH ஐ சேர்த்து அதை HEALTH ஐ பாதுகாக்கவே செலவிட்டது.

    வாழ்வில் ஜெயிக்கவும், வாழ்வையே ஜெயிக்கவும் “HEALTH ஐயும் WEALTH ஐயும் நீங்கள் போட்டியாக பாவிக்காதீர்கள்.  உங்கள் வெற்றிப் பயணத்தில் துணை வரும் உற்ற நண்பர்கள் என உளமார கொள்ளுங்கள்.  இந்த இருவருக்கும் நீங்கள் மிகுந்த மதிப்பும், முக்கியத்துவமும் கொடுப்பதில் தான் உங்கள் வெற்றி இருக்கின்றது.

    பெருமை கொள்ளுங்கள்.  உங்கள் வீடு, அலுவலகம், வங்கியில் இருக்கும் வைப்புத்தொகை, Locker ல் இருக்கும் நகைகள் – இவை அனைத்தும் ஒன்றாய் சேர்ந்த கலவையே உங்கள் வெற்றி.  ஞாயமான முறையில் சேர்த்த செல்வம் – நினைக்கும் போதே நெஞ்சம் நிறைவு பெறும்.  உங்கள் மொத்த சொத்தின் மதிப்பும் பார்க்கும் போதே பரவசம் பெருகும்.  அந்த நிறைவு நீடிக்க, ஆனந்தம் நீடிக்க மனதளவில் தயாராக இருக்கும் நீங்கள் – உடலளவிலும் தயாராக இருப்பது கட்டாயம்.

    ஓங்கி உயர்ந்த கட்டடம் – ஒரு காற்றுக்கு கீழே விழுந்தால் சரியா?

    ஓங்கி உயர்ந்த உங்கள் வாழ்க்கை – உடல் நலக்கேடு என்ற காற்றால் கலைய விடாதீர்கள்.

    பொருளாதார கணிதத்தில் இப்போதைய சூழ்நிலையில் கடன் பெறுவது சுலபம் – அதை அடைப்பது கடினம்.  உங்கள் பணத்திற்கு கிடைக்கும் வட்டி குறைவு – ஆனால் உங்கள் கடன் தொகைக்கு நீங்கள் கொடுக்கும் வட்டி அதிகம்.

    மருத்துவம் சேவை என்பது போய் – மருத்துவமனை தேவை என்பதும் போய் – இன்று நீங்கள் செய்யும் இத்தனை செலவுகளும் மருத்துவமனையின் தேவை என்று ஆகிவிட்டது நம் துரதிர்ஷ்டம்.

    மனிதர்களின் வாழும் ஆசை – வேறொரு விதமாக சொல்வதானால் – மனிதர்களின் உயிர் பயம், பல மருத்துவர்களை, மருத்துவ மனைகளை பணக்காரர்களின் பட்டியலில் Permanent ஆக இருக்க வைக்கிறது.

    மருத்துவத்திற்க்காக செலவிட்ட பணத்தின் சதவிகிதம் – மருத்துவமனைக்காக செலவிட்ட பங்கைவிட குறைவுதான் என்பதே கொடுமை.

    ஆகவே தான் சொல்கின்றேன்.  ஆரோக்கியமே ஆனந்தம் !

    உங்கள் முப்பதுநாள் சம்பாத்தியம், ஒரு முறை மருத்துவமனை சென்றால் – மூன்று நான்கு நாட்களில் செலவாகி விடுகின்றதே.  Intensive Care ல் இரண்டு நாள், General Ward ல் 3 நாள், மருந்துகள், மாத்திரைகள், Scan கள், சிறப்பு மருத்துவரின் சிபாரிசுகள் – இவை அனைத்தும் மூன்றே நாளில் உங்களை மூர்ச்சை அடைய செய்து விடுகின்றதே.  அதுமட்டுமல்ல – பத்து நாளுக்கு ஒருமுறை பார்த்துவிட்டு போகவும் என்ற “பாதுகாப்பு” எனும் போர்வையில் “பயமுறுத்தல்”, காலம் முழுவதும் உங்களை தங்கள் Customer ஆக ஆக்கும் அவர்களது தந்திரம் என்பது தான் அதிக சதவித நோயாளிகளின் அவல நிலைமை.

    விதிவிலக்குகள் உண்டு.  ஆம்!  Exemptions are there, But Exemptions are not Examples.

    அதனால்தான் சொல்கின்றேன் – ஆரோக்கியமே ஆனந்தம் !

    சுவர் இருந்தால் தான் சித்திரம் தீட்ட முடியும்.  உடல் ஆரோக்கியம் இருந்தால் தான், சுறுசுறுப்பாக இயங்க முடியும்.

    Pizza, Burger, குளிர் பானங்கள் என்று பலவற்றையும் உண்ணும்போது, உங்கள் உடலின் ஆற்றல் அவற்றை செரிமானம் செய்வதற்கே சரியாய் போய்விடுகின்றது.

    அதுவும் 100% முடியாமல் போனதால் தான் சிறு வயதிலேயே கண்களில் கோளாறு வந்து கண்ணாடி அணியும் துர்பாக்கியம்.

    அதிக எடை, உடல் முழுவதும் ஊளைச்சதை, 3௦ அடி தூரம் நடப்பதற்குள் மூச்சு வாங்குதல் போன்ற ஏராளமான உடல் உபாதைகள்.

    இவற்றை புறம்தள்ளி சத்துள்ள உணவுகளை உண்டால் ஆரோக்கியம் ஆயுள்வரை என்பதை உணருங்கள்.

