November, 2019 | தன்னம்பிக்கை

Home » 2019 » November

 
  • Categories


  • Archives


    Follow us on

    மரத்தை நடுவோம்…

    நாளும் அதிகரித்து வரும்
    புவியின் வெப்பத்தைப் போக்க…
    நாமும் ஒரு மரத்தை நடுவோம்
    நலமான சுவாசக் காற்றைப் பெறுவோம்…
    மரம் நடுவதில் தன்னலம் இருக்காது

    அது சமூக நலன்; உலக நலம்…
    இன்று நாம் நடும் மரம்
    நாளை வரும் எதிர்கால சந்ததியினருக்கு
    அட்சய பாத்திரமாய் அமுத சுரபியாய் திகழும்..
    மரம் காற்றும் கனியும்

    பழமும் உடலுக்கு நல்ல நலமும் தரும்…
    வீதியில் ஒரு மரம் இருந்தால்
    விளையாட குழந்தைகள் கூடுவர்
    பெரியவர்கள் அமர்ந்து பேசுவர்
    அசதியாய் வருபவர் ஓய்வெடுப்பர்
    காட்டில் ஒரு மரம் இருந்தால்
    பறவைகள் விலங்குகள் கூடும்
    மகிழ்ச்சியாய் பாடும் அங்கும் இங்கும் ஓடும்
    பட்டுப்போகும் வரை நிழலையும் நிம்மதியையும்
    கொடுக்கும் மரத்தை நாமும் நடுவோம்….

    நம்பிக்கையை மகிழ்ச்சியாக்கு..! நாளை உலகை உனதாக்கு…!

    Dr.N. நாகரத்னம் M.B.B.S.,M.D.,(O.G).,FRM.,DRM(GERMANY)

    இயக்குநர், ரத்னா மருத்துவமனை

    (பெண்கள் மகப்பேறு மற்றும்

    குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவமனை)

    செக்காலை, காரைக்குடி.

    இலட்சியங்கள் கனவுகள் மலரட்டும், அவை

    செய்யும் பணியில் மணக்கட்டும்

    புதிய முயற்சிகள் தொடரட்டும், அவை

    புத்துணர்வாய் நெஞ்சில் துளிர்க்கட்டும்

    என்னும் தன்னம்பிக்கை வரிகளை தன்னகத்தே கொண்டு தான் கொண்ட மருத்துவத்துறையில் சாதித்து வரும் சாதனைப் பெண்மணி.

    தான் பிறந்த மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் விதமாக கற்ற மருத்துவத்தை சொந்த ஊரிலே செய்ய வேண்டும் என்று தன்னால் முடிந்த மருத்துவ சேவையை செய்து வருபவர்.

    குழந்தையில்லா தம்பதியினர் யாரும் இருந்திட கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, பல மருத்துவ புதுமைகளைப் புகுத்தி வரும் மருத்துவர்.

    மருத்துவமனை தொடங்கி குறுகிய ஆண்டுகளே ஆனாலும் தான் தொடும் அனைத்தையும் சாதனைகளாகவே முடிக்கும் குணம் கொண்ட ரத்னா மருத்துவமனையின் இயக்குநர் திருமதி. Dr. N. நாகரத்னம் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு.

    கே: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

    செட்டிநாட்டுப் புகழ் என்று அழைக்கப்படும் காரைக்குடியில் தான் பிறந்தேன். என்னுடைய தந்தை டாக்டர் நாகப்பன், தாயார் திருமதி. தெய்வானை. எனக்கு ஒரு சகோதரி. எனக்கு சிறு வயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்பது தான். அது தான் என்னுடைய ஆசையும் கனவாகவும் இருந்தது. அதற்கு காரணம் என்னுடைய தந்தை தான்.  என் தந்தை ஒரு கண் மருத்துவர். எங்கள் பகுதியில் மிகவும் பிரபலமானவர். அனைவரிடத்திலும் அன்பாகப் பழகும் குணம் கொண்டவர். தன்னிடம் வருபவர்களை ஒரு நோயாளியாய் பார்க்க மாட்டார், ஒரு உறவினர் போல் அனுசரணையோடு பழகுவார். இதையெல்லாம் சிறு வயதிலிருந்து பார்த்து வளர்ந்ததால் நாமும் ஒரு மருத்துவராக வேண்டும் என்று நினைத்தேன். என்னுடைய பள்ளிக் கல்வி என்று பார்த்தால் மதுரையில் உள்ள மகாத்மா மெட்ரிக் பள்ளி. தொடக்கக் கல்வியிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படித்தேன். பத்தாம் வகுப்பு முடித்தவுடன் காரைக்குடியிலுள்ள முத்தையா அழகப்பா பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பை முடித்தேன்.

    எம்.பி.பி.எஸ் படிப்பை கோவையில் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியான பி.எஸ்.ஜி மெடிக்கல் கல்லூரியிலும், M.D(O.G) யை சிதம்பரத்திலுள்ள ராஜா முத்தையா ஆய்வு மையத்திலும் படித்தேன்.

    கே: மகப்பேறு மருத்துவராக வர வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் எப்படி வந்தது?

    திருமணம் ஆன எல்லா தம்பதியனர்களும் நினைப்பது நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பது தான். அவ்வாறு குழந்தையில்லாத போது அது குடும்பம் மற்றும் சமுதாய பிரச்சனையாகிவிடுகிறது. ஒரு பெண் எப்போது முழுமை அடைகிறார் என்றால் அது அவரின் தாய்மையின் போது தான். தாய்மை உணர்வைத் தாண்டி இவ்வுலகில் பரிசுத்தமான உறவு எதுவும் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு தாய்மைக்கு பெருமை உண்டு.

    ஒவ்வொரு முறையும் குழந்தைப்பிறக்கும் பொழுதும் அந்த பெண் மறுஜென்மம் அடைகிறார். தாய் மற்றும் குழந்தைக்கு நடுவே நாமும் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்பதை எண்ணும் போது மனதிற்கு மிகவும் மகிழச்சியாக இருக்கும். அந்தக்குடும்பம் மற்றும் அந்தக் குழந்தை காலம் முழுவதும் சொல்லிக் கொள்ளும் இந்த மருத்துவமனையில் தான் பிறந்தேன் என்று இந்த மருத்துவர் தான் நம் பிறக்கும் போது உடன் இருந்தார்கள் என்று சொல்லிக் கொள்ளும். இது போன்ற இன்னும் எத்தனையோ சிறப்புகள் மகப்பேறு மருத்துவத்தில் இருக்கிறது.

    கே: ரத்னா மருத்துவமனை உதயமானது பற்றிச் சொல்லுங்கள்?

    நான் படித்த முடித்து சில ஆண்டுகள் மருத்துவப் பயிற்சி மேற்கொண்டிருந்தேன். அப்போது என்னைப் பார்க்க வரும் நிறைய பெண்களின் ஏமாற்றமான எதிர்பார்ப்பு திருமணம் ஆகி இத்தனை ஆண்டுகள் ஆகிறது எங்களுக்கு குழந்தையில்லை என்பது தான். அப்போது  தான்  என் மனதில் உதயமாயின, நாம் ஏன் முழுவதுமாக ஒரு மகப்பேறு சம்மந்தமான மருத்துவம் கொடுக்ககூடாது என்று. இதனால் இதை மென்மேலும் தெரிந்து கொள்ள நினைத்தேன். இதனால் இந்திய முழுவதும்  இத்துறை சார்ந்த தேடுதலை தீவிர படுத்தினேன். பல பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டேன்.

    கேரளாவில் Fellowship in Reproduction என்னும் துறையை ஒரு ஆண்டு படித்தேன். மேலும் ஜெர்மனியில் கீல் யுனிவர்சிட்டியில் Diploma in Reproductive medicine முடித்தேன். இங்கெல்லாம் படித்த அனுபவம் என்னை மிகவும் வலிமைபடுத்தியது. எதுவும் சாதாரணமாக தொடங்குவதில் எனக்கு ஒரு போதும் உடன்பாடு இருக்காது. ஒன்றை தொடங்குகிறோம் என்றால் அது சார்ந்த அத்துனை தேவைகளையும் நம்மால் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்பதால் அனைத்து உபகரணங்களுடன் தொடங்கியது தான் இந்த ரத்னா மருத்துவனை.

    கே: குழந்தையில்லா தம்பதியினருக்கு டெஸ்ட்டியூப் பேபி முறை இறுதி தீர்வா?

    தற்போது சூழலில் மக்களின் மனநிலை எப்படி மாறியுள்ளது என்றால், திருமணம் முடிந்து ஒரு ஆண்டுகள் ஆனவுடன் குழந்தையில்லை என்றால் அது  டெஸ்ட்டியூப் பேபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தவறான புரிதல்கள் இருக்கிறது.

