டாக்டர் எஸ். ராமகிருஷணன் M.B.B.S.,F.A.C.S( Austria),Dip.Card (Vienna)
Consultant Cardiologist
THE POLLACHI CARDIAC CENTRE
பொள்ளாச்சி.
அடுத்துவர் மனதை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுதும் சுபதினம் என்பார் கவிஞர் கண்ணதாசன். இவ்வரிகள் மருத்துவத்துறைக்கு மிகவும் பொருத்தமான ஒன்று. அதிலும் குறிப்பாக இவருக்கு மிகவும் பொருந்தும்.
முயற்சியும் பயிற்சியும் தொடர்ச்சியாக இருந்தால் சாதாரண மனிதனும் சாதனையாளன் ஆகலாம் என்னும் தாரக மந்திரத்தை தன் வாழ்நாளில் கண்ணாகப் போற்றி சாதித்து வரும் சாதனையாளன்.
கொங்குப் பகுதியில் தலை சிறந்த இதய நோய் சிகிச்சை மருத்துவர்களில் முன்னோடி.
தலைக்குள் கனமிருந்தும் தலைக்கனம் சற்றும் இல்லாதவர். அனைவரிடமும் அன்பாகவும் பண்பாகவும் பழகக்கூடியவர்.
முடிந்தவரை முயற்சிப்பதல்ல முயற்சி ஒரு செயலை திறம்பட முடிக்கும் வரை முயற்சிப்பது தான் சிறந்த முயற்சி என்னும் வாக்கிற்குச் சொந்தக்காரர்.
அயல்நாடுகளில் கற்ற நுண்ணறிவும், தன் அறிவால் கற்ற செயலறிவையும் கொண்டு இந்தியாவில் தன் பெயரை நிலை நிறுத்தி வரும் THE POLLACHI CARDIAC CENTRE நிறுவனர் டாக்டர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு
கே: உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் சொல்லுங்கள்?
நான் கொங்கு பகுதிகளின் ஒன்றான பொள்ளாச்சியில் தான் பிறந்தேன். தந்தையார் திரு. சண்முக ரெட்டியார் சுதந்திரப் போராட்ட தியாகி, தாயார் காளியம்மாள். மிகச் சிறு வயதிலேயே தாயும், கல்லூரிப் பருவத்தில் தந்தையாரும் இறந்து விட்டனர். நாங்கள் மொத்தம் ஆறு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். தற்சமயம் 4 சகோதரர்களும் ஒரு சகோதரியும் தான் இருக்கிறோம். மூத்த சகோதரர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் கோபியில் உள்ளார். அடுத்த சகோதரர் திரு. முத்துகுமாரசாமி அவர்கள் எங்கள் மருத்துவமனையில் நிர்வாகப் பொறுப்பைக் கவனித்துக் கொள்கிறார். இளைய சகோதரர் திரு. சுப்பராயன் ARVIND OPTICALS என்ற பெயரில் பொள்ளாச்சியில் தொழில் செய்கிறார். சகோதரி திருமதி. ராஜேஸ்வரி அவர்கள் SSLC படித்து ஆசிரியராக சேர்ந்து திருமணத்திற்குப் பின் அவர் கணவர் திரு. ஜெகன்நாதன் அவதர்கள் ஊக்கத்தின் பேரில் ஆசிரியப் பணியின் இடையே மேலும் M.A., M.Ed., படித்து, தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்று சென்னையில் வசிக்கிறார்.
