ந. உமாதாணு
கணித மேதை,
பொது செயலாளர், மனித நேயப் பேரவையின் உலக சமாதான நட்புறவுப் பூங்கா,
தலைவர், கணிதம் இனிக்கும் ஆய்வு மையம்,
கோவை.
நம் அனைவருக்கும் ஒரே மாதிரி
திறமை இல்லாமல் இருக்கலாம், ஆனால்
அனைவருக்கும் திறமையை வளர்க்க
ஒரே மாதிரியான வாய்ப்புகள் உள்ளன.
என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஐயா அவர்களின் கூற்று. இக்கூற்றை தனது வாழ்வில் பேணிக்காத்து வருபவர்.
ஏழ்மைக் காற்றை எப்போதும் சுவாசிக்கும் குடும்பப் பின்னணியிலிருந்து பிறந்து தனது அசாத்திய கணித அறிவால் இன்று அகிலமெங்கும் அசத்தி வரும் கணித மேதை இவர்.
ஐ.நா. பொது செயலாளர் பான்.கீ.மூன், இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர், நெல்சன் மண்டேலா, போப் ஜான் பால், ராஜிவ் காந்தி, சோனியாகாந்தி போன்ற உலகத் தலைவர்களின் பாராட்டுப் பெற்றவர்.
தான், தனது குடும்பம், தனது பிள்ளைகள் என்று வாழ்வோர் மத்தியில் இந்த சமூகம் சுமூகமாக இருக்க வேண்டும் என்று மனித நேயப் பேரவை என்ற ஒரு அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் பல சேவைகள் செய்து வருகிறார்.
ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பதை நிதர்சனப்படுத்தும் விதமாக இவரின் வெற்றிக்குப் பின்னால் இவரின் மனைவி கனகம் அவர்கள் ஒரு உந்து சக்தியாக இருந்து வருகிறார்.
கணித மேதை, சிறந்த ஆசிரியர், நல்ல மனிதர், சமூக சேவகர், இயற்கை ஆர்வலர் கணித ஆராய்ச்சியாளர், தலை சிறந்த நிர்வாகி என பன்முகத் திறமையுடைய ஐயா திரு. ந. உமாதாணு அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு.
கே: நீங்கள் பிறந்தது வளர்ந்தது பற்றிச் சொல்லுங்கள்?
சூரியனின் பிறப்பும் வள்ளுவரின் சிறப்பும் கொண்ட தலமான கன்னியாகுமரி மாவட்டத்தில் அஞ்சுகிராமம் என்றும் சிற்றூரிலுள்ள சிவராமபுரம் என்னும் குக்கிராமத்தில் பிறந்தேன். பெற்றோர் திரு. நல்லசிவம் செட்டியார்-சரஸ்வதி அம்மமாள் அவர்களின் மூத்த மகனாகப் பிறந்தேன். விவசாயப் பின்னணியுடைய குடும்பம் என்பதால் மிகவும் வறுமையான குடும்பம் தான். அந்த வறுமையிலும் என் பெற்றோர்கள் எங்களை நன்றாகப் படிக்க வைத்தார்கள். இதனால் அருகிலுள்ள அரசுப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் நான் படித்தேன். குடும்ப சூழலின் காரணமாக என்னுடைய சிந்தனைகள், செயல்பாடுகள் அனைத்தும் படிப்பு சார்ந்ததாகவே இருந்தது. இதனால் பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவன் என்ற பெயரை எடுத்தேன்.
கே: நீங்கள் கணிதத் துறையைத் தேர்ந்தெடுத்தது பற்றி?
என்னுடன் பிறந்தவர்கள் நான்கு பேர், நான் தான் மூத்த மகன் எங்கள் குடும்பத்தின் முதல் நிலைப்பட்டதாரி. நான் பட்டப்படிப்பு படிக்கப் போகிறேன் என்று சொன்னவுடன் என் பெற்றோர்கள் யோசித்தார்கள். நமது குடும்பம் ஏற்கனவே வறுமையில் இருக்கிறது, அப்படியிருக்கும் போது அதிக பணம் கொடுத்து படிக்க வைக்க முடியாது என்று சொன்னார்கள். ஆனாலும் என்னுடைய ஆசையை அவர்களால் நிராகரிக்க முடியவில்லை. உடனே, சரி என்று சொல்லியதுடன் ஒரு கட்டளையும் இட்டார்கள். அது என்ன வென்றால் எந்தப் பிரிவில் கட்டணம் குறைவாக இருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்து படி என்று சொன்னார்கள். நானும் அவர்களின் வாக்கை ஏற்றுக்கொண்டு கட்டணத்தைப் பார்க்கும் பொழுது கணிதத் துறையில் குறைவாக இருந்ததால் அதைத் தேர்ந்தெடுத்தேன். ஸ்காட் கிருத்துவக் கல்லூயில் பயின்றேன். என் தாய்வழித் தாத்தா திரு. முத்தசாமி செட்டியார் உதவியால் தான் என்னால் படிக்க முடிந்தது.
இப்படி சேர்ந்தது பிற்காலத்தில் அதுவே என்னுடைய வாழ்க்கையாக வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இப்படித்தான் கணிதத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன்.
கே: உங்களின் முதல் ஆசிரியர் பணி குறித்துச் சொல்லுங்கள்?