    திருமணம் ஆகி ஒரே ஆண்டில் குழந்தைப் பிறந்தவர்கள் இருக்கிறார்கள். இரண்டு  மூன்று ஆண்டுகளும் ஆகலாம். சிலருக்கு இரண்டு மூன்று ஆண்டுகள் குழந்தை இல்லை என்றதும் எங்களை அணுகுவார்கள். அவர்களை சோதித்து பார்த்து அவர்களின் உடலின் சாதாரண பிரச்சனைகள் தான் இருக்கும், மருந்து மாத்திரை மூலமே சரி செய்து விடலாம். மேலும் சிலர் விழிப்புணர்வு இன்றி இருப்பார்கள், அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதன் மூலமே அவர்கள் கருத்தரித்திருக்கிறார்கள். இப்படி நிறைய தம்பதியினர்கள் நம் மருத்துவமனையில் கருவுற்று இருக்கின்றனர். டெஸ்ட்டியூப் பேபி சிகிச்சை அனைவருக்கும் பொதுவான தீர்வல்ல.

    கே: நம் முன்னோர்களின் காலத்தில் இயற்கையாகவே கருதரித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது, ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளதே அது பற்றி சொல்லுங்கள்?

    உலகம் முழுவதும் இந்த நிலை மாறியுள்ளதாக சில ஆய்வுத்தகவல்கள் நம்மை எச்சரிக்கிறது. இதற்கு முக்கிய காரணங்கள் காலம் தாழ்த்தி திருமணம் செய்வது உணவுப் பழக்கங்கள், வேலைபளு ஆகியவை.

    நம் முன்னோர்கள்  சரியான வயதில் திருமணம் செய்தார்கள், சரியான வயதில் குழந்தைகள் பெற்றெடுத்தார்கள். சில குடும்பத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதைக் கூட பார்த்திருக்கிறோம். அப்போது தேவைகள் குறைவாக இருந்தது, குறுகிய வருமானம் இருந்தாலே குடும்பத்தை நடத்திக் கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது.

    ஆனால் தற்போது அப்படியில்லை. பட்டங்கள், பணிகள்,சேமிப்புகள் என தங்கள் தேவைகளை பூர்த்தி செய்த பின்னர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்குள் அவர்களுக்கு வயது ஆகிவிடுகிறது. திருமணம் ஆனப்பின்னரும் அவர்கள் உடனே குழந்தைப் பெற்றுக் கொள்வதில்லை, அதற்கும் வருடங்களைத் தள்ளிப் போடுகிறார்கள்.

    ஆண், பெண் இருவரும்  வேலைக்கு போகிறார்கள், அவர்கள் வீட்டிற்கு வருவதற்கு கால தாமதம் ஆகிவிடும், வீட்டில் சமைப்பதில்லை, இதனால் கடையிலிருந்து துரித உணவுகள் வாங்கி வந்து உண்கிறார்கள். இதனால் ஆண், பெண் இருவருக்கும் உடல் பருமன் ஏற்படுகிறது, பெண்களுக்கு சரியான மாதவிடாய் ஏற்படுவதில்லை.  வேலை செய்யும் இடத்தில் மனஅழுத்தம் போன்றவை குழந்தையின்மைக்கு பெரும் காரணமாக இருக்கிறது.

    கே:  டெஸ்ட்டியூப் பேபி செய்யப்படுவதற்கான காரணம்?

    டெஸ்ட்டியூப் பேபி முறைக்கு போக வேண்டும் என்றால் அதற்கான காரணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆண்களுக்கு அணுக்கள் மிக குறைவாக அல்லது விந்தணு வெளிப்படாமல் போனால்.

    பெண்களுக்கு கருமுட்டை உருவாகாமல் இருந்தால். வயது கூடும் போது பெண்களுக்கு கருமுட்டையின் தன்மை குறைய தொடங்கும். அப்போது முட்டை தானம் பெற்று டெஸ்ட்டியூப் பேபி செய்யப்படும்.

    கருக் குழாயில் அடைப்பு இருத்தல் போன்ற காரணங்களால் டெஸ்ட்டியூப் பேபி செய்யப்படுகிறது.

    கே: திருமணம் ஆன எல்லோராலும் தாய்மை நிலை அடைய முடியுமா?

    இது தான் எங்களின் தளராத முயற்சி. எல்லோரும் தாய்மை நிலையை அடைய வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கமும் குறிக்கோளும். அதனால் எங்கள் மருத்துவமனையில் இத்துறை சார்ந்த அதிநவீன இயந்திரங்கள், மருத்துவ உபகரணங்கள் எல்லாம் வைத்திருக்கிறோம்.

    எல்லோருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை கொடுப்பதில்லை. ஒவ்வொரு தம்பதியனரும் பல விதமான பிரச்சனைகளில் வருவார்கள், அவர்களின் பிரச்சனையை அறிந்து அவர்களுக்கு ஏற்றார் போல் அதை சரி செய்ய வேண்டும்.

    கர்ப்பப்பையில் இரத்த கசிவு ஏற்படும், இவ்வாறு இருப்பவர்கள் கர்ப்பம் தரிப்பது மிகவும் கடினம், அவ்வாறு தரித்தாலும் கரு கலையும் சூழல் எற்பட்டுவிடும். அப்படிப்பட்டவர்கள் வரும் போதுகூட அவர்களின் உடலை அறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து குழந்தைப்பேற்றை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம்.

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை மேடை

    நேயர் கேள்வி…?

    NEET ஆள்மாறாட்டம் குறித்து தங்களின் கருத்தைக் கூறவும்?

    ஜெயபாலன்,

    புதுக்கோட்டை.

    ரயில் டிக்கட் பரிசோதகர் (டி.டி.இ) ஒருவர் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பல மாதங்களாகப் பணியாற்றுகிறார். இவரது நடவடிக்கை மீது ஒரு ரயில்வே காவலருக்கு சந்தேகம் வருகிறது. ஏனென்றால் இவர் பிளாட்பாரத்தில் மட்டும் நின்று கொண்டிருக்கிறார், ரயிலில் ஏறி பயணிப்பதில்லை. பிடித்து விசாரித்தால் இவர் உண்மையான டிக்கெட் பரிசோதகர் இல்லை, ஒரு போலி ரயில் டிக்கட் பரிசோதகர், ஆள்மாறாட்டம் செய்து சில அப்பாவி பயணிகளிடம் அபராதக் கட்டணம் வசூல் செய்து சில ஆயிரம் ரூபாய் தினமும் சம்பாதித்திருக்கிறான். இந்த 26 வயது வேலையில்லாப் பட்டதாரி, ரயிலில் டி.டி.இ என்று பொய் கூறி நம்பவைத்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்திக் கொண்டிருப்பதும் தெரிய வந்தது.

    ஆள்மாறாட்டம் என்பது மூன்று ஆண்டுகள் சிறை தண்டனைக்குறிய குற்றமாகும். தன்னை இன்னொருவராகக் கூறிக்கொண்டு ஒரு மோசடி செயலை செய்து, அதனால் ஆதாயம் தேடுவதுதான் இந்தக் குற்றத்தின் சாராம்சமாக இருக்கிறது.

    ஆள்மாறாட்டம் அன்றாடம் நடத்தப்படும் குற்றம் என்பதிலும், அது பல விதங்களில் அரங்கேற்றப்படும் குற்றம் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால், தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கும் NEET தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் நமக்கு அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. நீட் தேர்வு எழுதியது ஒருவர், கல்லூரியில் சேர்ந்து மருத்துவப் படிப்பு படிப்பவர் இன்னொருவர். நுழைவுத் தேர்வே எழுதாமல் மருத்துவம் படித்தவர், பின் ஒரு நாள் பலரின் உயிருடன் அல்லவா விளையாடுவார்? அரும்பாடு பட்டு படித்தப் பிள்ளைகளுக்கு இடம் மறுக்கப்பட்டு, ஒன்றும் படிக்காதவனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடமா? என்ற கேள்விகள் பொதுமக்களின் மனசாட்சியை உலுக்கியிருக்கிறது, அவர்களை ஆத்திரமடையச் செய்திருக்கிறது.

    இந்த ஆள்மாறாட்ட குற்றத்தை அரங்கேற்றி மருத்துவக் கல்லூரியில் படித்த மூன்று மாணவர்களும் அவர்களது பெற்றோரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள், இவர்களுக்கும், இவர்களுக்குத் துணையாக இந்த மோசடி நாடகத்தை அரங்கேற்றிய அனைவருக்கும் சரியான தண்டனைகள் கிடைத்துவிடும் என்றும் எதிர்பார்க்கலாம்.

    ஆள்மாறாட்ட குற்றத்தின் மைய தத்துவம், இதில் சிலருக்கு இழப்பும் சிலருக்கு தவறான ஆதாயமும் ஏற்படுவதுதான். ஒருவர் தான் அல்லாத இன்னொருவராகப் பொய்த் தோற்றம் அளித்து ஒரு செயலை செய்ததால் இன்னொருவருக்கு இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதே வேளையில் ஆள்மாறாட்ட குற்றம் புரிந்தவரும் அவர் தரப்பினரும் தவறான லாபம் அடைந்திருக்கிறார்கள். NEET வழக்கில் போட்டித்தேர்வு எழுதிய உண்மையான போட்டியாளர்களுக்குப் பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.