எனது மனைவி டாக்டர் கீதா, ஆந்திராவில் பிறந்து கர்நாடாகாவில் வளர்ந்து, சிறு வயது முதல் பெருநகர் பெங்களூரில் வளர்ந்து வந்தாலும் கூட பொள்ளாச்சியில் வாழ்க்கைப்பட்டவுடன் இடத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், துளு போன்ற பல மொழிகளைப் பேசும் பன்மொழி வித்தகர். இவர் ஒரு கண் சிகிச்சை மருத்துவர். எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகன் சுஜய் நிக்கல் என்னைப் போல இருதய நோய் மருத்துவர். மருமகள் டாக்டர் சமீரா கண் மருத்துவர். மாமியார் டாக்டர் கீதாவை போல தற்சமயம் நாங்கள் அனைவரும் எங்களுது மருத்துவமனையில் தான் பணியாற்றுகிறோம். எனது மகள் நிவேதிதாவிற்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும், அவர்களை பொறியியல் படிக்க வைத்தேன். மருமகன் ஸ்ரீராம் அவர்களும் பொறியியல் பட்டதாரி. மகளும் மருமகனும் தற்போது அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்து, அங்கே பணியாற்றி வருகிறார்கள்.
கே: தங்கள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள்?
நான் பொள்ளாச்சி நகரில் உள்ள நகராட்சி பள்ளியில் ஆரம்பக்கல்வியும், நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் தான் பயின்றேன். பின்னர் பொள்ளாச்சி NGM கல்லூரியில் PUC படித்தேன். பொதுவாக தமிழில் நல்ல ஆர்வம் இருந்ததால்தான் PUC தமிழ் படித்த வரைக்கும் நான் தான் தமிழ்ப் பாடத்தில் முதல் மதிப்பெண் எடுப்பேன்.
சென்னை நகரில் அதன்படி M.B.B.S படித்து முடித்தவுடன் நீலகிரியில் அரசாங்க மருத்துவமனையில் ஒரு மூன்று ஆண்டு காலம் பணியாற்றினேன். அதன் பிறகு அரசு ஒரு ஆணைப் பிறப்பித்தது. மத்திய கிழக்கில் உள்ள இரான் நாட்டில் பணியாற்ற நானும் சென்றேன். அங்கு ஒரு ஐந்து ஆண்டுகள் பணியாற்றினேன். பணியாற்றி முடித்தவுடன் மேற்படிப்பு முடித்து மீண்டும் இந்தியாவிற்கு வர வேண்டும் என்று நினைத்தேன். ஆதனால் இங்கிலாந்து நாட்டில் ஒரு வருடமும் மேற்கு ஜெர்மனி நாட்டில் ஒரு வருடமும் பயிற்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் ஆஸ்திரியாவின் தலைநகர் வியண்ணாவில் தான் கார்டியாலஜி சம்மந்தமான அத்துனை நுணுக்கத்தையும் கற்றுக் கொண்டேன். இப்படியே என்னுடைய பயணம் தொடங்கியது.
கே: தமிழ்நாட்டிற்கு வந்த உங்கள் முதல் மருத்துவப் பயணம் பற்றிச் சொல்லுங்கள்?
1974 யிலிருந்த 1984 ஆம் ஆண்டு வெளிநாடுகளிலேயே எனுடைய மருத்துவ பயணம் அமைந்தது. அதன் பிறகு 1984 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தேன். வந்தவுடன் கோவை இராமகிருஷ்ண்னா மருத்துவமனையில் பணியாற்ற வாய்ப்புகள் கிடைத்தது. அருட்செல்வர் மகாலிங்கம் அவர்களை நான் சின்ன வயதிலிருந்தே பார்த்து வளர்ந்தவன். என்னுடைய தந்தையும் அவருடைய தந்தையும் நெருங்கிய நண்பர்கள்.
அப்போது அருட்செல்வர் அவர்கள் ஒரு முறை நான் கோவையில் பணியில் சேர இருக்கும் சந்தர்ப்பத்தில் கோவைப் பகுதியில் மருத்துவம் சார்ந்த அத்துனை சிகிச்சை முறைகளும் இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு வெளிநாடுகளில் இருப்பது போல் அவ்வளவு வசதிகள் இல்லை என்று கூறினேன். அதற்கு, அப்படியிருக்கும் போது நீங்கள் ஏன் இப்பகுதியில் ஒரு மருத்துவமனை தொடங்க கூடாது என்று கேட்டார். அவரின் வாக்கினை வேதவாக்காக ஏற்று எங்களுக்குச் சொந்தமான ஒரு வீட்டை மெருகேற்றி மருத்துவமனையாக மாற்றினேன்.
