தன்னம்பிக்கை மேடை
நேயர் கேள்வி…?
பெண் பிள்ளைகள் மற்றும் ஆண் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் என்ன சொல்லி வளர்க்க வேண்டும்? பாலியல் குற்ற சம்பவங்களை நாம் எவ்வாறு கையாள வேண்டும்?
தாரணி, எழுத்தாளர், மதுரை.
வீடியோ ஒன்றை வாட்ஸ் அப்பில் பார்த்தேன். சிறுவர்களிடம் ஒரு சிறுமியை அறிமுகப்படுத்தி, இவர்தான் எலினா, இவருக்கு ‘ஹலோ’ சொல்லுங்கள் என்கிறார் ஒருவர். ‘ஹாய், ஹலோ’ என்கின்றனர் அந்த சிறுவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக. பின்னர் இந்த சிறுமியை உனக்குப் பிடித்திருக்கிறதா? என்று கேட்கிறார் அவர், ‘ஆம்’ என்கின்றனர் ஒவ்வொரு சிறுவனும்… இவரிடம் எதைப் பிடித்திருக்கிறது என்று கேட்கிறார்; ‘அவளது கண்கள் பிடித்திருக்கிறது’, ‘அவளது புன்சிரிப்பு பிடித்திருக்கிறது’, ‘மொத்தமாகப் பிடித்திருக்கிறது’ என்கின்றனர் சிறுவர்கள். அந்த சிறுமியை பரிகாசம் செய்யுங்கள் என்கிறார், அதையும் வேடிக்கையாகச் செய்கின்றார்கள் சிறுவர்கள். இறுதியாக ‘அவளுக்கு ஒரு அறை குடு’ என்கிறார்… அப்போது ஒவ்வொரு சிறுவனும் தயங்குகிறான். ‘ம்… அறை விடு’ என்கிறார் பிரஞ்சு மொழியில் காட்டமாக… ஒவ்வொரு சிறுவனும் முடியவே முடியாது என்று மறுக்கிறார்கள். ‘ஏன் அறைய மாட்டாய்?’ என்று கேட்கிறார் அவர். ‘அவளும் என்னைப் போல், ஒரு மனிதன்… அவளுக்கும் வலிக்கும்’ என்கிறார் ஒரு சிறுவர். ‘அவள் ஒரு பெண்… பெண் பிள்ளையைத் துன்புறுத்தக் கூடாது’ என்கிறான் ஒரு சிறுவன்… ‘ஒரு சிறுமியை தாக்குவது தவறு’ என்கிறான் இன்னொரு சிறுவன். அதோடு வீடியோ முடிகிறது.
ஆண் பிள்ளைகளை பெற்றோர்கள் எப்படி வளர்த்திருக்கிறார்கள் என்று பாருங்கள். ஆணுக்குப் பெண் சமம் என்பதும், பெண் பிள்ளைக்கு துன்பம் தரக்கூடாது என்பதும் அவர்களது கலாச்சாரத்தில் ஊறிப்போய் இருக்கிறது. ஆண் பிள்ளையாக இருக்கும் நாம் பெண் பிள்ளையைத் துன்புறுத்தக்கூடாது, அவளுக்கு இம்சை தரக்கூடாது என்ற ஒரு கொள்கையை தீவிரமாக ஆண் பிள்ளைகளிடம் சிறுவயதிலேயே விதைத்திருக்கிறார்கள் பெற்றோர்கள். அவர்களது தந்தைகள் கூட தாய்களிடம் மரியாதையாக நடப்பதையும் கண்கூடாகப் பார்க்கிறார்கள் அந்த சிறுவர்கள்.
பாலியல் பயங்கர நிகழ்வுகள் பல நடந்திருக்கிறது, கோவையிலும், டில்லியிலும், சமீபத்தில் ஹைதராபாத்திலும் நடந்த நகழ்வு அனைவருக்கும் தெரியும். இப்படியொரு நிகழ்வு பரபரப்பானதும் படு பாதக குற்றவாளியை உடனே என்கவுண்டர் செய்யுங்கள் என்று பொதுமக்கள் கொதித்து எழுவதை பார்க்கிறோம். அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அவர்கள் தரும் நெருக்கடியைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
பொதுமக்களுக்கு கோபமும், விரக்தியும் ஏன் வந்தது? புலன் விசாரனணயில் சுணக்கம், ஊடகங்களில் போலி தகவல்கள், மறுக்கப்பட அல்லது தாமதமான நீதி போன்றவை மக்களுக்கு குற்ற பரிபாலனை – அமைப்புகள் மீது அவநம்பிக்கை ஏற்பட காரணமாயின. டெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் வன்முறை மற்றும் கொலை, 16 டிசம்பர் 2012 அன்று நடந்தது. ஆனால் இந்நாள் வரை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படவில்லை!
ஆனால் சிலர் இந்த நீதி மறுப்பிற்கு அல்லது தாமதத்திற்கு அரசுகள் தான் காரணம் என்று எளிதில் குற்றம் சாட்டி விடுகின்றனர். ஆனால் இது போன்ற குறைகூறும் பழக்கத்தால் எந்த பயனும் ஏற்படாது. ஏனென்றால், இதுபோன்ற சம்பவம் நடக்க பல காரணங்கள் உண்டு.
பொதுமக்கள் கொதித்தெழுந்து ஆவேசமாகப் போராடுவதால்தான் ‘என்கவுண்டர்’ போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன என்ற கோணமும் இதில் இருக்கிறது. காவல் துறையின் குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லவே திணறுகிறார்கள், அந்த அளவுக்கு பொதுமக்கள் வழிமறித்து குற்றவாளிளைத் தாக்குகிறார்கள். இந்தத் தருவாயில் காவல்துறையிரையும் தாக்குகிறார்கள். பொதுமக்களோடு சமூக விரோதிகளும் சேர்ந்து விடுவதால் காவலர்களுக்கு அந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிப்பது கூட கடினமான காரியமாகிவிடுகிறது.
இந்த இதழை மேலும்
0 comments Posted in Articles