ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குத் தீராத தலைவலி இருந்தது, ஊரிலுள்ள பல்வேறு புகழ்பெற்ற மருத்துவர்களை தனது வீட்டிற்கே வரவழைத்து சிகிச்சைப் பார்த்து வந்தார், ஆனாலும் வலி குறையவே இல்லை.
ஒருநாள் அந்த செல்வந்தர் வசித்த ஊருக்கு சன்னியாசி ஒருவர் வந்தார். செல்வந்தரின் பிரச்சனையை அறிந்து கொண்ட அவர், அவருக்கு மருத்துவம் பார்க்க அனுமதி கேட்டார். பின்னர் அந்த செல்வந்தருக்கு மருத்துவ சோதனை செய்தார். இப்போது அவரின் வலிக்கான காரணத்தைச் சொன்னார்.
உங்கள் கண்ணில் இருக்கும் நோய் தான் இந்த வலிக்கு காரணம். இந்த நோயைக் கட்டுப்படுத்திவிட்டால் உங்கள் வலி குணமாகிவிடும் என்று கூறினார். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார் செல்வந்தர்.
பெரிதாக ஒன்றும் செய்யத் தேவையில்லை, இனி நீங்கள் பார்க்கும் அத்துனை பொருட்களும் பச்சை நிறமாக இருக்க வேண்டும் என்று அறிவுரைக் கூறி கிளம்பினார். இந்த சன்னியாசியின் அறிவுரைப்படி அரண்மனை முழுவதும் பச்சை நிறத்தில் மாற்றினார் செல்வந்தர்.
தான் வெளியில் செல்லும் பொழுதும் கூட நான் பார்க்கும் அத்துனை பொருட்களும் ஆட்களும் பச்சை நிறத்தில் தெரிய வேண்டும் என்பதால் எப்போதும் பச்சை நிற வண்ணம் பூசுபவர்களை உடனே வைத்திருந்தார். செல்வந்தரைப் பார்க்க வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் மேல் பச்சை வண்ணம் பூசப்பட்ட பிறகு தான் அவரைப் பார்க்கவே அனுமதிப்பார்கள்.
அப்படி இருந்த சமயத்தில் தான் அந்த சன்னியாசி செல்வந்தரைப் பார்க்க வந்தார். வாசலிலே வண்ணம் பூசுபவர்கள், செல்வந்தர் இட்ட கட்டளையைச் சொல்லி அவர் மேலேயும் பூசினார்கள். பச்சை நிறத்துடன் செல்வந்தரைச் சந்தித்த சன்னயாசி. எதற்கு நீங்கள் இப்படி இவ்வளவு செலவிட்டு வண்ணத்தைப் பூசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றார், உடனே செல்வந்தர் நீங்கள் தானே இனி பார்க்கும் அனைத்தும் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள் என்றார் செல்வந்தர். அதற்கு அந்த சன்னியாசி இவ்வளவு செலவு செய்தற்கு ஒரு பச்சை நிறத்தில் கண்ணாடி அணிந்து கொண்டால் அனைத்தும் பச்சையாகவே இருக்குமே என்று சொன்னார், ஒரு கணம் அதிர்ந்தார் அந்த செல்வந்தர்.
இந்த செல்வந்தரைப் போல தன்னையும் தன் குணத்தையும் மாற்றிக் கொள்வதற்கு பதில், தன்னை சுற்றியுள்ளவர்களை மாற்றிக் கொள்ள விரும்புகிறார்கள், அவர்கள் மாறி விட்டால் நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும். நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும், அதன் மூலம் நல்ல குணங்களை வளர்த்து கொண்டு வாழ வேண்டும்.