கோவைப் போன்ற பகுதிகளில் நிறைய மருத்துவமனைகள் இருந்தது. ஆனால் இங்கு அப்படி எதுவுமில்லை. ஆனால் சொந்த ஊரிலே மருத்துவமனை தொடங்கி அங்கே மருத்துவராக இருப்பது என் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
கே: வெளிநாடுகளில் மருத்துவராய் பணியாற்றுவதற்கும், ஒரு சின்னப்பகுதியில் பணியாற்றுவதற்கும் உள்ள வேறுபாடு எப்படியிருக்கிறது.
மாற்றங்கள் நிறைய இருக்கத்தான் செய்யும். இங்கு பணியாற்ற வந்துவிட்டோம் இனி இங்கு எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை மட்டுமே யோசிக்க வேண்டும். வெளிநாடு சிகிச்சை வேறுபாட்டிருந்தாலும் நோய் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. அதற்கு வெளிநாடு உள்நாடு என்று எதுவும் இல்லை.
மருத்துவருக்கு நோயை எப்படி குணம்படுத்த வேண்டும் என்பது மட்டும் தான் யோசிக்க வேண்டுமோ தவிர இடத்தைப் பற்றி யோசிக்க கூடாது. எல்லாத் துறையிலும் கடிமான சூழல் இருக்கத்தான் செய்யும் ஆனால் அங்கு தான் நாம் கற்றுக் கொண்ட பயிற்சிகளை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும்.
கே: கார்டியாலஜி துறையைத் தேர்ந்தெடுத்தன் காரணம் பற்றி?
மருத்துவத் துறையில் பல பிரிவுகள் இருக்கிறது. ஆனால் உயிர் கொடுக்கும் துறை என்றால் அது இத்துறை தான். அது மட்டுமின்றி இத்துறை மருத்துவத்திலே எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. பிடித்த துறையில் பிடித்தார் போல் பணியாற்றுவதில் உள்ள மகிழச்சி வேறு எதிலும் இல்லை. அதிலும் நான் வெளிநாடுகளில் பணியாற்றும் போதும் இத்துறை சார்ந்த சிகிச்சை முறை பற்றி மட்டுமே பயிலும் வாய்ப்பு கிடைத்தது. அதானல் தான் இத்துறையை நான் தேர்ந்தெடுத்தேன்.
கே: கடந்து வந்த பாதையில் உங்களால் மறக்க முடியாத நோயாளிகள் பற்றி?
ஒரு மருத்துவருக்கு ஒவ்வொரு சிகிச்சையும் ஏதேனும் ஒரு விதத்தில் ஒரு மாற்றத்தையும் மறக்க முடியாத நிகழ்வையும் கொடுத்து கொண்டு தான் இருக்கும். அந்த வகையிலும் என் மனதில் நீங்காத நிகழ்வுகள் நிறைய இருக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் என்னிடம் சிகிச்சை பெற்ற ஒரு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மறைந்த திரு. அப்பாசாமி நாயுடு அவர்கள் இறக்கும் முன் மரண சாசனம் என்று ஒரு தாளில் என்னைப் பற்றியும் எனது சிகிச்சை பற்றியும் மிக மேன்மையாக எழுதி வைத்துச் சென்றது மிகவும் பெருமையாக இருந்தது. இன்றும் அக்கடிதம் என்னிடம் பத்திரமாக இருக்கிறது.
கே: வெளிநாடுகளில் நீங்கள் பணியாற்றும் போது அங்குள்ள மருத்துவர்களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்டது என்ன?