    போலி டாக்டர்களும், போலி வழக்கறிஞர்களும், போலி காவலரும், போலி ஆசிரியர்களும் கூட இதே சட்டத்தின்படி தண்டிக்க கூடியவர்கள்தான். இவர்கள் இன்னொரு குறிப்பிட்ட நபரின் பெயரில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை தான். இருந்தாலும் ஒரு கற்பனை நபர் என்று அடையாளப்படுத்தியிருப்பதால் இந்த ஆள்மாறாட்ட குற்றம் புரிந்துவிட்டார்கள் என்று பொருளாகிறது. அதாவது கற்பனை மனிதர்களான ஒரு டாக்டர், ஒரு வழக்கறிஞர், ஒரு போலீஸ் அதிகாரி, ஒரு ஆசிரியர் என்று அவர்கள் மற்றவர்களை நம்ப வைத்ததால் ஆள்மாறாட்டம் என்ற குற்றத்தைப் புரிந்துவிட்டனர், எனவே அவர்கள் தண்டனை பெற தகுதியானவர்கள் ஆகிவிட்டனர்.

    இந்த இதழை மேலும்

    எனக்கு அல்ல – உங்களுக்காக ஒரு நொடி

    ஒரே ஒரு நொடி இரக்க உணர்வுடன், மனதில் தோன்றிய எண்ணத்தை செயல்படுத்த பரிசீலனை செய்தால் பின்னாளில், ஆயிரம் மன்னிப்புகள் கோருவதை தவிர்த்து விட முடியும்.

    நம்மை சுற்றியுள்ள மற்றவர்களையும் கருத்தில் கொண்டு ஒரு சிறிய அளவில் நேர்மறையாக செயல்படும் போது சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடிகிறது.

    மத்திய-மாநில அரசு  அலுவலகங்களுக்கு செல்கிறோம். அங்கு பிரதானமான இடத்தில் அண்ணல் காந்தி, டாக்டர் அம்பேத்கர் படங்களை பார்க்கிறோம். அவர்கள் சமுதாயத்திற்க்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்தவர்கள். அவர்கள் அளவுக்கு மலையளவு இல்லாவிட்டாலும், துளியளவுக்கு நமக்கு மற்றவர்களை பற்றி சிந்திக்கும் எண்ணம் ஏற்பட்டால் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

    நல்ல வாழ்க்கையின் அடிப்படை என்பதே  சக மனிதர்களை கருத்தில் கொண்டு  சிந்திப்பதே ஆகும். மற்றவர்களின் உணர்வை கருத்தில் கொள்வது மூலமாக, சக மனிதன் மீது நாம் செலுத்தும் பொதுவான மரியாதையும், அக்கறையும்தான் நமது வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது.

    பல உறவுகள் கசந்து போவதற்கு, பிரிந்து போவதற்கு, அறுந்து போவதற்கு இயற்கையான காரணங்கள் ஏதும் இல்லை. உறவுகள் கொல்லப்படுவதற்கு சுயநலம், புறக்கணிப்பு, கருத்தில் கொள்ளாதது, பொய்கள் மற்றும் ரகசியங்களே காரணமாக உள்ளன.

    மற்றவர்களின் உணர்வுகளையும் கருத்தில் கொள்ள வாழ்வில் கற்றுக்கொள்ள வேண்டும். மிகப்பெரிய தலைவர்களின் முக்கிய அம்சமே மற்றவர்கள் மீதான உண்மையான அக்கறைதான்.

    சித்தார்த்தன் அரண்மனை சுகபோகத்தை விட்டு வெளியேறி சக மனிதர்களின் துன்பத்திற்கு காரணத்தை அறிய முற்பட்ட போதுதான் உலகப்புகழ் பெறுகிறார். புத்தர் அளவுக்கு இல்லாவிட்டாலும் நம்மால் முடிந்த அளவுக்கு சிறு பங்களிப்பையாவது தந்து நமது வாழ்வை அர்த்தமுள்ளதாக்க முனைவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

    பேருந்து பயணத்தில் ஒரு நொடி:

    பேருந்து பயணத்தில் ஒரளவு கூட்டம். வயதான ஒரு முதியவர் இருக்கை கிடைக்காததால் நின்று கொண்டு இருக்கிறார். ஒரு இளைஞர் எழுந்து தன் இருக்கையை அவருக்கு விட்டுக் கொடுத்து தான் நின்றபடியே பயணம் செய்தார். அது மனதை நெகிழச் செய்தது. “அவர் மரியாதைக்குரியவர்” என்று நடத்துநரிடம் நான் தெரிவித்தேன். அதற்கு பதிலளித்த நடத்துநர், யாராவது எப்போதாவது அரிதாக அப்படி எழுந்து முதியவர்களுக்கு, உடல் ஊனமுற்றவர்களுக்கு, கர்ப்பிணி பெண்களுக்கு இடம் தருவார்கள். அப்படி செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை. சரியான சில்லறை கொண்டு வருவது, மகளிரை இடிக்காமல், சீண்டாமல் இருப்பது, தவறாமல் பயணச்சீட்டு எடுப்பது, படிக்கட்டில் பயணிக்காமல் இருந்தால் அதுவே எனக்கு போதும் என்றார்.

    பண்டிகை கொண்டாட்டத்தில் ஒரு நொடி:

    ஒரு கிராமத்தில் ஒரே நேரத்தில் இரண்டு “கிரகபிரவேஷ” நிகழ்ச்சி நடந்தது. மதிய விருந்து முடிந்ததும்  சாப்பாடு மீதமாகி விட்டது. மற்றவருக்கு கொடுக்க மனமில்லையோ என்னவோ, ஒரு வீட்டில் மீத சாப்பாடு வீணாகி மறுநாள் குப்பையில் கொட்டப்பட்டது. மற்றொரு வீட்டில் அந்த வீட்டின் அம்மணி விருந்து முடிந்து மீதம் சாப்பாடு இருக்கிறது. அந்த நகரில் தங்கியிருந்த கட்டிட தொழிலாளிகள், அந்த நகரில் வசித்த அக்கம்பக்கத்தினரிடம் சொல்லி மீதமான  உணவை வீணாக்காமல் பகிர்ந்து கொடுத்தார். நன்றாக நினைவு இருக்கிறது. மீத உணவை வீணாக்காமல் பகிர்ந்து கொடுத்த குடும்ப உறுப்பினர்கள் நன்கு செழிப்புடன் பல மடங்கு முன்னேறி சீராக தற்போது வாழ்கிறார்கள். மீத சாப்பாட்டை மற்றவர்களுக்கு கொடுக்க மனமின்றி தன்னாலும் உண்ண முடியாமல் வீணாக்கியவர்கள் பற்றி விசாரித்தேன்.

    அவர்கள் பின்னாளில் தொழிலில் நஷ்டமாகி, நொடித்து கடன்பட்டு வீட்டை விற்று விட்டு சென்று விட்டதாகவும் கூட்டுக் குடும்பம் பிரிந்து விட்டதாகவும் கேட்டறிந்த போது மனம் வலித்தது. ரம்ஜான் நோம்பில் உள்ள சிறப்பம்சமே மற்றவர்களுடன் பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதேயாகும். நாம் வயிராற உண்ணுகிறோம். புத்தாடை அணிகிறோம்.

    நம்மை சுற்றியுள்ள, நமக்கு பரிச்சயமான யாரேனும் உணவு, உடையின்றி இருக்கலாம். அவர்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சிறிய அளவில் கிடைக்கச் செய்தால் அது நமக்கு சாதாரண விஷயம். அவர்களுக்கு அது பெரிய விஷயமாகும்.