என்னுடய 21 வயதில் கல்லூரிப் படிப்பை முடித்தேன். 1962 ஆம் ஆண்டு கோவையில் ராஜலட்சுமி மில்ஸ் உயர்நிலைப் பள்ளியில் நேர்காணல் ஒன்று நடந்தது. நானும் அதில் கலந்து கொண்டேன். என்னை பள்ளி தலைமையாசிரியர் கணிதம் குறித்து ஒரு பாடத்தை எடுக்கச் சொன்னார். நான் கற்ற அனுபவத்தின் மூலம் ஒரு பாடத்தை நடத்தி காட்டினேன். இதைப் பார்த்த அடுத்த கணமே பதவி ஆணையைக் கொடுத்துவிட்டார்கள். ஐந்து ஆண்டுகள் இந்தப் பள்ளியில் பணியாற்றினேன்.
அதன் பிறகு தேவாங்கா மேல்நிலைப்பள்ளியில் 30 ஆண்டு காலம் பணியாற்றினேன். மொத்தம் என்னுடைய ஆசிரியர் பயணம் 35 ஆண்டு காலம் தொடர்ந்தது. இந்த 35 ஆண்டு காலத்தில் பணியாற்றிக் கொண்டே எம். ஏ. ஆங்கிலம், எம். ஏ. அரசியல் அறிவியல், எம்.எட் போன்ற பட்டப்படிப்பை முடித்தேன். 1997 ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் நிறைய மாணவர்களை உருவாக்கிய பெருமை எப்போதும் என்னை மகிழ்ச்சிப்படுத்தும்.
கே: ஐ.நா வுடன் பணியாற்றிய அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?
அப்போது இந்தியா சோவித் யூனியன் கலாச்சார கழகம் என்ற ஒரு அமைப்பு இருந்தது. அதில் நான் பொதுச் செயலாளராகப் பணியாற்றினேன். அப்போது உலக சமாதானம் என்ற பெயரில் கோவை மாவட்டத்திலுள்ள எல்லா பள்ளிகளையும் ஒருங்கிணைத்து சமாதான ஓட்டம் ஒன்றை ஏற்படுத்தினோம். அக்காலக்கட்டத்தில் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது.
அப்போது ஐ.நா சபையின் பொன் விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. அதில் கோவை அவிநாசிலிங்கம் மற்றும் லைன்ஸ் கிளப் போன்ற அமைப்புகளுடன் இணைந்து பெரிய அளவில் விழா ஏற்பாடு செய்தோம். அதே போல் ஐ.நாவின் வைர விழாவையும் மருத மலை தேவஸ்தானப்பள்ளியில் நடத்தினோம். இதில் பல்வேறு நாட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட்டது. இதையெல்லாம் பாராட்டி சோவியத் நாட்டிற்கு என்னை அழைத்து ஒரு 15 நாட்கள் கௌரவித்தார்கள்.
மேலும் புரட்சியாளர் லெனின் அவர்கள் எழுதிய தேசிய இனப்பிரச்சனைகளும் தீர்வுகளும் என்ற தலைப்பில் 1000 பக்கம் அளவில் புத்தகம் ஒன்றை எழுதியிருந்தார். இந்தப் புத்தகத்தை நான் தமிழில் மொழிபெயர்த்தேன். சோவித் நாட்டிற்கு தமிழ்நாட்டிலிருந்து நான் போகும் பொழுது அங்குள்ள ஒரு நூலகத்திற்கு என்னை அழைத்துச் சென்று தமிழ்ப்புத்தகங்ளை எல்லாம் காட்டினார்கள். நான் தான் அந்தப் புத்தகத்தை எழுதினேன் என்று தெரியாமல் அந்தப்புத்தகத்தை காட்டி, தமிழர்கள் இங்கு வரும் போதெல்லாம் இந்தப்புத்தகத்தை காட்டுவார்கள் என்று சொன்னார். இந்தப் புத்தகத்தை எழுதியது நான் தான் என்று சொன்னவுடன் அவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.
கே: உலகத் தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை நட்புறவு எப்படி ஏற்பட்டது?
உலக சமாதானம் என்ற பெருண்மையில் நான் பல நாட்டுத் தலைவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். அக்கடித்த்தில் போரில்லா நாடு, எங்கும் ஒற்றுமையுணர்வு, வேலைவாய்ப்பின்மை போன்றவை அடியொடு ஒழிய வேண்டும் என்பது தான் என்று எழுதினேன். அப்போது தான் நெல்சன் மண்டேலா அவர்களுக்கு Hero of humanism என்ற பட்டத்தை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கடிதம் எழுதினேன். அவர் எனக்கு உடனே பதில் கடிதம் எழுதினார். உங்களின் பட்டத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று எழுதினார். கிருத்தவர்களின் கடவுள் போப் ஜான் பால் அவர்கள் என்னை பாராட்டி கடிதம் எழுதினார். அவர்களைப் போல ஐ.நாவின் பொது செயலாளர் பால்கீன் மூன் எனக்கு கடிதம் எழுதியதில் Dr. Umadhanu என்று எழுதி என்னை நெகிழ்வடைய செய்தார். இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயர், இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி, அவரின் மனைவி சோனியா காந்தி போன்றோர்களின் பாராட்டும் கிடைத்தது.
அதே போல் இங்குள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி தாளாளர்கள் என பலரின் பாராட்டும் கிடைத்தது.
இந்த இதழை மேலும்