அங்கு எல்லோம் நேர மேலாண்மையை சரியாகப் பயன்படுத்துவார்கள். அவர்களுக்குள் காலதாமதம் ஒரு போதும் இருந்திடாது. ஒரு வேலை எடுத்துக் கொண்டால் அதை முடிக்கும் வரை அதைப் பற்றி மட்டுமே தான் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.
இவர்களுக்கு யாரும் ஒருவர்; சூப்பர்வைசராக இருந்து கொண்டு கண்காணிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அவரவர் வேலையை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.
வேலை நேரத்தில் வீண் பேச்சு, வெட்டி விவாதம் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்த்து விடுவார்கள்.
சரியான நேரத்திற்கு உள்ளே வருவார்கள். சரியான நேரத்திற்குள் வெளியே சென்று விடுவார்கள்.
ஓய்வு நாட்களை ஓய்வுக்காக மட்டுமே தான் பயன்படுத்துவார்கள். இப்படி எண்ணற்றவைகளை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன்.
கே: தற்போது உணவு பழக்க வழக்கங்களில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கிறது, அது பற்றி?
கலாச்சாரம் என்ற பெயரில் நம்மில் நிறைய பேர் பழமையை மறந்து வருகிறோம். முன்பெல்லாம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் ஹார்ட் அட்டாக் போன்ற இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டது.. ஆனால் தற்போது 16 வயதுடைய கல்லூரியில் படிக்கும் பிள்ளைகளுக்கும் ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது என்றால் அதற்கு காரணம் அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகள் மட்டுமின்றி மன உளைச்சலும் தான்.
Fast Food & Fast Life are to be Considered Double Edged Knife
அது மட்டுமின்றி முன்பெல்லாம் இளைஞர்கள் எல்லோரும் நன்றாக விளையாடுவார்கள். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வார்கள். உடற்பயிற்சி, கால்பந்து, கைபந்து, கிரிகெட் , கபடி என நிறைய விளையாட்டுகள் விளையாடுவார்கள். உடல் பலமானதாக இருந்தது. அனால் தற்போதை உள்ள பிள்ளைகள் வெளியே சென்று விளையாடாமல் செல்போனில் விளையாடி அதிலே முழ்கி இருக்கிறார்கள். இதனால் அவர்களுககு எவ்வித உடல் அசையும் உடற்பயிற்சியும் செய்யாமல் இருப்பதால் அவர்களுக்கு இதயம் சார்ந்த பிரச்சனைகள் வருகிறது.
பெற்றோர்கள் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தன் பிள்ளைகள் நன்றாக படித்தால் மட்டும் போதும் என்று நினைக்கிறார்கள். பள்ளி முடிந்தால் ட்யூசன், ட்யூசன் முடிந்ததும் வீட்டில் படிக்க வைக்கிறார்கள். இது அவர்களின் உடலளவிலும் மன அளவிலும் பெரிதாக பாதிக்கப்பட்டு விடும். என்று சொல்லிக் கொள்கிறேன்.
கே: உங்கள் தந்தையிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்டது?
என் தந்தை ஒரு சுதந்திர போராட்ட வீரர். இரண்டு முறை சுதந்திரத்திற்காக சிறைச் சென்றுள்ளார். நாச்சிமுத்து கவுண்டர், சி. சுப்ரமணியம் ஆகியோருடன் நெருங்கி பழகக்கூடியவர். கோவை மாவட்டத்திலேயே முதல் கதராடை கடையை வைத்தவர் இவர் தான். எப்பொழுதுமே வெள்ளை நிற ஆடையை மட்டுமே அணிவார். பெரிய மீசை வைத்திருப்பார்.