    இந்த இதழை மேலும்

    வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 14

    மழுப்பல்களை நிறுத்துங்கள்

    (Stop the Excuses) 

    இந்த நூலினை ஆங்கிலத்தில் வேய்ன் டையர் (Wayne Dyer) எழுதியிருக்கின்றார். ( இந்நூலை தமிழில் அகிலா இராம சுப்ரமணியன் மொழிபெயர்த்துள்ளார். இதனை கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது) இந்நூல் ஒரு வகையில் மனித வாழ்வில் நிரந்தரமாக இடம்பிடித்துள்ள என்னால் முடியாது நான் எதற்கும் லாயக்கற்றவன் என்பது போன்ற சிந்தனைகளை கேள்விக்குள்ளாக்கி அதிலிருந்து விடுபடுவது எப்படி என்று கூறுகிறது. நாம் ஆழ்மனதில் கொண்டுள்ள தனிப்பட்ட நம்பிக்கைகள் அதாவது நம்முடைய சோகம், ஆரோக்கியமின்மை, ஏழ்மை, துன்பம், அதிர்ஷ்டமின்மை, கோபம், கேட்டது கிடைக்காது போன்ற சிந்தனைகள் ஆகியன நமது மரபுவழிப்பட்டது என்று நம்பி வருகின்றோம். இன்றைய அறிவியல் ஆய்வு 95சதவிகிதம் பேருக்கு மரபியல் காரணங்கள் அவர்களைக் கட்டுப்படுத்துவதில்லை; அவர்களாகவே அதற்குள் கட்டுண்டு போனால் தவிர என்று சொல்வதாக வேய்ன் டையர் குறிப்பிடுகின்றார். என்னால் செய்யமுடியாது என்று ஏதேனும் சாக்குப் போக்குகள் சொல்வதைத்தான் வேயன் டையர் மழுப்பல்கள் (Excuses) என்று கூறுகின்றார். ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் மழுப்பல்களை முதலில் விட்டொழிக்க வேண்டும். மழுப்பல்களை எப்படி விடுவது என்பதை ஆராய்ந்து இந்நூல் ஒரு தத்துவ நோக்கில் சொல்கிறது. இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள பெரும்பாலான சிந்தனைகள் தாவே எனும் கடவுள் சிந்தனைகளைத் தழுவிச் சொல்லப்பட்டுள்ளது.

    பிரபஞ்ச விதிக்கேற்ப செயல்படுங்கள், மாறுதல் என்பது தானே நடக்கும் என்பது தாவேவின் கொள்கை. தாவ் என்பது கடவுளைக் குறிக்கும். கடவுள் நம்மோடு எப்போதும் இருக்கின்றார். மனித மனம் என்பது கடவுளின் எல்லையே இல்லாத ஆற்றலின் ஒரு பகுதி. இந்தச் சிந்தனை இந்நூல் முழுவதும் இருக்கின்றது.

    நல்லதே செய்யுங்கள் – கெடுதல் செய்யாதீர்கள்

    உங்கள் எண்ணங்களுக்கு ஓர் உயர்ந்த நோக்கத்தை அறிந்துகொள்ளுங்கள்; நல்லதையே செய்யுங்கள், கெடுதல் செய்யாதீர்கள், கெட்ட சிந்தனைகள் உங்களைக் கட்டுப்படுத்தும் செயல்களையே செய்யத் தூண்டும். மாறாக நல்ல சிந்தனைகள் உங்களை மேன்மையுறச் செய்து மகிழ்ச்சியையும், வெற்றியையும் அளிக்கும். நல்லது செய்தல் என்ற இக்கருத்தை வலியுறுத்தும் சீன நாட்டில் வழங்கும் ஒரு கதையை வேய்ன் டையர் தம் நூலில் எடுத்துக்காட்டுகின்றார்.

    பல காலத்திற்கு முன் ஒரு சீன ஞானி இருந்தார். அவர் தினமும் தியானம் செய்ய ஒரு மரத்தில் சாய்ந்துகொள்வதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார். என்ன புயலடித்தாலும் மரத்தின் ஒரு கிளையில் வசதியாக உட்கார்ந்து கொள்வதால் அவரை பறவைக் கூடு என்று கிராமத்தினர் அழைத்தனர். அம்மரத்தின் வழியாக வேட்டையாடவும், சுள்ளி பொறுக்கவும் பலர் சென்றனர். சிலர் தங்கள் கவலைகளை அந்த ஞானியிடம் பகிர்ந்து கொண்டனர். அவருடைய கருணை மிகுந்த சொற்களால் அம்மக்களிடையே அவர் புகழ்பெற்றார்.

    பக்கத்திலிருந்த கிராமங்களிலும் அவர் புகழ் பரவியது. நெடுந்தூரத்திலிருந்து அவரைப் பார்க்க மக்கள் வந்தனர். அம்மாநிலத்தின் ஆளுநரும் அவரைப் பார்த்து ஆசி பெற நினைத்து, அவரைத் தேடி வந்தபோது பறவைக் கூடு ஒரு மரத்தின் மேல் வசந்தகாலப் பறவைகளின் இனிய ஓசைகளை அனுபவித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார். ஆளுநர் அவரைப் பார்த்து நான் இந்த மாநிலத்தின் ஆளுநர், நெடுந்தொலைவிலிருந்து உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். ஒரு முக்கியமான கேள்வி கேட்கப் போகின்றேன் என்று கூறினார். பின்னர் இதுவரை வந்த ஞானிகளின் முக்கிய போதனை என்ன? புத்தரின் போதனை என்ன? என்று கேட்டார். சற்று நேரம் அங்கு அமைதி நிலவியது. இலைகளின் சலசலப்பு மட்டும் கேட்டது. பறவைக்கூடு சற்று நேரம் கழித்து அளித்த பதில் நல்லதே செய்யுங்கள் – கெடுதல் செய்யாதீர்கள் இதுவே புத்தரின் போதனை. இது மிக எளிதான தத்துவமாகத் தோன்றவே ஆளுநர் எரிச்சலடைந்தார். இதற்காகவா நான் இரண்டு நாட்கள் நடந்தேன். என் மூன்று வயதிலிருந்தே இது எனக்குத் தெரியுமே என்று கூறினார். உடனே அந்த ஞானி கூறினார். ஆம்! மூன்று வயது பாலகர்களுக்குக் கூடத் தெரியும், ஆனால் எண்பது வயது முதியவர் கூட செய்வது கடினம் என்று கூறினார்.

    நல்ல செயல்களைச் செய்ய முடியாமல் போகும்போதும் கதையில் வரும் மூன்று வயதுக் குழந்தையை உங்களுக்குள் தேடுங்கள். அதன் அறிவுரையைக் கேட்கும் வாய்ப்பை உங்களுக்கு நீங்களே அளித்துக் கொள்ளுங்கள் என்கிறார் இந்நூலாசிரியர். 

    பொதுவான சாக்குப்போக்குகள்

    மனித வாழ்க்கையில் பொதுவாக அனைவரும் சொல்லும் சாக்குப் போக்குகளும் அவற்றைத் தவிர்க்க பயில வேண்டிய தீர்மானங்களின் சாராம்சமும் வேய்ன் டையரால் வருமாறு சொல்லப்படுகிறது.

    • ரொம்ப கஷ்டமப்பா : நான் மனம் வைத்தால் என்னால் எதையும் செய்து முடிக்க முடியும்.
    • இதில் ஆபத்துக்கள் இருக்குமே : நான் நானாய் இருப்பதில் எந்த ஆபத்தும் இல்லை. அதனால் பயமில்லை.
    • இதற்கு நெடுங்காலம் ஆகும் : என் இலட்சியத்தை அடையும் பொறுமை எனக்கு உண்டு.
    • நான் அதற்குத் தகுதியானவன் அல்ல : நான் ஒரு தெய்வப் பிறவி. ஆகையால் எல்லாவற்றிற்கும் எனக்குத் தகுதி உண்டு.
    • எனக்குச் சக்தியில்லை: என் வாழ்வைப் பற்றிய ஆர்வம் எனக்கு இருக்கிறது. அது என்னை உற்சாகப்படுத்துகின்றது.
    • நான் ரொம்ப பிஸி : நான் என் சுபாவத்தை ஒட்டி, எனக்குப் பிடித்தவற்றைத் தேர்ந்தெடுத்தால் அவற்றை முடிக்க நேரம் கிடைக்கும்.
    • அது ரொம்பப் பெரிய வேலை : என்னால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்வேன். சிறுகக் கட்டி பெருக வாழ்வேன்.
    • எனக்கு வயதாகிவிட்டது : உண்மையில் நான் முடிவற்றவன். வயது உடலுக்கே. என் வயதுக்கும் நான் என்ன செய்கிறேன் என்பதற்கும் சம்பந்தம் கிடையாது.

    இவ்வாறு எதை எடுத்தாலும் முடியாது, போதாது, வயதாகிவிட்டது, நேரமில்லை என்று ஏராளமான மழுப்பல்கள் நமக்குள் இருக்கின்றன. இதனை நாம் தவிர்ப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. ஹிட்லர் சொல்வது இங்கு பொருந்தும். நம்மால் முடியாது என்பதில்லை; நாம் செய்வதில்லை என்பதே உண்மை. ஆமாம் எல்லாரிடமும் ஒரு தனித்தன்மை இருக்கின்றது. அதனை வளர்த்தெடுத்தால், நாம் சாக்குப்போக்குகளைச் சொல்லமாட்டோம். உண்மையில் நாம் செய்வதில்லை என்பதுதான் உண்மை.

    இந்த இதழை மேலும்

    உணவை வீணாக்காதீர்….

    வயலின் பச்சை நிற அசைவுகளை அந்தக் கருமேகங்களும் கடன் கேட்கின்றது. மின்னலின் ஒளிக்குச் சிறது இயற்கையின் வண்ணம் பூச, சின்னஞ்சிறு உயிர்களுக்கும் வீரம் பிறக்கிறது இந்த மண்ணின் வலிமையில் வாழ்ந்து.

