![]() |
Author: ராமசாமி R.K
|
உயர்ந்த குணங்களின் ஒட்டு மொத்த சாரமே நேர்மை. உண்மை பேசுவது வேறு நேர்மையாக இருப்பது வேறு.
உண்மை பேசுவது முதல்படி, உண்மையாக இருப்பது இரண்டாம்படி, உண்மையாக நடப்பது மூன்றாம்படி. உண்மையாக வாழ்வது நான்காம்படி, நேர்மையாக இருப்பது உச்சப்படி.
உண்மை என்பது பேசுவதைக் குறிக்கும், நேர்மை என்பது செயலைக் குறிக்கும். தலை சிறந்த பண்புகளின் ஒட்டு மொத்தக் கலவைதான் நேர்மை.
நல்ல பண்புகள், உயர்ந்த எண்ணங்கள்,மேன்மையான நடத்தைகள், மாசில்லாத ஒழுக்கம், மனத்தூய்மை,ஈடில்லாத குணங்கள், நேர்மறையான எண்ணங்கள், நேர்த்தியான வாழ்வு, இவைகள் எல்லாம் கறைபடியாத, களங்கம் இல்லாத நேர்மையின் வடிவத்திற்குள் அடக்கம்.
நேர்மை ஒரு மனிதனை புனிதப்படுத்துகிறது, அவன் வாழ்வை மேம்படுத்துகிறது, உள்ளத்தைத் தூய்மைப்படுத்துகிறது. வாக்கிலும் செயலிலும் இனிமையைத் தருகிறது. சுகமான, இதமான மனதைத் தருகிறது, ஆரோக்கியத்தை வளர்க்கிறது. பதட்டத்தையும், கோபத்தையும் குறைக்கிறது. எதிர்பார்ப்பையும், ஏமாற்றத்தையும் அறவே தடுக்கிறது. மன அமைதியையும், ஞானத்தையும் அதிகப்படுத்துகிறது. குறையேதும் இல்லாத வாழ்வைத் தருகிறது, புகழை மேம்படுத்துகிறது, நேர்மை ஒருவரை குன்றின் மேல் விளக்காய் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மக்களின் மத்தியிலே மரியாதையைக் கூட்டுகிறது. அந்தஸ்தையும், கௌரவத்தையும் அதிகப்படுத்துகிறது.
மலர்களைச் சுற்றி பூ வாசம் வீசும் — அது போல
நேர்மையை சுற்றி புகழ் வாசம் வீசும்
வில்லுக்கு கட்டுப்பட வேண்டிய அஸ்திரங்கள் எல்லாம்
நேர்மையின் சொல்லுக்கு கட்டுப்படும்,
ஒருவருடைய நேர்மையினால், ஒழுக்கத்தினால், நடத்தையினால்
செயல்பாடுகளால், பணிகளால், திறமையினால்,
அன்பினால், கருணையினால் புகழ் கிடைக்கிறது.
நாமாக தேடாமல் தானாகக் கிடைப்பது புகழ்
குழந்தைப் பிறக்கும் போது புகழ்ளோடு பிறப்பதில்லை
வளர வளர அதன் நேர்மையான குணங்களால்தான்
புகழ் தேடி வருகிறது,
“ வரப்பு உயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயரும் ”
என்ற பழம் பாடலுக்கேற்ப தனிமனித நேர்மையும், ஒழுக்கமும் சமுதாயத்தை உயர்த்துகிறது, சமுதாயம் உயரும் போது நாடும் உயருகிறது.
இந்த கால கட்டத்தில் நேர்மையாக இருப்பவர்களைப் பார்ப்பதற்கு அரிதாக இருக்கிறது. அத்தி பூத்தாற் போல அங்கொன்றும், இங்கொன்றுமாக இருக்கிறார்கள். ஒழுக்கத்திலும், நேர்மையிலும் குறைவுபட்ட சமுதாயம் அவர்களைக் கவனிப்பது மில்லை, கண்டு கொள்வதும் இல்லை, நேர்மையாளர்கள் ஏளனமாகப் பார்க்கப் படுகிறார்கள். ‘ பிழைக்கத் தெரியாதவர்கள்’ என்ற பட்டம் அவர்களுக்கு சூட்டப்படுகிறது. நேர்மையாக இருப்பவர்கள் கடைசி படியிலே நிற்கிறார்கள், நேர்மையின் நிழல் கூட படியாதவர்கள் உயர்ந்த பீடத்திலே அமர்ந்து கோலோச்சுகிறார்கள், நேர்மை கை கட்டி, வாய் பொத்தி நிற்கிறது.
இந்த இதழை மேலும்

Share

January 2020




















No comments
Be the first one to leave a comment.