எனது தந்தை மிகவும் கடவுள் பக்தி உள்ளவர். எங்களிடம் எப்போதும் ஒன்றை மட்டும் சொல்லிக் கொண்டிருப்பார். உண்மையும் உழைப்பும் மட்டும் உன்னை உயர்த்தும் வல்லமை கொண்டது என்று என் தந்தை கூறியதை இன்றும் என் வாழ்நாளில் கடைபிடித்து வருகிறேன். அதுமல்லாமல் ஒருவர் தன் வருமானத்தில் 10 % தானம், தர்மம் செய்து பிறருக்கு உதவ வேண்டும் என்பார். அதே போல் நானும் சுமார் 10 % மற்றவர்களுக்கு உதவ ஒதுக்கி வைப்பேன்.
இங்கு மருத்துவர் தொழில் ஆரம்பித்த நாட்கள் முதல் இன்று வரை என்னால் முடிந்த அளவிற்கு உளமாற நோயாளிகளுக்காக பணியாற்றி கொண்டு இருக்கிறேன். மேலும் எங்களுது இருதய நோய் அமைப்பில் நான் பல்வேறு பொறுப்புகளில் இருந்து விட்டேன். தற்போது இந்திய அளவில் உள்ள சிறந்த கார்டியாலஜி மருத்துவர்கள் அனைவரையும் எனக்கு நன்றாக தெரியும். நான் கோவை மாவட்ட கார்டியாலஜி துறையின் தலைவராக இருந்திருக்கிறேன். தமிழ்நாடு அளவில் இதே பிரிவில் துணை தலைவராக இருந்திருக்கிறேன். அதுமட்டுமின்றி அகில இந்திய அளவில் ஆலோசனை குழுவிலும் பணியாற்றி இருக்கிறேன். இருதய நோய் தொடர்புள்ள இந்திய மற்றும் சர்வதேச இயக்கங்களிலும் அங்கத்தினராக இருக்கிறேன்.
கே: தற்போதைய உள்ள இளம் மருத்துவர்களைப் பற்றிச் சொல்லுங்கள்?
மருத்துவம் என்பது மிகவும் மகத்துவம் நிறைந்தது. தற்போதைய உள்ள இளம் தலை முறை மருத்துவர்கள் அதிகளவில் ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதை சற்று மாற்றிக் கொள்ள வேண்டும். ஈடுபாடும், இணைப்புத்தன்மையும் சற்று குறைவாகத்தான் இருப்பது போல் தோன்றுகிறது. அப்போதெல்லாம் நாங்கள் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை பார்ப்போம். பகல் இரவு பாராமல் வேலை செய்வோம். ஆனால் தற்போதைய இளைஞர்கள் இதை செய்வதாக தோன்றவில்லை.
எங்கள் காலத்தில் எங்களுக்கு என்று முன்னோடிகள் யாரும் இல்லை. அனைத்தையும் நாங்களே தான் கற்றுக் கொண்டோம். எவ்வளவு பெரிய சந்தேகங்கள் ஏற்பட்டாலும் அதை நாங்களே நிவர்த்தி செய்து கொண்டோம். ஆனால் தற்போது அப்படிப்பட்ட சூழல் இல்லை. ஏதேனும் துறை சார்ந்த சந்தேகம் என்றால் அதைப் போக்க நிறைய மருத்துவர்கள் இருக்கிறார்கள். வலைதளத்தல் இல்லாத விபரமே இல்லை.ஆனால் தற்போது இளம் மருத்துவர்கள் மத்தில் நல்ல நம்பிக்கை இருக்கிறது. என்பதை என்னால் உணர முடிகிறது. அவர்கள் நிறைய சாதிப்பார்கள்.
கே: பொதுவாக மருத்துவர் என்றாலே ஓய்வில்லா வேலை என்று சொல்வார்கள் அது பற்றி உங்களின் கருத்து?
அது உண்மை தான். மருத்துவம் என்பது மிகவும் மதிக்கப்பட வேண்டிய ஒன்று. அதிலும் பல்வேறு அழுத்தங்கள் இருக்கத்தான் செய்யும். அதை நினைத்து வருத்தம் கொள்ளாமல் அடுத்தடுத்த படிநிலைகளை நோக்கி பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் நம்மால் வளர்ச்சி நிலையை அடைய முடியும்.