    வளர்ந்திருக்கும் மரங்களும் உரசி உரசி காதல் செய்கிறது காற்றின் மெல்லிசையால் ; மௌனத்தின் விழியோடு வயலின் மேட்டில் இருகாகங்கள் இயற்கையின் சிறப்புகளை இரசித்துக் கொண்டிருந்தது ; அந்த காகங்கள் மாற்றத்தைத் தேடி, வேறு ஒரு இடம் செல்ல விரும்பியது. அப்போது, கலங்கிய வெண்மையில் நேற்று உலையில் கொதித்த இந்த மண்ணின் அரசியான அரசி பழையசாதமாக வரப்பு வெட்டிய கைகளைத் தொட்ட, வெயிலில் சுருங்கிய வயிற்றில் நிரம்புகிறது.

    காகங்கள் பறந்து சென்று அந்தப் பெரியவரின் அருகில் அமர்ந்தது அவர் பசியில் துடிக்கும் தன் வயிற்றை காக்க வைத்து விட்டு, காணவந்த காகங்களுக்கு உணவு கொடுக்கிறார். அந்த அழகிய காகங்கள் வெண்ணிலவின் ஒளியில் பிறந்தது போல, இவர் யார் இப்படி இருக்கிறார்? இந்த உணவு வேண்டாம் நண்பா ! வேறு இடத்திற்குச் சென்று நல்ல உணவை உண்ணலாம் என்று பறந்து சென்றது.

    தன் இறக்கைகளின் வலிமையை காற்றின் வலியோடு மோதவிட்டது அந்தக் காகங்கள் சிறிது நேரத்தில் பல இடங்கள் கடந்து நகரத்தின் நடுதிசையில் ஒரு வீட்டு மாடியில் அமர்ந்தது.

    எந்த திசையிலும் மனிதனுமில்லை, மரங்களுமில்லை ; மின்னலின் சூட்டைவிட அந்தக் கருகிய கால்களை கருகவைக்கும் மின்கம்பங்களே இருந்தது, அப்போது பசியின் பஞ்சத்தில் காகங்கள் இருந்தன. வாகனத்தின் ஓட்டத்தை விட மனிதன் வேகமாக ஓடுகிறான் ; சூறைக்காற்றின் ஓட்டத்தால் கூட இந்த விஞ்ஞான உலகத்தை நிறுத்த முடியாது போல என்று அந்தக் காகங்கள் சிந்தித்தது.

    அப்போது எதிர்திசையில் பெண்களின் விடுதி ஒன்று இருந்தது. பாதுகாப்பு என்ற வலையத்தில் பெண்களின் அழகு கம்பிகளால் மூடப்பட்டு அந்தக் கம்பிகளுக்குள்ளே கைப்பேசியில் சுதந்திரமான பெண்கள் இருந்தனர்.

    அந்தக் கம்பியின் அருகில் ஒரு பகுதியில் சிறிய நெகிழிக் கூடையில் பலவகையான உணவுகளை கொட்டி வைத்திருக்கிறார்கள். உணவுக்காக பசியில் துடித்த அந்த ஒரு இதயங்கள் மருமுறை வேகமாக துடிக்கிறது. அந்த நாற்றம் பரவும் உணவுகளைக்கின்றி அந்தத் துடிப்பு ருசிக்காக அல்ல, பசிக்காக, ஆனால் ஆனந்தத்தின் வளர்ச்சியில் வேலி போட்டது போல, கம்பிகளால் மூடப்பட்டு இருந்தது.

    அந்தக் கம்பியின் முன் அங்கும் இங்கும் உள்ளே வரமுடியாமல் பறக்கிறது அந்தக் காகங்கள். அந்த விடுதியின் பெண்கள். அதை கண்காட்சி போல் பார்த்துவிட்டு மீண்டும் உணவை கொட்டுகிறார்கள்.

    அந்த ஒரு காகங்களில் ஒரு காகம் என்ன செய்வது நண்பா. நம் பசியால் நாம் முன்பு இருந்த இடத்திற்குச் செல்ல முடியவில்லை ; வேறு எங்கும் உணவு தென்படவில்லை ; உணவு தரக்கூடிய மரங்களை இந்த விஞ்ஞான மனிதர்கள் வளர்க்கவில்லை ; ஓடிக்கொண்டே இருக்கும் இவர்களின் பாதையில் பறவைகளாகிய நாம் தான் பாவப்பட்டவர்களோ? என்றது.

    இரண்டு நாட்கள் கழித்தன. அனைத்து இடங்களையும் சுற்றிவிட்டு தண்ணீரின் தாகம் கூட தயங்கி நிற்கிறது. இந்த அறிவற்ற மனிதர்களிடம் சிறிது நீர்தாருங்கள் என்று கேட்க வேறு வழியின்றி அந்த விடுதிக்கே மீண்டும் சென்றன அந்தக் காகங்கள்.

    உணவின் கூடையையே பார்த்து ஏக்கத்தோடு கலங்கிய நிலையில் அந்தக்காகங்கள் இருந்தன. அங்கு ஒரு பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள் ; நீங்கள் வீணாக்கும் உணவில் சிறிது தாருங்கள். நானும் என் நண்பனும் பசியோடு இருக்கிறோம். அந்த உணவின் பருக்கையில் நாங்கள் உயிர் வாழ முடியம். என்று கரைந்து சொல்கிறது காகங்கள். அந்தக் காகங்களை பார்த்தவாரே அந்தப் பெண்கள் சென்று விட்டனர். பசியின் உச்சத்தில் நண்பா நாம் தவறு செய்துவிட்டோம். இயற்கையின் அழகை அலட்சிய படுத்திவிட்டு வளர்ந்த இந்த விஞ்ஞான உலகை காணவந்தால் நம் நிலைமை இப்படி ஆகிவிட்டதே,  அந்த வயலில் வெயிலோடு போட்டிப்போட்டு நம் மண்ணிடம் ஆசிபெற்று, நிலவின் மடியில் உறங்கிய அந்த உழவனை இல்லை… நமக்கு உணவுகொத்த அந்தக் கடவுளை நாம் காண வேண்டும் இறுதியாக என்று ஒரு காகம் கூற மற்றொரு காகம் மயகத்தின் மறுமொழிகூற முடியாமல் கலங்கி நின்றது.

    இந்த இதழை மேலும்

    சிசு பராமரிப்பு

    தடுப்பூசி

    அனைத்து குழந்தைகளுக்கும், பிறந்தவுடன், மருத்துவமனையிருந்து வீட்டிற்குச் செல்வதற்கு முன் அரசு விதிமுறையின்படி பிசிஜி தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். மஞ்சள் காமாலை நோய்க்கானத் தடுப்பூசியைக் குழந்தை பிறந்தவுடன் போடுவதால், தாயிடமிருந்து குழந்தைக்கு மஞ்சள்காமாலை நோய் பரவுவதைத் தடுக்கலாம்.

    குழந்தையைக் குளிப்பாட்டுதல்

    தொற்றுநோயைத் தடுக்கவும், உடன் வெப்பநிலை குறைவதைத் தவிர்க்கவும் மருத்துவமனையில் வைத்துக் குழந்தையைக் குளிப்பாட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

    தூங்கும் முறை

    குழந்தைக்கு பால் கொடுத்தபின் நேராக படுக்க வைக்க வேண்டும். குப்புற படுக்கவைப்பதால் எதிர்பாராத இறப்பு (SIDS) ஏற்பட வாய்ப்புண்டு.

    பாரம்பரிய பழக்கவழக்கங்கள்

    பலவிதமான பாரம்பரிய பழக்கவழக்க முறைகள் இந்திய கலாச்சாரத்தில் பின்பற்றப்படுகிறது. அதில் சில பாரம்பரிய பழக்கவழக்கங்களான எண்ணெய் தேய்த்தல், கண்ணுக்கு மை பூசுதல், காதுக்குள் எண்ணெய் ஊற்றுதல், மாட்டு சாணத்தைத் தொப்புள் கொடியில் பூசுதல், போன்றவைகளைத் தடுக்க வேண்டும்.

    குழந்தையை வீட்டிற்கு அனுப்பும் முன் கவனிக்க வேண்டியவை

    குழந்தை பிறந்த 72-96 மணிக்குள் குழந்தையை வீட்டிற்கு அனுப்பலாம். ஆனால் குழந்தை கீழ்க்கண்ட விதிமுறைக்குள் அடங்கியிருக்க வேண்டும். அவை,

    • குழந்தைக்கு எந்த விதமான நோய்நொடிகளும் இருக்க கூடாது.
    • குழந்தைக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும்.
    • தேவைக்கேற்ப தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதை எவ்வாறு அறிவது என்றால் குழந்தை பால்குடித்ததும் 2 – 3 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். குழந்தையின் எடை அதிகரிக்கும். குழந்தையின் உடல் எடை குறைவதன் மூலம் குழந்தைக்குத் தாய்ப்பால் சரியாக இல்லை என்பதை அறியலாம்.
    • குழந்தையின் தாய்க்கு எந்த விதமான நோயும் இல்லாமல் இருக்க வேண்டும். அப்போது தான் தாய் குழந்தையை நன்றாகப் பராமரிக்க முடியும்.