    மனோபலமும் உடல் பலமும் ஒன்று சேர்ந்தால் உங்கள் வெற்றியை யார் தடுக்க முடியும்.

    இரண்டும் சேரும்போது நீங்கள் எப்போதும் “வெற்றியாளர் பகுதியிலேயே” (Achivers Zone) வாழ்வீர்கள்.

    சரி!  ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்.

    பயிச்சி முறை :

    1. காலை சிற்றுண்டி : நீங்கள் எத்தனை Busy யாக இருந்தாலும் காலை உணவை தவிர்க்காமல் எடுக்கவும்.  காலை சிற்றுண்டி உங்கள் உடல் சக்தியையும், ஞாபகத் திறனையும் மேம்படுத்துகின்றது.
    1. சீரான இடைவெளியில் சிறு தீனி : காலை சிற்றுண்டிக்கு பின் 2 ல் இருந்து 4 மணி நேரத்துக்கு ஒரு முறை “புரதசத்துக்கள்” நிரம்பிய காய், கனிகள் கொஞ்சமாக எடுத்துக்கொள்ளவும்.  அவை உங்கள் இரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைக்கின்றது என்றும், புரதங்கள் உங்கள் கவனிப்புத்திறன் (Concentration Ability), எச்சரிக்கை தன்மையையும் (Alertness) அதிகரிக்க செய்வதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றது.

      இந்த இதழை மேலும்

    அறிஞர்களின் அறிவுரைகள்

    நூலில் சின்ன தூசி இருந்தால் கூட அது ஊசிக்குள் நுழையாது. நல்லவர்களுக்குப் பொய் நஞ்சு. கெட்டவர்களுக்குப் உண்மை நஞ்சாகும்.

    மானிட உடல் அடிக்கடி கிடைக்காது கிடைத்து இருக்கின்ற இந்த நேரத்தில் தொண்டு செய். உண்மையாக இரு.

    இதயத்தில் இருக்கும் எளிமையும் தூய்மைமே தெய்வ ஒளியாகும். அந்த ஒளி தெய்வத்திடம் செல்ல வழியாகும்.

    சந்தன மரம் முளைக்கும் போதே நறுமணத்தை நலாபுறமும் பரப்புவதில்லை. அது வளர்ந்து விட்டவுடன் கிளைகளை கழித்துவிடும் போது நறுமணத்தைப் பரப்பும்.

    மனோபலம் கொண்டவர்கள் சங்கடங்களைக் காலால் மிதித்துவிட்டு அமுக்கி அதன் மேல் ஏறிச் சென்றுவிடுகிறார்கள்.

    வாயில் நாக்கு எப்படி இருக்கிறதோஅப்படி உலகில் நீ இரு. அதாவது நாக்கு எவ்வளவு நெய்யைச் சாப்பிட்டாலும் அதில் நெய்  ஒட்டுவதில்லை.

    போனதையும் வருவதையும் எண்ணிக் கவலைப்படாதே. இன்று இருக்கும் நேரத்தை முழுமையாகப் பயன்படுத்து.

    வீட்டில் நெருப்புப் பற்றிய பிறகு கிணறு தோண்டிக் கொள்வோம் என்று எண்ணுபவருடைய வீடு முழுமையும் எரித்துவிடும்.

    நெல் வேகாத வரையில் தான் முளைக்க முடியும். வெந்து விட்டால் முளைக்காது. இதே போல் வெந்து போன உடல் வேண்டும் உயிர் பெறாது.

    அரிசியை விதைத்தால் முளைக்காது அரிசி வேண்டுமானால் நெல்லை விதைக்க வேண்டும். உமி நீக்கிய நெல் முளைக்கப் போவதில்லை.

    உயிர் பிரிந்து உடலை குடும்பத்தினர் கவலையும் கட்டையையும் போல மயான பூமியில் கிடத்துகிறார்கள்.

    ஒவ்வொரு மனிதனும் மரிப்பதைப் பார்க்கிறான். ஆனால் அவனோ, தான் எப்பொழுதும் இளமையாக இருப்பேன் என்று எண்ணுகிறான்.

    சூரியனுக்கும் சந்திரனுக்கும் கூட இரவும் பகலும் சுற்றிக் கொண்அட இருக்க வேண்டி இருக்கிறது. அவைகள் ஒரு நிமிடம் கூட இளைப்பாறுவதில்லை.

    காலையில் விண்மீன் களைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே மறைந்து விடுவதைப் போலவே மனிதன் மறைந்து போவான்.

    பச்சை மண்குடம் உடைய நேரமாகாது அதே போல இந்த உடலும் அழிவதற்கு நேரமாகாது.

    மகிழ்ச்சி மிக பெரிய சொத்து. அது எல்லாவற்றையும் விட சிறந்தது. மகிழ்ச்சி இருக்கும் இடத்தில் தான் இறைவன் இருக்கிறார்.

    உடல் இன்னலின் ஒளி போல மேகத்தின் நிழல் போல நிலையற்றது. மரணம் வாசல் கதவைத் தட்டிக் கொண்டே இருக்கிறது.

    தானம் தயவு இந்த எண்ணம் இல்லை என்றால் முழு வாழ்வும் அமைதிக்குச் சமம். வீண் சர்சசைகளில் விரயமாகும் நேரத்தைக் குறைத்தால் அறம் பேசும் கெட்ட குணம் குறையும்.

    இதைச் சொன்னது யார் என்று கேட்காதே சொல்லப்பட்ட கருத்தின் மேல் கவனத்தைச் செலுத்து.

    இந்த இதழை மேலும்