நான் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை எடுத்து விடுவேன். மனிதனுக்கு ஓய்வு என்பது ஒரு பரிசு. அது கிடைக்கும் போதெல்லாம் வாங்கி பயன் பெற்றுக் கொள்ள வேண்டும்.
நான் நிறைய புத்தகங்களைப் படிப்பேன், விளையாட்டிற்கு நேரத்தை ஓதுக்குவேன். அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று நான் ஒரு போதும் ஆசைக் கொண்டதில்லை. கிடைத்ததை வைத்து எந்தளவிற்கு மன மகிழ்வாய் இருக்க முடியிமோ அப்படி இருந்து விடுவேன்.
நம்மை விட வசதிப்படைத்தவனை நினைத்து அவருடன் நாம் ஒப்பிட்டுப் பார்க்க கூடாது. வசதியில் குறைந்தவனோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டால் வாழ்வு வளமாக இருக்கும். மனஅழுத்தம் இத்தகைய காரணத்தினால் தான் ஏற்படுகிறது.
கே: ஒரு புறம் நோயும் மறுபுறம் மருத்துவமனையும் பெருகிக் கொண்டு போகிறது. அது பற்றி சொல்லுங்கள்?
நோயின் பெருக்கதால் தான் மருத்துவமனையின் வளர்ச்சி அதிகளவில் வந்து விட்டது. தற்போது மக்கள் இடையே விழிப்புணர்வு எவ்வளவு தான் இருந்தாலும் அதை புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
வருமுன் காப்பது சிறந்தது என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியவில்லை. நல்ல பழக்கங்களை யாரும் கடைபிடிப்பதில்லை. யோகா நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி போன்றவை செய்தாலே போதும் உடலும் மனமும் நன்றாக இருக்கும்.
நேரமின்மை என்று இங்கு எதுவுமில்லை. நேரத்தை நாம் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 30 நிமிடம் நேரத்தை ஒதுக்கி யோகா செய்யாமல் இருப்பதால் தான் நோய் ஏற்பட்டு பல நாட்கள் மருத்துவமனையிலேயே தங்குகிறோம்.
இதைத் தவிர்க்க வேண்டும் . வந்தப்பின் எதிர்கொள்வதை விட வருமுன் காப்பது சிறந்தது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். உணவில் அக்கறை செலுத்துங்கள்.
யாகாவாராயினும் நாகாக்க வேண்டும்…
கே: இதயத்தின் மகத்துவம் பற்றிச் சொல்லுங்கள்?
இதயம் ஒரு கோயில் இது தான் என்னுடைய தாரக மந்திரம். கோயிலுக்குச் சொல்ல வேண்மென்றால் நம் எப்படி பயபக்தியோடு இருக்கின்றோமோ அது போல் தான் இதயத்தின் மேலும் பக்தியோடு இருக்க வேண்டும்.
நம் நன்றாக வாழ இதயம் எப்படி எப்போதும் துடித்துக் கொண்டே இருக்கிறதோ அதற்கு நாம் நன்றியை செலுத்த வேண்டும். என கடன் பணி செய்து கிடப்பது என்பது இதயத்திற்கு மிகவும் பொருத்தமான வரிகள்.
கொழுப்பு சத்துள்ள எண்ணைப் பண்டங்களை சாப்பிடுவதைத் தவிருங்கள். அப்படியே சாப்பிட்டாலும் அதற்கு ஏற்றார் போல் நன்றாக உடற்பயிற்சி செய்தாலே போதுமான ஆரோக்கியம் கிடைத்து விடும்.
உடல் பருமனே அத்துனை நோய்களுக்கு அஸ்திவாரம். அது தான் இதயத்தின் பாதிப்பிறகு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இதயம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் பருமனை தவிர்க்க வேண்டும்.
