புயலாய்…
மாளிகையை விடுத்து மண் குடிசையின்
மீதே தன்பலம் காட்டும்
அதிகாரவர்க்கமாய் ‘அசுரப்புயல்’ !
கண்ணுக்குத் தென்படாத தென்றல் காற்று நீ…
புயலாய் புறப்பட்டாலோ
புதுத்தடம் பூமியில் போட்டுவிடுகிறாய்…
கால்தடம் வலிமையாய் பதித்து விடுகிறாய்…
காதலியின் மொழியைப்போல்
காற்றின் மொழியும் தலையசைக்க வைக்கும் !
எப்போதும் உன் பேச்சுக்கு மறுப்பேதும் சொல்லாது
தப்பாமல் தலையசைக்கும் மரங்களின்
நேசத்தை மறந்தாய் ! மனதாபிமானம் துறந்தாய் !
பூமியை…புயலாய் ஒரு புறம் புரட்டிப்போட்டாய்
மழையாய் மறுபுறம் மிரட்டிப் பார்த்தாய் !
நீ கடந்தாலும்… நீர் வடிந்தாலும்…
கடந்திடாத எங்கள் கவலையோடும்…
வடிந்திடாத எங்கள் வருத்தத்தோடும்…
புதுவிடியலைத் தேடும் விழிகளோடு புறப்பட்டோம்…
கஜாவே நீ எதைச் சாய்த்தாலும் எம் நம்பிக்கை சாயவில்லை…
மதங்களை மறந்து மனிதத்தால் இணையும்
ஒற்றுமையின் பலத்தை உணர்த்தி விட்டாய்…
நீ சாய்த்த அதே மண்ணில் சாய்ந்து போன
மரங்களின் அருகில் முளைவிடும் புதுச்செடியாய்
தன்னம்பிக்கையோடு தழைக்கின்றோம்…
முனைவர். மா.இராமச்சந்திரன்,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
ஈரோடு- 52.
0 comments Posted in Online News