    சீக்கிரமாக வீட்டிற்கு அனுப்புதல்

    பொதுவாக, தாய்க்கு முதல் குழந்தை என்றால் 72 மணி நேரத்திற்குள் வீட்டிற்கு அனுப்பக் கூடாது. மாறாக தாய்க்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் குழந்தை என்றால் சீக்கிரமாக வீட்டிற்கு அனுப்பலாம்.

    மருத்துவமனையிருந்து வீட்டிற்குச் செல்லும் முன் பின்பற்றவேண்டிய முக்கியமான குறிப்புகள்

    • குழந்தையை வீட்டிற்கு அனுப்புவதற்கு முன் முழுமையாகப் பரிசோதிக்க வேண்டும்.
    • தாய்க்குக் குழந்தையின் உடல்நிலையைப் பற்றிய சந்தேகங்களை அறிந்து கொள்ள முழு உரிமையை அளிக்க வேண்டும்.
    • குழந்தையை வீட்டிற்கு அனுப்புவதற்கு முன்னர் குழந்தையின் உடல் எடையைப் பரிசோதிக்க வேண்டும். உடல் எடை குறைந்திருந்தால் தாய்ப்பால் கொடுப்பதில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா? என்பதை அறிய வேண்டும்.

    நோய் தடுக்கும் முறைகள்

    • குழந்தை பிறந்தவுடன் சீம்பால் கொடுக்க வேண்டும்.
    • குழந்தையைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
    • குழந்தைக்கு உபயோகமாகும் பொருட்களைத் தனியாக வைக்க வேண்டும். மற்றவர்கள் உபயோகிக்க கூடாது.
    • குழந்தையைக் கையாளுபவர்கள் குழந்தையைத் தொடுவதற்கு முன் கை நகங்களை வெட்டி அழுக்கில்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவி சுத்தமான துணியால் துடைத்திட வேண்டும்.
    • தோல் சம்பந்தமான நோய், வயிற்றுபோக்கு, சளி, இருமல் இருப்பவர்களைக் குழந்தையைத் தொட அனுமதிக்க கூடாது.
    • தாயும் சேயும் தனி அறையில் இருப்பது நல்லது.
    • குடும்பத்தில் விருந்தினர் வருகையைக் குறைப்பது நல்லது.
    • குழந்தையைத் தாயை தவிர மற்றவர்கள் தொடாமல் இருப்பது நல்லது.
    • குழந்தையின் துணிகளைத் தனியாக துவைத்து அலசி, வெயிலில் கயிற்றில் காய வைத்து தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
    • மலம், சிறுநீர் கழித்த துணிகளைத் தனித்தனியே துவைப்பது நல்லது.

      இந்த இதழை மேலும்

    நில்! கவனி !! புறப்படு !!! – 9

    எளிமைப்படுத்துங்கள் ! (பாதை 8)

    வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் நண்பர்களே !

    அனைத்திலும் சிறக்கும் ஆறு லட்சம் குடும்பங்கள் – ஒரு ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்குவதே உங்கள் வண்ணமயமான வாழ்வுக்கு வழி காட்டும் வாழ்வியல் பயிற்சியாளரான  என் லட்சியம்.

    அந்த ஆனந்தக்குடும்பத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ள – இந்தத்தொடர் ஒரு இணைப்புப்பாலம்.

    எளிமைப்படுத்துங்கள் !

    எளிமை ‘ திறமை ‘ வளமை என்பது அனுபவ சூத்திரம். அதாவது, வளமையான வாழ்வுக்கு திறமையை விட மிகவும் அவசியமானது எளிமையான அணுகுமுறையே.

    அன்றாட நடைமுறையில் நீங்கள் சந்திக்கும் அனைத்து விஷயங்களையும் உள்ளது உள்ளபடியே எடுத்துக்கொள்வது ஆபத்தான ஒரு செயல்.  Cut into Pieces – என்று ஆங்கிலத்தில் சொல்வது போல, உங்களுக்கு கிடைக்கும் அணைத்து அனுபவங்களையும் பிரித்து, பகுத்து எளிமைப்படுத்தும்போது கிடைக்கும் உணர்வு – தெளிவாக இருக்கும்.  தேர்ந்த புரிதல் சிறப்பான முடிவுகளை எடுக்க உதவும் ஒரு கருவி.

    உங்கள் மகன்/மகளின்  குறைந்த மதிப்பெண் என்ற வகுப்பு ஆசிரியரின் புகார் – அப்படியே மலைத்தால் அர்த்தம் இல்லை.  எந்த பாடத்தில், எவ்வளவு குறைவு, காரணம் – புரிந்து கொள்வதிலா அல்லது வெளிப்படுத்துவதிலா? என்ற ஆராய்ச்சி, தவறை திருத்திக்கொள்ள இருக்கும் பல்வேறு சாத்திய கூறுகளின் தேடல், அவற்றில் எதை எல்லாம் நம்மால் நடைமுறையில் செய்ய முடியும், கடைபிடிக்க முடியும் என்ற சுய எதார்த்த மதிப்பீடு, அவற்றை கட்டாயமாக கடைபிடித்தே ஆகவேண்டும் என்ற உறுதி – இப்படி ஒவ்வொரு படிகளையும் எளிமைப்படுத்துவது மட்டுமல்ல அவற்றை நூறு சதவீதம் உண்மையாக செயல்படுத்தும்போது – அவை சரியான திசைகளை தான் காட்டும்.

    பணிச்சுமை இல்லாத தொழிலாளர்களும் இல்லை.  பணிகளை முழுமையாக செய்து வாங்கிய முதலாளிகளும் இல்லை.  தனது முக்கியமான தேவைகளை எளிமைப்படுத்தும்போது இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

    இந்த கேள்விக்கு மட்டுமல்ல – எந்த கேள்விக்கும் விடை கிடைக்கும்.

    ஆகவே எளிமைப்படுத்துங்கள் !

    அபூர்வ ராகங்கள் எனும் திரைப்படத்தில் கதாநாயகி கூறும் ஒரு வசனம்  என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ அவருடைய மருமகளுக்கு அப்பா என் மகளுக்கு மாமனார்  அப்படியானால் அவங்களுக்கும் எனக்கும் என்ன உறவு? – என்று கேட்பார்.

    இந்த புதிருக்கான விடை தெரிந்தவர்கள் எனக்கு சொல்லலாம்.  ஆனால், என் கேள்வி – இது போன்ற குழப்பங்களுடனே நீங்களும் சென்று, அனைவரையும் உடன் அழைத்து செல்லும் பட்சத்தில் – அது சேரும் இடம் எது என்று தெரிந்த பயணமாக இருக்காது.  உண்மைதானே ?

    ஒரு சுவாரசியமான செய்தி.

    குளியல் Soap தயாரிக்கும் ஒரு நிறுவனத்திற்கு இப்படி ஒரு புகார் வந்தது.  “சென்ற வாரம் நீங்கள் அனுப்பிய பெட்டி ஒன்றில் Soap ஏ இல்லாமல் வெறும் அட்டைபெட்டி மட்டும் இருந்தது.  வாங்கிச்சென்ற அந்த வாடிக்கையாளர்  திரும்பி வந்து மிகவும் கோபமாக பேசிவிட்டார். இது நமது நிறுவனத்தின் நற்பெயருக்கு நல்லதல்ல.  நடவடிக்கை உடனே எடுக்கவும்” – என்று இருந்தது.  முதலாளியின் கவனத்துக்கு அது கொண்டு செல்லப்பட்டது.  Conference Hall ல் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்ட Meetting ஏற்பாடு செய்யப்பட்டது.

    நூறு சதவிகிதம் கவனமாக இருப்பதாக Production Manager சொன்னார்.  தன் துறைக்கும் இந்த சிக்கலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று வாதிட்டார்.  Packing Department ல் நிறைய ஆட்களை நியமித்து Manual Checking செய்யலாம் என்றார் ஒரு Manager.  சம்பளம் அதிகம் செலவாகும் என்று சொல்லி நிராகரித்தார் முதலாளி.  CCTV Camera இருந்தால் Soap தயார் செய்வது முதல் Packing ஆவது வரை Monitor செய்வது – தவறுகளை தவிர்க்கும் என்றார் இன்னொரு Manager.  இதற்கு நிதி நிலை ஒத்துழைக்காது என்றார் முதலாளி.  பலரும் பல யோசனைகளை சொல்லியும் முடிவு காண முடியாத சூழலில் – தேநீர் இடைவேளை நேரத்தில் அலுவலகத்தில் தேநீர் கொண்டு வரும் சிறுவன் “நான் இதற்கு ஒரு உபாயம் சொல்லலாமா ? என்று கேட்டான்.