ஒரு தாய் கறுவுற்று 5 வது வாரத்திலிருந்து குழந்தைக்கு இதயம் துடிக்கத் தொடங்கி, வாழ்நாள் முழுவதும் துடித்து கொண்டேயிருக்கும்.
நாம் தூங்கும் போது மூளை முதற்கொண்டு எல்லா உறுப்புகளும் ஓய்வெடுக்கும் ஆனால் இதயம் அப்படி இல்லை. ஓய்வெடுக்காமல் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு உறுப்பு. அதை நாம் சரியாகப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பு.
கே: இந்திய மருத்துவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?
இந்திய மருத்துவம் என்பது மகத்துவம் மிகுந்தது. உலகத்திலேயே சிறந்த மருத்துவத்தை கடைபிடித்து வந்த நாடுகள் சீனாவும் இந்தியாவும் தான்.
ஆங்கிலேயர் வருவதற்கு முன்னர் நம் நாட்டில் இந்திய மருத்துவம் கொடிகட்டி பறந்தது. அவர்களின் வருகைக்குப் பின்னரே இந்திய மருத்துவம் முற்றிலுமாக அழிந்தது. தற்போதும் பாரம்பரியத்தை காக்கும் விதமாக சிலர் இந்திய மருத்துவத்தைத் திறம்பட செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களை சரியாக இனங்கண்டு அவர்களிடம் மருத்துவம் பார்க்க வேண்டும்.
இன்றும் கூட அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளில் நம் இந்திய பாரம்பரியத்தை காத்த மருத்துவர்களின் புகைப்படம் வைத்து காத்து வருகிறார்கள் என்பது கூடுதல் சிறப்பாக இருக்கிறது.
கே: தங்களது ஆசிரியர்கள் பற்றி?
எனது ஆசிரியப் பெருமக்களை நினைத்தாலே மிகப் பெருமையாக இருக்கிறது. ஒன்றாம் வகுப்பு முதல் கடைசி வரை நான் பயின்ற அத்துனை ஆசிரியர்களுக்கும் நான் மிகவும் கடன் பட்டிருக்கிறேன். எனது ஆசிரியர் பெருமக்களை நினைத்தாலே மிகவும் பெருமையாக இருக்கிறது. ஆறாம் வகுப்பு ஆசிரியர் திரு. வெங்கடாசலம், ஓன்பதாம் வகுப்பு ஆசிரியர் திரு. கிருஷ்ணமூர்த்தி, SSLC ஆசிரியர் திரு. ராமகிருஷ்ணன்,பியுசி யில் தனது சிம்மக்குரலால் வசீகரித்த திரு. பொன்ராஜ், செந்தமிழை தேனருவி போல் கொட்டும் சிற்பி பாலசுப்ரமணியம் போன்ற ஆசிரியர்கள் தன் வாழ்நாளில் மறக்க முடியாது. ஏறக்குறைய எனக்கு கல்வி அளித்த அத்துனை ஆசிரியர்களுக்கும் மருத்துவம் பார்த்தேன். அதுவே எம் பாக்கியம்.
கே: உங்களுக்குப் பிடித்த மனிதர்கள் பற்றி?
நான் சிறுவயது முதல் பார்த்து பழகிய அருட்செல்வர் டாக்டர். N. மகாலிங்கம் ஐயா அவர்கள் முன்பு வசித்தது எங்களது வீட்டிற்கு சற்று எதிர் வீடு. அவர் ஒரு மகான். தீர்க்கதரிசியாக என்னை ஈர்த்தவர். பல வழிகளில் எனக்கு உதவி புரிந்திருக்கிறார். எனது படிப்பிற்கும், வாழ்க்கைக்கும் எப்போதும் வழிகாட்டியாக இருந்தவர். எனது வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனது முத்திரையைப் பதித்தவர். அப்பெருமகானோடு பல செஸ் விளையாடிய நாட்களும், அவருக்கு ஒரு மருத்துவராக இருந்தது எனது பாக்கியம்.