    மெத்தப் படித்த படிப்பும் பல வருட அனுபவமும் கொண்ட எங்களால் முடியாத ஒரு விஷயம் உன்னால் மட்டும் எப்படி முடியும்?  பேசாமல் தேநீர் கொடுக்கும் வேலையை மட்டும் பார் – என்று அனைவரும் கோபிக்க, சிறுவன் நேராக முதலாளியிடம் சென்று “எளிமையாக” முடிய வேண்டிய ஒன்றுக்கு ஏன் இத்தனை குழப்பம்?  செலவே இல்லாமல் இதற்கு ஒரு வழியை நான் சொல்கிறேன்.  சரியான தீர்வாக உங்கள் மனதுக்கு பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள்.  இல்லையென்றால் விட்டு விடுங்கள்.  என் மனதில் பட்ட “எளிமையான” யோசனையை நான் சொல்கிறேன்” என்றான்.  முதலாளியும் அனுமதிக்க இப்படி சொன்னான்.

    “தயாரித்த அனைத்து நர்ஹல் களும் தனிப்பெட்டியில் போடப்பட்டு Packing Lock ஆகி Conveyar Belt மூலமாக வரும் இடத்தில் ஒரு பெரிய High Speed Pedastal Fan ஐ வைத்துவிடுங்கள்.  Soap இல்லாத காலி பெட்டியாக இருந்தால் அந்த Fan ன் காற்றின் வேகத்தில் அட்டை பெட்டி பறந்து விடும்.  Soap அதனுள் இருந்தால் பறக்காது.  இதற்கு பெரிய செலவு ஒன்றும் இல்லை.” – என்றான்.  முதலாளிக்கு இந்த யோசனை பிரமாதமாக பட்டது.  சிறுவனை வெகுவாக பாராட்டி – சம்பள உயர்வையும் கொடுத்தார்.

    இந்த இதழை மேலும்

    துணிச்சல்…

    குதிரையேற்றம் சிக்கலான விளையாட்டுத்தான்!  வாழ்வில் கூட எதிர்பாராத தருணங்கள் வருகின்றன! குதிரை மீது அமர்ந்திருக்கிற எல்லா வினாடிகளும் எதிர்பார்க்காதவையே!  அதன் கண்களுக்கு பிளிங்க்கர்ஸ் மாட்டி இருந்தார் மகிழன்பன்.  மகிழன்பன் ஏறிய குதிரையின் பெயர் பாண்டியன்.  பாண்டியன் ஐந்தாறு வயதான ஆண்மகன். அவன் ரோஷனைப் பார்த்து… கிளர்ச்சியடைந்து கொண்டு கால்களைத் தூக்கிப் பாய்ந்துவிடுவானாம்.  அதனால் மகிழன்பனை ஏற்றி தனியாக அனுப்பிவிட்டார் சீராளன்.  சீராளன் மகிழன்பனின் நண்பர் மகன்.  மகிழன்பனுக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி! ஆனால் உயிரில்லாத வாகனங்கள் மீது ஆர்வம் குறைவு கார், பைக் இத்யாதி வகையறாக்களை சொல்கிறேன்.

    மகிழன்பனின் மகளை குதிரை மீதேற்றி படம்பிடிப்பதற்குள்…  போதும்… போதும் என்று ஆகிவிட்டது.  புதிதாக ஒரு விஷயத்தை பரிசீலித்துப்பார்க்க… தைரியம் வேண்டும்தான்.

    அசட்டுத் துணிச்சல்… அவ்வளவு நல்லதல்ல…

    துணிச்சலுக்கும் அசட்டுத்துணிச்சலுக்கும் அவ்வளவு எளிதில் வித்யாசம் சொல்லிவிட முடிவதில்லை.  எனக்கு தெரிந்த மகிழன்பனின் நண்பர் மகள் யாழினி இ.ஆ.ப தேர்வு எழுதுவதற்காக… பல ஆயிரம் இலட்சம் ரூயாய்கள் சம்பளம் தரும் ‘டிலாய்ட்’ நிறுவன பணியை விட்டுவிட்டு வந்து சென்னையில் இறங்கினாள். தி ஃபிக் ஃபோர் (The Big Four) என்று சொல்லப்படும் நான்கு கணக்கு தணிக்கை மற்றும் நிதி சேவை, கலந்தாலோசனை நிறுவனங்களில் ஒன்று ‘டிலாய்ட்’, மற்ற மூன்று என்ன என்று கேள்வி எழுகின்றதல்லவா?  எழட்டும்…

    இப்படித்தான் மகிழன்பனுக்கு… கேள்வி எழுந்தது… என்ன கேள்வி என்பது இருக்கட்டும்… என்ன சூழ்நிலையில் கேள்வி எழுந்தது என்பது… குறிப்பிடத்தக்கது…  கிட்டத்தட்ட மணிக்கு ஐம்பது கிலோமீட்டர் வேகத்தை ஐந்து விநாடித்துளிகளில் அடைந்தபொழுது… குதிரை பாண்டியன்… நான்கு கால் பாய்ச்சலில்… வேகத்தை அதிகப்படுத்திக்கொண்டே இருந்தான்.

    பார்த்திபனும், பிரபாகரனும்… மகிழன்பனை வீடியோ எடுக்கலாம் என்று கூட கிளம்பி ஒரு பைக்கில் வந்துகொண்டு இருந்தனர்.   மெதுவாக ட்ராட் செய்திருந்தால் அழகாக சென்ற ஆண்டு பிடித்தது போல ஒரு வீடியோ எடுத்திருப்பார்கள்.  பிரபாகரன் கியர் மாற்றுவதற்குள் முப்பது அடிதூரம் முன்னால் போயிருந்தான் பாண்டியன்…  இவ்வளவு வேகம் வேண்டாம் என்று தோன்றியது.  பாண்டியன் கேட்டால் தானே… செம்மண் பாதையில்… கிட்டத்தட்ட முன்னூறு மீட்டர்… புழுதி கிளம்ப மேடுபள்ளத்த்தை ட்டக் ட்டக் ட்டக்… ட்டக்…. ட்டக்ட்டக்… என்று கேட்ரிங்கில் (மூன்றுகால் ஓட்டம்) ஆரம்பித்து… பின்னர் கேல்லப்பில் பாய்ந்து…  தார் ரோட்டை எட்டிப்பிடித்த பொழுது… மகிழன்பன் மனதில் லேசாய் அபாய மணி அடிக்கத் தொடங்கி இருந்தது அவருக்கு எழுந்த கேள்வி… தார் ரோட்டில்…. இன்னும் சில வினாடிகள் கழித்து எழுந்தது.

    கேள்வி… என்றவுடன்

    பிறந்தநாள் கேக்கை… வித்யாசமான இடத்தில் வைத்து வெட்டலாமா?

    என்கின்ற கேள்விகூட எழுந்தது… அதன் பலன் ஒரு இனிமையான அனுபவமே!  மகிழன்பன் பிறந்தநாள் கொண்டாடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை.  வேல்விழிக்கு பிறந்தநாள் என்று சீராளனின் பண்ணையில் வைத்துத்தான் தெரியவந்தது.  அவள் தங்கை விழாமலர் சொல்லிவிட்டாள்.

    சீராளன் எங்கிருந்தோ கேக் கொண்டுவந்து சேர்த்திருந்தான்.  அவன் தந்தை திருப்பதி… மிகவும் கண்டிப்பானவர்.  ஆனால் மகிழன்பன் வருகையில் மட்டும் நெகிழ்ந்து போய் சிறு குழந்தையாக மாறிவிடுவார். அதனாலேயே மகிழன்பனை முன்னிறுத்தி சீராளனின் திருமண பேச்சுக்கள் நிகழ்ந்தன.  அந்த மகிழ்ச்சிகரமான இல்லத்தில் நிறைய குழந்தைகள், பெரியவர்கள் என பத்து பேருக்குப் பக்கம் கூடியிருந்தனர்.  அது ஒரு கிராமம்…  காஞ்சிபுரம் அருகேயிருந்தது.  தோட்டத்திற்கும் வீட்டிற்கும் மூன்று கிலோமீட்டர்கள் இருக்கும்… திருப்பதி… தன் இல்லத்தினர் மற்றும் ஊர்க்காரர்களுக்காக ஒரு பெருமாள் கோவில் எழுப்பியிருந்தார்…  அதிலிருந்த தாமரைகளின் சிரிப்பைச் கண்டதால்… முதன் முதலில் தாமரைகள் பூத்த தடாகம் ஒன்றில் இறங்கி மலர்களை ஸ்பரிசிக்கும் வாய்ப்புப் பெற்றார் மகிழன்பன்.   சந்தோஷத்திற்கு அளவேயில்லை.  குழந்தைகள் சற்றே தயங்கித் தயங்கி ஒவ்வொரு அடியாக சாய்ந்து வளைந்து ஆச்சரியக் குரல்களை எழுப்பிக்கொண்டு… வீல்… வீல் என்று பயத்தில் கத்திக்கொண்டு… உள்ளே…. தத்தக்கா பித்தக்கா என அலைபாய்ந்து நடந்தனர்.

    இந்த இதழை மேலும்

    நட்பை வலுப்படுத்தி மேம்படுத்திக் கொள்வது எப்படி?

    நட்பு என்பது புனிதமானது,  மனதிலே மகிழ்ச்சியையும், வாழ்விலே ஒரு ஆனந்தத்தையும், அன்பு பரிமாற்றத்தில்  உயர்  நிலையை  அடையச் செய்வதும் நட்பு  மட்டுமே, உணர்ச்சிப்பூர்வமான நேரங்களிலே    துணையாய் இருப்பதும்,  சிரமமான    நேரங்களில்  உதவி  செய்வதும், துன்பமான வேளைகளில்   ஆறுதலைத் தருவதும், கலங்கிய மனங்களுக்கு   மருந்து  தடவதும் நட்பு தான்.

    நட்பு என்பது மனிதனுக்கு  மூன்றாவது கை, மூன்றாவது கண்,  மனசாட்சியின்   மறு வடிவம், ஏழாவது  அறிவு, சில விசயங்களுக்கு   விடை தரும்  களஞ்சியம், அது  இதயத்தின் மொழி.

    உண்மையின் அடிப்படையில் உண்டாகும் நட்பு களங்கம் இல்லாது. பொய்மையின் அடிப்படையில் உண்டாகும் நட்பு மணலினால் கட்டப்பட்ட மாளிகைக்கு ஒப்பானது, போலியானது, எந்த நேரத்திலும்  அது இடிந்து விழலாம்.

    சில நேரங்களில், சில காரணங்களால் நட்பில் விரிசல் உண்டாகி விடுகிறது.  தற்பெருமை பேசுதல், தானே பெரியவன் என்று காட்டிக் கொள்ளுதல், நண்பர்களை தாழ்த்திப் பார்த்தல், மனக் காயப்படுத்துதல், கேலியும் கிண்டலுமாக நண்பர்களை மையப்படுத்திப் பேசுதல், கடுஞ்சொல் பேசுதல், மற்றவர்களுக்கு முன்னாலே அவமரியாதை செய்தல், குறைகளைப் பெரிதுபடுத்துதல், உதவி செய்ய வேண்டிய நிலையிலே ஓடி ஓளிந்து கொள்ளுதல், தேவையாய் இருந்தால் மட்டும் ஓடி வந்து பேசுதல், தொடர்புகளை குறைத்துக் கொள்ளுதல்,  ஒரு நண்பரைப் பற்றி இன்னொருவரிடம் ஏளனமாகப் பேசுதல், கணக்குப் பார்த்து பழகுதல், காரியத்திற்கு மட்டுமே நெருங்குதல் இவைகளெல்லாம் நட்பின்  விரிசலுக்கு ஏதாவது ஒரு வகையில் காரணங்களாக  அமைகிறது.

    ஒரு நல்ல நட்பு, ஆரோக்கியமான முறையிலேமேம்படுத்த வேண்டுமானால் சில பழக்கங்களை நாம் பின்பற்றியாக வேண்டும்.

    நல்ல நட்பை பங்கம் வராமல் பேணிப் பாதுகாக்கவேண்டும், நெருங்கிய நண்பர்களோடு தொடர்புகளை அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும், ஏதாவது ஒரு வகையில் தவறாது அவர்களோடு பேசவேண்டும்.

    பணிவு என்ற ஆபரணம் மட்டும் உங்களிடம் இருந்தால்  நண்பர்கள் எல்லோரும் உங்களுக்கு அன்போடு ஒத்துழைப்பு நல்குவார்கள்.

    நண்பர்கள் சொல்லுவதை அன்போடு காது கொடுத்துக்கேட்க வேண்டும், விவாதங்கள் பிரச்சனைகளை வளர்க்கும், மௌனம் பிரச்சனைகளை நிறுத்தி வைக்கும்,  புன்சிரிப்பு பிரச்சனைகளை முடித்து வைக்கும்  என்பதை உணர வேண்டும்.

    நண்பர்களுக்குள் நம்பகத் தன்மையை அதிகமாக வளர்த்துக்கொள்ள வேண்டும், பிரச்சனைகள் ஏதும் இருப்பின், அது தொடராமல் இருக்க  பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

    ஏதாவது ஒரு வகையில் நண்பர்களை காயப்படுத்தினால்  மன்னிப்பைக் கேட்டு அதற்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும். நண்பர்கள் யாரவது உங்களை காயப்படுத்தினால் நீங்கள்  ‘மன்னித்து ’ பழக வேண்டும்.

    உங்கள் மேல் நண்பர்கள் பரிவும் கருணையும் காட்டும் அளவு நடந்துக் கொள்ள வேண்டும், உங்களின் வெற்றியில் பங்குபெற அழைக்க வேண்டும், துன்பங்களில் அவர்களாகவே வந்து  பங்கெடுப்பார்கள். பரிவும், பாசமும், அன்பும், பிரியமும், நேசமும், மன்னிப்பும், கருணையும், இதயங்களை இணைக்கும் மருந்துகள்  ஆகும்.

    “குறைகள் இல்லாத மனிதர்களும் இல்லை,குறைகளை மட்டுமே பார்த்தால் உறவுகளும் இல்லை”  என்று சொல்வார்கள், நண்பர்களிடமுள்ள குறைகளை பெரிது படுத்தக்கூடாது, விமர்சிக்ககூடாது, அந்தக் குறைகளை நிவர்த்தி செய்ய வழிகாட்டவேண்டும், பொறுமையும், சகிப்புத்தன்மையும் மட்டும்தான் உறவுகளை வலுப்படுத்தும்.

    ஒவ்வொருவரும் ஒரு தனித்தன்மையோடு உள்ளவர்கள் என்று நீங்கள் உணர்ந்து கொண்டால், சகிப்புத் தன்மையும் சமசரமும் உங்களுக்கு வந்து விடும்.

    நண்பர்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருக்கவேண்டுமே தவிர, துன்பத்தின் தூதுவராக  இருத்தல் கூடாது. அன்பைப்  பகிர்ந்து கொள்ளுதல் என்ற தாரக மந்திரம்தான்  உறவுகளை வலுப்படுத்தும்.

    நட்பின் பழைய  நினைவுகள், மறந்துபோன மகிழ்ச்சிகரமான தருணங்கள், விளையாடிய நேரங்கள், வேடிக்கையாகப் பேசி மகிழ்ந்த காலங்கள், பசுமை நிறைந்த நினைவுகள் இவைகளை நினைவில்  கொண்டு வந்து அடிக்கொரு முறை மகிழ்ச்சியைப்  பகிர்ந்து கொள்ளும் போது நேசம்  பலப்படுகிறது.

    உங்களது பிரச்சனைகளை நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள், அவர்கள் தரும் ஆலோசனை உங்களுக்கு அருமருந்தாக அமையட்டும். உங்கள் கவலைகளை, அவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்,சுமை பாதியாகக் குறையும்,

    வேலைப்பளுவின் காரணமாக, குடும்பச்சுமையின் காரணமாக,பணி அழுத்தத்தின் காரணமாக,நண்பர்களை அடிக்கடி சந்திக்க முடியாமல் போவதுண்டு, அந்த நேரங்களில்   நட்புக்கும் சில மணித்துளிகள் ஒதுக்குங்கள், நேரடியாக பார்க்கமுடியாவிட்டால் தொலைபேசியில் பேசுங்கள், நலம் விசாரியுங்கள்.

    நேசத்தைப் பரிமாறுங்கள்,  சுற்றுலாவிற்கு இணைத்து செல்லுங்கள்,  புதிய சந்திப்புக்களுக்கு நாள் குறியுங்கள்.சிறு சிறு விரும்தோம்பல்களில் கலந்து கொள்ளுங்கள், ஆரோக்கியமான பிணைப்புக்கு அது வழி கோலும்,  நேற்று நடந்த  நிகழ்வுகள் பற்றி  மறுநாள் விவாதியுங்கள், குறைகள் இருந்தால் அப்போதே களைந்துஎறியுங்கள்,  மகிழ்ச்சிப்படக் காரணம் இருந்தால்  மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்,  கோபப்படக் காரணம் இருந்தால்  அதனை   மறந்து விடுங்கள்.மறதியைப் போல மாமருந்து இல்லை. தற்பெருமை மட்டும் பேசாதீர்கள்,   தற்பெருமை நட்புக்கு ஒரு பெரும்  கீறல்.

    இந்த இதழை மேலும்