மற்றும் அருட்செல்வரைப் போலவே காந்திய வழியையும் விவேகானந்த கொள்கைகளை இளம் தலைமுறையினருக்கு பரப்புவதை தனது குறிக்கோளாகக் கொண்டவர் அருட்செல்வரின் மருமகனும், பாரதிய வித்யா பவனின் தலைவருமான Dr. B.K. கிருஷ்ணராஜ் வாணவராயர் தமிழிலும், ஆங்கிலத்திலும் அழகாகப் பேசக்கூடியவர். தனது மிடுக்கான மெருகூட்டிய பேச்சாற்றலால் அனைவரையும் கவரக் கூடிய காலம் தவறாத சிந்தனையாளர். எங்களது ரோட்ரி சங்கத்தின் பட்டையத் தலைவர். அவருடன் நெருக்கமாகப் பழகி சேவைகள் பல செய்யும் போது சிறு சிறு விஷயங்களில் கூட அவர் காட்டும் ஈடுபாடு என்னை பிரமிக்கச் செய்யும்.
கே: தங்கள் மருத்துவ நண்பர்கள் பற்றிச் சொல்லுங்கள்?
நான் பெரிதும் மதிக்கும் உலகளாவிய பிரசித்தி பெற்ற காலம் சென்ற டாக்டர் K.P. மிஸ்ரா அவர்கள். அப்பல்லோ மருத்துவமனையின் தலைசிறந்த இருதய நோய் நிபுணர். அவர் எனக்கு நெருங்கிய நண்பர் மட்டுமல்லாமல், எனது வழிகாட்டியாகவும், ஆசானாகவும் விளங்கியவர்.
எனக்கு பல துறைகளிலும் நிறைய மருத்துவ நண்பர்கள் இருக்கிறார்கள். கோவை மாநகரில் உள்ள எல்லா இருதய நோய் மருத்துவர்களுமே எனது நெருங்கிய நண்பர்கள் குறிப்பாக Dr. J.K. பெரியசாமி, Dr.S. முரளிதரன், Dr.S. நடராஜன், Dr. P.R. வைத்தியநாதன், Dr. தாமஸ் அலெக்ஸôண்டர், உடுமலை ஈழ். சந்திரபாலன், பொள்ளாச்சியில் ஈழ். முத்துக்குமாரசாமி, காலம் சென்ற ஈழ். ஜோதிலிங்கம் அனைவரும் எனது முன்னேற்றத்திற்கு உறுதுணையாக பெரிதும் உதவினார்.
கே: தாங்கள் பெற்ற விருதுகளைப் பற்றி?
பல்வேறு சேவா சங்கங்கள் எனக்கு மருத்துவச் செம்மல், மருத்துவ மாமணி, வாழ்நாள் சாதனையாளர் என்பது போன்ற பல விருதுகளையும், இந்திய மருத்துவ சங்கம் BEST DOCTOR AWARD என்ற விருதினையும், நான் படித்த NGM கல்லூரி, மற்றும் மருத்துவக் கல்லூரியில் BEST ALUMNI AWARD போன்ற விருதுகளைப் பெற்றுள்ளேன். எம்ஜிஎம் கல்லூயில் சிறந்த முன்னாள் மாணவன் விருதைப் பெற்றிருக்கிறேன். சிறந்த குடிமகன் விருது, மருத்துவ செம்மல் விருது, மருத்துவ மாமணி விருது இன்னும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறேன்.
பாரத நாடு பழம்பெருநாடு
நீரதன் புதல்வர், இந்நினைவகற்றீர்…
நேர்காணல் : டாக்டர் கலைச்செல்வி செந்தில்
நன்றி : திரு. K. வெள்ளிங்கிரி.
இந்த இதழை மேலும்